Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விசாரணை ஆஸ்கர் வெல்லுமா? - ஓர் அலசல்

விசாரணை ஆஸ்கர் வெல்லுமா? - ஓர் அலசல்

விசாரணை ஆஸ்கர் வெல்லுமா? - ஓர் அலசல்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (10:22 IST)
2017 ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்ப்பில் விசாரணை தேர்வாகியுள்ளது. ஆஸ்கர் விருதுப் போட்டியில் ஆங்கிலத்தில் தயாராகி அமெரிக்காவில் வெளியாகும் படங்கள் மட்டுமே போட்டியிட முடியும். அதற்கு சில விதிமுறைகள் உண்டு.


 


சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவில் மட்டும் அயல்மொழி சினிமாக்கள் சேர்த்துக் கொள்ளப்படும். இந்தப் பிரிவில் போட்டியிட உலகில் படம் தயாரிக்கும் நாடுகள் தங்கள் நாடுகளில் வெளியான சிறந்தப் படங்களை தேர்வு செய்து அனுப்பும். இந்தியாவும் வருடாவருடம் படங்களை தேர்வு செய்து அனுப்புகிறது.
 
பெரும்பாலும் இந்தியாவில் தயாரான மூன்றாந்தர கமர்ஷியல் படங்களே இந்தியா சார்பில் போட்டிக்கு அனுப்பப்படும். இந்தமுறை தேர்வுக்குழு தலைவர் கேத்தன் மேத்தா என்பதால் விசாரணை தேர்வாகியுள்ளது. இல்லையெனில் சல்மான் கானின் சுல்தானை அனுப்பியிருப்பார்கள்.
 
இதற்கு முன் தமிழில் வெளியான சில படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டுள்ளன. திரிலோகசந்தர் இயக்கத்தில் சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து 1969 -இல் வெளியான தெய்வமகன்தான் இந்தியா சார்பில் ஆஸ்கருக்குப் போன முதல் தமிழ்ப் படம். தெய்வமகனில் மூன்று வேடங்களில் நடித்தது ஒரே ஆள் இல்லை என்று ஆஸ்கர் கமிட்டி குழம்பிப் போனதால் தெய்வமகனுக்கு விருது கிடைக்கவில்லை என்றொரு கருத்து இப்போதும் நிலவுகிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில் சிறந்தப் படங்களுக்கே விருது தருகிறார்கள், நடிகருக்கு அல்ல.
 
1987 -இல் மணிரத்னத்தின் நாயகன் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. ஹாலிவுட்டில் தயாரான காட்பாதர் படத்தின் அப்பட்டமான தழுவலான இந்தப் படம் ஆஸ்கர் வெல்லவில்லை. அதன் பிறகு மணிரத்னத்தின் அஞ்சலி 1990ஆம் ஆண்டு அனுப்பப்பட்டது. 1992-இல் கமல் நடித்த தேவர் மகன், 1995 -ஆம் ஆண்டு கமலின் குருதிப்புனல், 1996 -இல் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன், 1998 -இல் ஷங்கரின் ஜீன்ஸ், 2000 -இல் கமலின் ஹேராம். 
 
இதுவரை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படங்களில் மணிரத்னத்தின் படங்கள் இரண்டு, ஷங்கரின் படங்கள் இரண்டு, நடிகர் என்று பார்த்தால் கமலின் படங்கள் ஐந்து. அதில் ஹேராம் அவரே இயக்கியது. இந்திய அளவிலும் கமலின் படங்களே அதிகம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால்தான் ஆஸ்கர் வெல்லாமலே அவரது ரசிகர்கள் அவரை ஆஸ்கர் நாயகன் என்கிறார்கள்.
 
ஜீன்ஸ் படத்தை போட்டிக்கு அனுப்பியதிலிருந்து ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படங்களின் தரத்தை தெரிந்து கொள்ளலாம். மேலே உள்ள பட்டியலில் குருதிப்புனலும், ஹேராமும் மட்டுமே ஓரளவு தேறக்கூடியவை. மற்றவை முழுமையான வணிக சினிமாக்கள்.
 
இவற்றுடன் ஒப்பிடுகையில் விசாரணை மிகப்பொருத்தமான படம். நவீன திரைமொழியில் சர்வதேச பார்வையாளர்களை கவரும் கதையும், கதாபாத்திரங்களும், காட்சிகளும் கொண்டவை. வெளிநாடு ஒன்றின் அரசியல் சிஸ்டம் மோசமான வன்முறைகளால் நிறைந்திருப்பதை வெளிச்சமிட்டுகாட்ட அமெரிக்கா எப்போதுமே ஆர்வம் காட்டும். அந்த கூடுதல் தகுதியும் விசாரணைக்கு உள்ளது.
 
விசாரணையுடன் போட்டியிடும் பிற படங்களை வைத்தே எதையும் கூற முடியும் என்றாலும் இதுவரை இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படங்களை வைத்துப் பார்க்கையில், ஆஸ்கர் வெல்ல விசாரணைக்கு அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’திரையுலகில் சர்ச்சை’ - இயக்குனர் பாலாவிற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!