Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவில் சம்பளம் தராத இயக்குனர்கள் - மிஷ்கின், பாலா மற்றும் பலர்

தமிழ் சினிமாவில் சம்பளம் தராத இயக்குனர்கள் - மிஷ்கின், பாலா மற்றும் பலர்

தமிழ் சினிமாவில் சம்பளம் தராத இயக்குனர்கள் - மிஷ்கின், பாலா மற்றும் பலர்
, செவ்வாய், 31 மே 2016 (14:00 IST)
தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்று, சம்பளம்.


 


வியாபாரம் உள்ள நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அவர்களின் தகுதிக்கு மீறிய சம்பளத்தை தர தயங்காதவர்கள் உதவி இயக்குனர்கள் போன்றவர்களுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியத்தில் ஒரு சதவீதத்தைகூட தர முன்வருவதில்லை.

அறம், உழைப்பு, உன்னதம், கலை, மக்கள் என்று தொண்டை கிழிக்கும் இயக்குனர்கள்தான் இதுபோன்ற சின்னச் செயல்களில் முன்னணியில் இருக்கிறார்கள்.
 
வாயை திறந்தால் மக்கள் உரிமை என்று முழக்கமிடும் தங்கர் பச்சான் தனது உதவி இயக்குனர்களுக்கு சரிவர சம்பளம் தருவதில்லை. தயாரிப்பாளர் உதவி இயக்குனர்களுக்கு நிர்ணயிக்கும் சம்பளத்திலும் கணிசமான பகுதியை தங்கர் எடுத்துக் கொள்வார். 
 
இயக்குனர் சேரன் தனது படத்தை தயாரிக்கவே ஆளில்லாத நிலையில், ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை படத்தை தயாரித்தார். கொல்கத்தாவில் நடந்த படப்பிடிப்பில், அங்குள்ள கலைஞர்களும் கலந்து கொண்டனர். 
 
அவர்களுக்கு பைசா பாக்கியில்லாமல் சம்பளத்தை செட்டில் செய்தவர் தமிழகத்திலிருந்து அழைத்து செல்லப்பட்ட கலைஞர்களுக்கு இன்றுவரை பாக்கி வைத்துள்ளார். உதவி இயக்குனர்கள் நிலைபற்றி சொல்ல வேண்டியதில்லை. 
 
காசு கேட்கும் போதெல்லாம், நான் எவ்ளோ பெரிய விஷயத்துக்காக போராடிகிட்டிருக்கேன். அது தெரியாம காசு கேட்கிறீங்களே என்று உதவி இயக்குனர்களை அர்ச்சித்திருக்கிறார். சினிமா டூ ஹோம் என்ற சேரனின் செல்லுபடியாகாத திட்டத்தைதான் அவர் போராட்டம் என்று வர்ணித்தது. நீங்க போராடுறதுக்காக மத்தவன் கூலியில்லாமல் வேலை பார்க்கணுமா என்ன.
 
மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வேலை பார்த்த உதவி இயக்குனர் இதுபோன்ற குற்றச்சாட்டை இணையத்தில் முன் வைத்துள்ளார். அவர் பெயர் ஸ்ரீகணேஷ்.
 
"ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரியது. அந்த படத்தின் கதை ஆரம்பத்திலிருந்து, Pre production, பல பொருளாதார நெருக்கடிகளில் நடந்த படப்பிடிப்பு, எல்லாவற்றிலும் உதவி இயக்குநர்கள் இரவு பகலாக உழைத்தோம். நரேஷ், பாலாஜி, சீனிவாசன் மூவரும் கதை விவாதத்தில் நிறைய பங்கெடுத்தனர். நரேஷ் வேலைப்பளுவால் ஆஸ்பத்திரியில் 1 வாரம் கிடந்தார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைக்கதையை மிஷ்னின் எழுத, முழுக்க தமிழில் தட்டச்சு செய்தது நான்.
 
படம் ரிலீஸுக்கு பின் நடந்த வெற்றி விழாக்கள் துவங்கி இந்த திரைக்கதை புத்தக வெளியீட்டு விழா வரை எங்கள் யாருக்குமே அழைப்பு இல்லை (சம்பளம் தரவில்லை என்பது தனிக்கதை). கமர்ஷியல் சினிமா என்றாலும் மாற்று சினிமா என்றாலும் வண்ண விளக்குகளுக்கு பின் சினிமாவில் உதவி இயக்குநர்கள் போன்ற உதிரி தொழிலாளர்களின் நிலை இது தான்" என்று ஸ்ரீ கணேஷ் வருத்தப்பட்டிருக்கிறார்.
 
இந்த பஞ்சாயத்து நிலுவையில் இருக்கையில், நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத் திறனாளி பெண், ஒன்பது மாதங்கள் பாலா படத்தில் பணிபுரிந்ததற்கு அவர் சம்பளமே தரலை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். வாட்ஸ் அப்பில் அப்பெண் சாந்தியின் வீரியோ வைரலாகி வருகிறது. தற்போது பிச்சை எடுத்து ஜீவனம் நடத்திவரும் சாந்தியின் குற்றச்சாட்டுக்கு இன்னும் பதில் வரவில்லை.
 
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியே என் தோள் ஒடிஞ்சுப் போச்சி என்று கதைவிடும் அறச்சீற்ற இயக்குனர்கள்தான் இப்படி அடிமட்டத்தில் உள்ளவர்களின் வயிற்றில் கை வைக்கிறார்கள். கலையே சரணம் என்று சாஷ்டாங்கமாக கிடக்கும் வசந்தபாலன் தனது உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தையில் திட்டுவதைப் பார்த்தால் யாருக்கும் குமட்டிக் கொண்டு வரும். 
 
கலைக்காகவே உயிர் வளர்ப்பதாக நாடகமாடும் இவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தணிக்கை தேவையா...?