Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகந்தையை அடக்கு வாய் தோனி!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (14:30 IST)
‘வெற்றிபெற்றவர் சொல்வதெல்லாம் வேதவாக்க ு ’ என்ற நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது. விளையாட்டு, அரசியல், கலைத்துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் வெற்றிபெற்றவர்கள் எதையாவது கூறினால் அது ஏதோ புனிதமான உண்மைகள் போல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய கிரிக்கெட்டில் சீனியர்-ஜூனியர் பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளன.

webdunia photoFILE
ஆம்! இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கோப்பையை வென்றது, சி.பி.தொடர் ஒரு நாள் முத்தரப்பில் சாம்பியன் பட்டம் வென்றது இவையெல்லாம், தான்(!) இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்ததனால்தான் என்றும், விமர்சகர்களை இந்த வெற்றிகள் வாயடைத்துள்ளன என்றும், இதன் மூலம் மூத்த வீரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தான் அறிவித்திருப்பதாகவும், "திருவாளர் தோனி அவர்கள்" சமீபமாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

1983 இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் இணையில்லா தலைவர் கபில் தேவ் வெற்றி குறித்து கூறுகையில் "கடவுளின் ஆணையால்" என்றார். அவர் எந்தவித அகந்தையையும் வெளிப்படுத்தவில்லை.

webdunia photoFILE
தோனி இது போன்று கூறியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத் பவாரை எரிச்சலடையச் செய்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் நேற்று நீண்ட பேட்டி ஒன்றை அளிக்கையில், சச்சின் ஆலோசனைப்படிதான் தோனி ஒரு நாள் அணித் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்றும், இருபதுக்கு 20 உலகக் கோப்பை முதல் தற்போது சி.பி.தொடர் ஒரு நாள் அணியில் இளம் வீரர்களை சேர்ப்பதே முறை என்று சச்சின் டெண்டுல்கர்தான் தீவிரம் காட்டினார் என்றும் தோனிக்கு ஒரு அடி கொடுத்திருந்தார்.

மூத்த வீரர்கள் குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் கூறும் அளவிற்கு தோனி வளர்ந்துள்ளாரா என்பதே நமது கேள்வி. ஒரு காலத்தில் இதுபோன்று வெளிப்படையாக பேசிவிட முடியாது. தமிழக வீரர் டி.இ. ஸ்ரீனிவாசன் தனது முதல் டெஸ்டில் சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை வெளிப்படையாக விமர்சித்து அணியிலிருந்தே காணாமல் போனதை நாம் அறிவோம்.

இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை என்பது ஆரோக்கியமானது என்றாலும், இளம் வீரரான தோனி கருத்துக்களை கூறும்போது அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லது. ஏனெனில் அன்றைய சூழ்நிலை இன்றும் இருந்திருந்தால், தோனியின் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியாகியிருக்கும். ஆனால் இவர் விமர்சிக்கும் இன்றைய மூத்த வீரர்களான சச்சின், திராவிட், கங்கூலி, அனில் கும்ப்ளே ஆகியோர் கவாஸ்கர் அளவிற்கு கர்வம் இல்லாதவர்கள் என்பதால் இந்த கருத்துகளுக்குப் பிறகும் தோனி அணியில் நீடிக்க முடிகிறது.

தோனியை அறிமுகம் செய்ததும் அவரை அணியில் வைத்து பாதுகாத்ததும் மூத்த வீரர்களே. தோனி மட்டுமல்ல. விரேந்திர சேவாக் என்ற வீரரை நமக்கெல்லாம் அடையாளம் காட்டியதே சவ்ரவ் கங்கூலி என்ற மூத்த வீரர்தான். ராபின் உத்தப்பாவை அடையாளம் காட்டியது ராகுல் திராவிட். ரோஹித் ஷர்மாவை அடையாளம் காட்டியது சச்சின். யுவ்ராஜ், கயிஃப், காம்பீர் என்று அனைத்து இளம் வீரர்களையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வழிகாட்டி வந்தது மூத்த வீரர்களே என்பதை தோனி அறிவாரா?

இந்த விஷயத்தில் மட்டுமல்ல, களத்தில் ஒருகுறிப்பிட்ட சூழ்நிலையில் தான் பத்தானிடம் இதை கூறினேன், இஷாந்த் ஷர்மாவிடம் இதைக் கூறினேன், ஷர்மாவிடம் அதைக் கூறினேன் என்று தனது மகாத்மியங்களை ஊடகங்களுக்கு தோனி வெளிப்படுத்துவது சரியில்லை. ஏனெனில் இது அந்தந்த வீரர்கள் ஏதோ தன்னம்பிக்கை இல்லாதவர்கள் போலும், இவர்தான் அவர்களை ஊக்குவித்து ஆடச் செய்வது போலவும் ஒரு மாயையை ஊடகங்கள் மூலம் ஏற்படுத்துகிறது.

இவ்வாறு அவர் தொடர்ந்து செய்து வந்தால் தான் எந்த இளம் வீரர்களை காக்கிறேன் என்று கூறிக்கொள்கிறாரோ அவர்களே விரைவில் இவர் மீது எரிச்சலடையக்கூடும். இதனால் தோனியின் கிரிக்கெட் வாழ்வே பாதிக்கப்படலாம்.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை எடுத்துக் கொண்டால், சச்சின், திராவிட், கங்கூலி, சேவாக், லக்ஷ்மண் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அபாரமான ஆக்ரோஷமான ஆட்டமே சி.பி.தொடர் வெற்றிக்கான சிறந்த முன் நிகழ்வாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. மேலும் சிட்னி டெஸ்ட் சர்ச்சைகளுக்கு பிறகு ஆஸ்ட்ரேலிய கோட்டையை பெர்த்தில் தகர்த்ததே தோனி பின்பு பெருமையடித்துக் கொள்ளும் வெற்றிக்கு பலமான அடித் தளமாக அமைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங், கங்கூலி, இர்பான் பத்தான் ஆகியோர் பேட்டிங்கில் இக்கட்டான தருணங்களில் காட்டிய திறமையை தோனி காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிலும் இறுதிப் போட்டிகள் இரண்டிலும் சச்சின் தான் யார் என்று காட்டியதாலும், பந்து வீச்சாளர்களின் அபாரமான மனோபலத்தாலும் வெற்றி பெற்றோம். அணியில் இளம் பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவதற்கு தோனி எந்த விதத்திலும் பெருமை அடைந்து விட முடியாது. ஏனெனில் எம்.ஆர்.எஃப் வேகப்பந்து பயிற்சிக் கழகத்தில் உள்ள டி.ஏ.சேகர் பரிந்துரை செய்யாமலும், அந்த வீச்சாளர்கள் ஆடும் உள் நாட்டுக் கிரிக்கெட்டில் திறமை காட்டாமலும் இந்திய அணியில் இடம்பெற்றுவிட முடியாது.

பிரவீண் குமார், இஷாந்த் ஷர்மா அணியில் இடம்பெறுகிறார்கள் என்றால் அவர்கள் இந்திய அணியின் மூத்த வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசி திறமையை நிரூபிக்காமல் அணிக்குள் நுழைய முடியாது. இதுவே நிலைமை. மூத்த வீரர்களின் துல்லியமான கணிப்பின்றி தோனியே அணிக்குள் வந்திருக்க முடியாது.

தோனி ஏன் வாயை அடக்கவேண்டுமென்றால், நாளை இதே இளம் அணி மண்ணைக் கவ்வலாம். அப்போது மீண்டும் இதே சீனியர்-ஜூனியர் பிரச்சனை எழும், அப்போது இவர் இன்று கூறிய கருத்துக்கள் எள்ளி நகையாடப்படும். ஊடகங்களை நம்பி ஒன்றைக் கூறுவது பாம்பின் தவறான முனையை கையில் பிடிப்பதற்கு சமம்.

வெள்ளித்திரை என்று ஒரு படம் வந்துள்ளது. அதில் கதாநாயகனாக வெற்றியடையும் திலீப் காந்தாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் ஒரு காட்சியில், பேட்டி காணும் சொர்ணமால்யா, "நீங்கள் சினிமாவிற்கு வராமல் இருந்தால் என்ன ஆகியிருப்பீர்கள்?" என்று கேட்பார்.

இதற்கு பதிலளிக்கும் நாயகன் திலிப் காந்த் : "நான் சினிமாவிற்கு வராமல் இருந்திருந்தால் சினிமா என்னாகியிருக்கும் என்று நீங்கள் யோசியுங்கள்" என்பார்.

இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் பிருதிவிராஜ், படுகோபமடைந்து "அந்த டிவியை முதலில் அணை. வெற்றியடைஞ்சுட்டா என்னவேணா பேசலாம்னு ஆயிடுச்சு" என்பார்.

தோனியின் சமீபத்திய பேச்சுக்களுக்கும் நமது பதில் இதுவாகத்தான் இருக்கும்.

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

ரிஷப் பண்ட் உடனடியாக இதை செய்யவேண்டும்… சேவாக் அட்வைஸ்!

Show comments