சர்வதேச கிரிக்கெட் பேரவை முதன் முதலாக நடத்திய இருபதுக்கு20 உலகக் கோப்பபையை மகேந்திர சிங் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி வென்றுள்ளது மதிப்பு வாய்ந்த, பெருமைக்குரிய வெற்றியாகும்!
இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரலில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் பேசப்பட்ட இந்திய அணி, முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் ஏமாற்றத்திற்குள்ளான நமது நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வெற்றி மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது மட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அதன் தரத்தில் குறைந்துவிடவில்லை என்பதையும் நிரூபித்துள்ளது.
உலகத்தின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட கிரெக் சாப்பலை பயிற்சியாளராகவும், உலக அளவில் தலைசிறந்த வீரர்கள் சிலரை கொண்டதாகவும் கருதப்பட்ட இந்திய அணி அன்று தோற்றது. பந்து வீச்சிற்கும், ஃபீல்டிங்கிற்கும் இந்திய முன்னாள் வீரர்களை பயிற்சியாளர்களாகக் கொண்ட இந்த அணி கோப்பையை வென்றுள்ளதுதான் குறிப்பிடத்தக்கதாகும்.
இறுதியில் மட்டுமல்ல, அதற்கு முந்தைய 3 போட்டிகளிலும் இந்த இளம் அணி மிகச் சிறப்பாக ஆடியதே அதன் திறனிற்கு அத்தாட்சியாகும். அபாரமாக ஆடி இங்கிலாந்து அணிக்கு எதிராக 218 ரன்கள் குவித்ததும், தென் ஆப்ரிக்க அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததும், உலகின் தலைசிறந்த அணியான ஆஸ்ட்ரேலியாவை அரையிறுதியில் சிறப்பாக விளையாடி தோற்கடித்ததும், இருபதுக்கு20 உலகக் கோப்பையை வெல்வதற்குரிய தகுதியனைத்தும் தங்களுக்கு உள்ளது என்பதனை நன்கு நிரூபித்த பின்னரே இறுதியில் களமிறங்கியது இந்திய அணி.
அதனால்தான், ஆட்டத்தின் இறுதிகட்டத்தில் ஏற்பட்ட இழுபறி சூழ்நிலையிலும், விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சிறப்பாக விளையாடிய பாகிஸ்தானை மிகக் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி.