Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை அறிந்தால் படத்தை நீங்கள் பார்ப்பதற்கான ஐந்து காரணங்கள்

ஜே.பி.ஆர்
புதன், 4 பிப்ரவரி 2015 (10:58 IST)
அஜீத் ரசிகர்கள் யார் என்ன செய்கிறார்கள் அஜீத் படம் வெளியாகாத போது அவர்களின் நடவடிக்கை என்ன... எதுவும் தெரியாது. ஆனால், அஜீத் படம் வெளியானால் எங்கிருந்து கிளம்புவார்களோ, முதல் மூன்று தினங்கள் திரையரங்குகள் நிரம்பி வழியும். அஜீத்தை இன்னும் ஓபனிங் கிங்காக வைத்திருப்பவர்கள் இவர்கள்தான்.
என்னை அறிந்தால் நாளை வெளியாகவிருக்கும் நிலையில், படத்தை நீங்கள் பார்த்தேயாக வேண்டியதற்கான ஐந்து காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
 
5. அருண் விஜய்யின் வில்லன் கதாபாத்திரம். பொதுவாக பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகரைத்தான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள். இதில், ஹீரோவாக நடித்துவரும் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார் கௌதம். இந்தத் தேர்வே, படத்தில் வருவது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பதை உணர்த்துகிறது. அதற்கேற்ப சிக்ஸ்பேக் வைத்து நாயகனின் நண்பனாக வருகிறார் அருண் விஜய். அவர் ஏன், எப்படி எதிரியாகிறார்? இந்தக் கேள்விகள் உங்களை நிச்சயம் சீட் நுனியில் உட்கார வைக்கும்.

4. கௌதம், ஹாரிஸ் ஜெயராஜின் கூட்டணி. மின்னலேயில் அறிமுகமான இந்தக் கூட்டணி தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய இசை பங்களிப்பை ஆற்றியுள்ளது. அவர்கள் பிரிந்துபோனது துரதிர்ஷ்டம். இனி ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்று நினைத்தவர்களை என்னை அறிந்தால் ஒன்றிணைத்துள்ளது. படத்தில் இடம்பெறும் ஆறு பாடல்களும் செவிக்கின்பம் தருபவை. அதாரு உதாரு பாடலுக்கு ஆட்டம்போட ரசிகர்கள் எப்போதோ தயார். என்னை அறிந்தாலின் வெற்றியில் இசையின் பங்களிப்பு கணிசமாக இருக்கப் போகிறது.
3. படத்தின் கதை. என்னை அறிந்தால் படத்தின் கதை என்று அரை டஜன் கதைகள் இன்டஸ்ட்ரியில் உலவுகின்றன. அஜீத் அண்டர்கவர் காப். அவரது நண்பன் அருண் விஜய் ஒரு கேங்ஸ்டர். அந்த நிழல் உலகிலிருந்து விலக அருண் விஜய் அஜீத்தின் உதவியை நாடுகிறார். அது அருண் விஜய்யை வில்லங்கத்தில் மாட்டிவிட, அவர் பழிக்குப் பழியாக அஜீத்தின் குழந்தையை கடத்தப் பார்ப்பதாகவும், அஜீத் அதனை முறியடிப்பதாகவும் கதை பின்னப்பட்டுள்ளதாக தகவல். ஆனால் அதுதான் கதையா என்பது உறுதியில்லை.

ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா படத்தின் கிளைமாக்ஸை எப்படி அமைப்பது என்பதில் கௌதமுக்கு உதவியிருக்கிறார். மேலும், கதை நன்றாக உள்ளது, இப்படியே எடுங்கள் என்று அவர் கூறியதாக கௌதம் தெரிவித்திருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது.

2. கௌதமின் இயக்கம். அஜீத் ரசிகர்களை பொறுத்தவரை அவர் நடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. பின்னணி இசையுடன் திரையில் நடந்து வந்தால் போதும். விசிலடித்தே போட்ட பட்ஜெட்டில் முக்கால்வாசியை தந்துவிடுவார்கள். அந்த தைரியத்தில்தான் பில்லா 2, வீரம் போன்ற படங்களை சக்ரி டோலட்டி, சிவா போன்றவர்கள் எடுக்கிறார்கள், தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்கள், ரசிகர்கள் பார்க்கிறார்கள். கௌதம் அப்படியல்ல.

தனக்கென்று தனி ஸ்டைல் உடையவர். ஸ்டைலிஷான மேக்கிங் அவருக்கு கைவந்த கலை. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்கள் அந்த நடிகர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் இல்லாமல் கௌதமின் கிரியேடிவிட்டியுடன் இருந்ததே அதற்கு சான்று. என்னை அறிந்தால் படத்திலும் அந்த முத்திரைதான் மற்ற அஜீத் படங்களிலிருந்து அதனை வேறுபடுத்தி காட்ட இருக்கிறது.
1. முதலிடம் வேறு யாருக்கு, அஜீத்துக்குதான். வெள்ளை தலைமுடியுடன் கோட் அணிந்து கெக்கே பிக்கே என்று ஆடிய வீரம் படத்தையே ரசிகர்கள் விழுந்து விழுந்து ரசித்தார்கள். இதில் இளமையான ஸ்டைலிஷான அஜீத். தாடியுடன் கரடுமுரடான கெட்டப், தாடி இல்லாமல் கறுத்த தலைமுடி மீசையுடன் ஒரு அமுல்பேபி லுக், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மீசையில்லாமல் ஒரு அதிரடி தோற்றம். ரசிகர்கள் வலிக்க வலிக்க விசிலடித்தே ஓயப்போகிறார்கள். 
 
என்னை அறிந்தால் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டியதற்கு இதற்கு மேல் காரணங்கள் வேண்டுமா என்ன.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டெல்லி கணேஷ் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை, விஜய் இரங்கல்..!

டீசர்லாம் மாஸ்தான்.. ஆனா கதை? தப்பிப்பாரா சங்கர்? - கேம் சேஞ்சர் டீசர் ரியாக்‌ஷன்!

முடிஞ்சா உன் ஆளை காப்பாத்திக்கோ..! சல்மான்கானுக்கு சவால் விட்ட பிஷ்னோய் கும்பல்!

சிவகார்த்திகேயனுக்கு புதிய வசூல் உச்சத்தை கொடுத்த ‘அமரன்’ - 10 நாள் கலெக்‌ஷன் இவ்வளவா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 8: இந்த வாரம் வெளியேறிய பெண் போட்டியாளர் இவரா?

Show comments