Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம்

Webdunia
சனி, 27 ஜூன் 2009 (17:01 IST)
இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம்

webdunia photoWD
கிங்ஸ்டனில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணி‌க்கு எ‌திராக 20 ரன்களில் வெற்றி பெற்றிருப்பது ஓரளவிற்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருப்பினும், இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம் வெட்ட வெளிச்சமான ஒரு நாளாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு கிரிக்கெட் ஆட்டங்கள் 20 ஓவர் கிரிக்கெட்டின் ஆதிக்கம் தொடங்கிய காலகட்டமாக இருப்பதால் பந்து வீச்சாளர்கள் விக்கெட் எடுப்பதில் முனைப்பு காட்டாமல் பேட்ஸ்மெனை (ரன்களை) கட்டுப்படுத்தும் முயற்சியில் வீழ்கின்றனர்.

20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மெனை கட்டுப்படுத்தினால் அவருக்கு அழுத்தம் அதிகமாகி தாறுமாறாக ஒரு ஷாட்டை ஆட முயற்சி செய்து ஆட்டமிழக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இந்த உத்தி ஒரு போதும் பயன் தராது.

நேற்று ஆஷிஷ் நெஹ்ராவும், ஆர்.பி.சிங்கும், இஷாந்த் ஷர்மாவும் இதனை புரிந்து கொள்ளாமல் பந்து வீசினர். அவர்கள் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் வெற்றியடையவில்லை.

PTI photographerPTI
ஆர்.பி.சிங் தொடர்ந்து கிறிஸ் கெய்லுக்கு அவரது ஆட்டத்திற்கு வாகான இடங்களில் பந்தை பிட்ச் செய்தார். பல்வேறு விதமான பந்துகளை வீசி, கறாரான ஃபீல்டிங் உத்திகள் மூலம் வீழ்த்தி அவுட் செய்ய வேண்டிய ஒருவருக்கு ரன்களை கட்டுப்படுத்தும் விதமாக பந்து வீசினால் அது சிறிது நேரம்தான் பலனளிக்கும்.

பிறகு அவர் நின்று விட்டால் மற்ற வீச்சாளர்களின் பந்தை பவுண்டரிகளாக விரட்டி அடிப்பார். நேற்று இது நடந்திருக்க வேண்டியது ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா கடைசியில் தைரியமாக ஒரு ஷாட்-பிட்ச் பந்தை வீசி கெய்லை வீழ்த்தினார்.

கெய்ல் ஆட்டமிழந்த பிறகும் மார்ட்டன், சர்வாண், சந்தர்பால் உள்ளிட்ட வீரர்களுக்கு அனுபவமிக்க ஹர்பஜன் கூட சரியாக வீசவில்லை. ரன் விகிதம் 25ஆவது ஓவர் முடிவில் கூட ஓவர் ஒன்றுக்கு 6 ரன்கள் என்ற விகிதத்தில் மேற்கிந்திய பேட்ஸ்மென்கள் கொண்டு சென்றனர்.

webdunia photoWD
ஒரு வழியாக அபாய ஆட்டக்காரர் பிராவோவை வீழ்த்தி விட்டோம் என்று இந்திய அணி இளைப்பாறிய தருணத்தில் சந்தர்பால் களமிறங்குகிறார். அப்போது அவரை கடுமையான நெருக்கடிக்குள்ளாக்காமல், யுவ்ராஜ் சிங்கிடம் பந்தை கொடுக்கிறார் தோனி. இரண்டு சிக்சர்களை விளாசிய அவர், அதற்கு அடுத்த இஷாந்த் ஓவரில் இரண்டு பவுண்டரிகளையும் அடிக்க, சந்தர்பால் களமிறங்கியபோது 188/4 என்று இருந்த மேற்கிந்திய அணி அடுத்த 4 ஓவர்களில் 36 ரன்களைக் குவித்து 224 ரன்களை எட்டியது.

இன்னமும் 15 ஓவர்கள் உள்ள நிலையில் வெற்றிக்கு தேவைப்படும் 116 ரன்களை மேற்கிந்திய அணி பெற்று விடும் என்பது போலவே பந்து வீச்சு இருந்தது.


PTI PhotoPTI
தோனியின் மிகப்பெரிய தவறு என்னவெனில் ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பகுதி நேர பந்து வீச்சாளர்களான யுவ்ராஜ், ஜடேஜா, யூசுஃப் பத்தான் ஆகியோரை பயன்படுத்துவதுதான்.

இவர்கள் மூவரும் வீசிய ஓவர்கள் 19; கொடுத்த ரன்கள் 124; கைப்பற்றிய விக்கெட்டுகள் 3 மட்டுமே. இஷாந்த் ஷர்மா இந்திய அணியில் ஒரு பந்து வீச்சாளர் என்ற முறையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு கொடுத்த ஓவர்கள் 5 மட்டுமே!

முன்னணி வீச்சாளர்களான ஆர்.பி.சிங் 7 ஓவர்களையும் ஆஷிஷ் நெஹ்ரா 7 ஓவர்களையும் வீசியுள்ளனர். இவர்களில் யாரேனும் இருவரை முழு 10 ஓவர்களை வீசச் செய்திருக்கவேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை.

மேலும் பிரவீன் குமார், பிராக்யன் ஓஜா ஆகியோரை உட்கார வைத்து விட்டு ரவிந்தர் ஜடேஜாவை தொடர்ந்து அணியில் எடுக்கும் உத்தி புரியாத புதிராக உள்ளது.

உண்மையில் பிரவீன் குமார், ஆஷிஷ் நெஹ்ரா அல்லது ஆர்.பி.சிங், இஷாந்த் ஷர்மா, ஹர்பஜன் சிங், பிராக்யன் ஓஜா என்றே பந்து வீச்சு வரிசை இருக்கவேண்டும்.

யூசுஃப் பத்தான், ஜடேஜா, யுவ்ராஜ் சிங் ஆகியோரை விக்கெட்டே விழாத தருணங்களில் ஒரு குருட்டு அதிர்ஷ்ட வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும். நேற்று இலக்கு 339 ரன்களாக இருந்ததனால் இந்தியா பிழைத்தது.

PTI photographerPTI
பேட்டிங்கிலும் சரியாக ஆடாமல் இலக்கு 250 அல்லது 260 ரன்களாக இருந்திருந்தால் மேற்கிந்திய அணி வெற்றியை நிச்சயம் ருசித்திருக்கும்.

5 பலமான பந்து வீச்சாளர்கள், கம்பீர், கார்த்திக், ரோஹித்/பத்ரி நாத், யுவ்ராஜ், தோனி, யூசுஃப் பத்தான், ஹர்பஜன், பிரவீண் குமார் ஆகிய பேட்ஸ்மென்கள் என்று அணிச் சேர்க்கை இருக்கவேண்டும்.

சுத்தமாக புல் மழிக்கப்பட்ட பொழுதுபோக்கு கிரிக்கெட் ஆட்டத்திற்காக இன்றைய தினங்களில் அமைக்கப்படும் களத்தில், நாம் முழு நேர பந்து வீச்சாளர்களை நம்பியே களமிறங்கவேண்டும். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால் யுவ்ராஜ், யூசுஃப், ரோஹித் போன்றவர்களை வீச அழைக்கலாம்.

ஸ்டீவ் வாஹ் போன்றவர்களின் அணித் தலைமையை நாம் நன்றாக கவனித்தோமானால் இது தெரியும். எப்போதும் பகுதி நேர வீச்சாளர்களை அவர் நம்பிப் பயன்படுத்த மாட்டார்.

பிரட் லீ ரன்கள் கொடுத்தாலும் அவர் தன் 10 ஓவர்களை வீசி முடிக்கவேண்டும். ஏனெனில் அப்போதுதான் பிரட் லீ அணியில் இடம்பெற்றிருப்பதற்கான நோக்கத்தை அவருக்கு தெரிவிக்க முடியும். இதுதான் சிறந்த அணுகுமுறை. பிரட் லீயும் தன் பொறுப்புகளை உணர்வார்.

மாறாக இஷாந்த், நெஹ்ரா, ஆர்.பி.சிங் ஆகியோரது முழு ஓவர்களை வீச விடாமல் பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினால் நெருக்கடியான தருணங்களில் வீசி அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் சொந்த பொறுப்பு அவர்களுக்கு எப்படி வரும்?

' தோனி இருக்கிறார் நாம் ரன்கள் கொடுத்தால் நம் ஓவரை 'கட்' செய்து நம்மை காப்பாற்றுவார்' என்ற ஒரு விதமான தவறான நம்பிக்கைதான் அவர்களுக்கு ஏற்படும்.

அதே போல் தோனியின் பேட்டிங் பற்றி ஓரிரு வார்த்தைகள் கூற வேண்டும். அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் பவுண்டரிகள், சிக்சர்களை விட ஒன்று, இரன்டு என்று ரன்களை குவிப்பதில்தான் திறமை உள்ளது என்று கூறுகிறார். மிகவும் சரியான வாதம். ஒப்புக் கொள்வோம் ஆனால் இந்த முன் முடிவின் அடிப்படையில் பவுண்டரிகளை விளாச வேண்டிய பந்துகளையும் ஒன்று இரண்டு என்று எடுப்பது சரியான அணுகுமுறை அல்ல.

PTI photographerPTI
தோனி ஆடுவது ஏதோ அவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் பவுண்டரி அடிக்கலாம் என்பது போல் உள்ளது. பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துகளை பவுண்டரி அடித்து விட்டு அதன் பிறகு ஒன்று, இரண்டு என்று ரன்களை சேர்க்கலாம்.

ஒரு நாள் ஆட்டங்களில் 'கிங்' என்று அழைக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய வீரர் மைக்கேல் பெவன் மீது கடைசி காலத்தில் எழுந்த குற்றச்சாட்டு என்னவெனில் 'அவருக்கு பவுண்டரிகள் அடிக்கும் திறன் மழுங்கிவிட்டது' என்பதே. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் அணியிலிருந்து நீக்கப்படும்போதும் ஒரு நாள் போட்டிகளில் அவரது சராசரி 50 ரன்களுக்கும் மேல் என்பது குறிப்பிடத் தக்கது.

இவையெல்லாம் பற்றி தோனி சிந்திக்க வேண்டும். வெற்றி பெற்றோம் என்பது முக்கியமல்ல, அந்த வெற்றியை எப்படிப் பெற்றோம் என்பதே அணித் தலைவரின் ஆய்வுக்குரியது.

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Show comments