Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எரிகிற வீட்டில் பிடுங்க நினைக்கும் 'புலி' ஸ்ரீதேவி

எரிகிற வீட்டில் பிடுங்க நினைக்கும் 'புலி' ஸ்ரீதேவி

ஜே.பி.ஆர்.

, புதன், 11 நவம்பர் 2015 (10:16 IST)
புலி படத்தில் நடித்ததற்கான சம்பள பாக்கி 50 லட்சத்தை பெற்றுத் தாருங்கள் என்று நடிகை ஸ்ரீதேவி மும்பை தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அந்த புகாரை அனுப்பியுள்ளனர்.


 
 
"புலி படக்குழு என்னை ராணியாக பார்த்துக் கொண்டது" என்று ஸ்ரீதேவியும், "ஸ்ரீதேவி புலி படத்துக்கு பலமாக இருந்தார், சிறப்பான முறையில் ஒத்துழைப்பு தந்தார்" என புலி படக்குழுவும் பரஸ்பரம் பாராட்டியிருந்த நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இதன் பின்னணியில் நடந்தது என்ன?
 
புலி படத்துக்காக ஸ்ரீதேவியை அணுகிய போது அவர் சம்பளமாக பெரும் தொகை கேட்டுள்ளார். பிறகு அவரிடம் பேசி, 2.7 கோடிகள் சம்பளம் என்று நிர்ணயித்தார்கள். அது போதாது, சர்வீஸ் டாக்ஸ் 30 லட்சத்தையும் நீங்கள்தான் கட்ட வேண்டும் என்று ஸ்ரீதேவி கூற, அதற்கும் சம்மதித்தனர். ஆக மொத்தம் புலியில் ஸ்ரீதேவியின் சம்பளம் மட்டும் 3 கோடிகள்.
 
புலி சரித்திரம் சார்ந்த கதை என்பதால் ஒன்றுக்கு மூன்று காஸ்ட்யூம் டிஸைனர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஸ்ரீதேவி அவர்கள் மூவரையும் நிராகரித்து, மும்பையிலிருந்து மனிஷ் மல்ஹோத்ரா வந்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிக்க, பெரும் சம்பளம் தந்து ஸ்ரீதேவிக்காக மனிஷ் மல்ஹோத்ராவை ஒப்பந்தம் செய்தனர். அவருக்கான சம்பளம் மற்றும் செலவுகள் மட்டும் 50 லட்சங்கள்.
 
புலியை தெலுங்கு, இந்தியில் வெளியிடப் போவதை அறிந்ததும் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மேலும் பல கோடிகள் கேட்டிருக்கிறார். டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம். அதில் நடிகர்கள் பங்கு கேட்க முடியாது என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதை போனி கபூர் ஏற்கவில்லை. பணம் தராவிட்டால் ஸ்ரீதேவி நடிக்க வரமாட்டார் என கூற, படப்பிடிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக அதற்கும் ஒப்புக் கொண்டனர். அதன்படி தெலுங்கு டப்பிங்கின் போது 15 லட்சம் ஸ்ரீதேவிக்கு தரப்பட்டது. இந்திப் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் 20 சதவீதத்தையும் போனி கபூர் வாங்கியுள்ளார். அது மட்டும் 55 லட்சங்கள்.
 
2.7 கோடிகள் சம்பளம் பேசப்பட்ட ஸ்ரீதேவி வரியாக முப்பது லட்சம், தெலுங்கு டப்பிங்கிற்கு பதினைந்து லட்சம், இந்தி டப்பிங்குக்காக 55 லட்சங்கள் என்று கிடைத்தவரை சுருட்டினார். ஸ்ரீதேவிக்கு இந்தியில் மார்க்கெட் உள்ளது, இந்தியில் புலியை வெளியிட்டால் கோடிகள் அள்ளலாம் என்று போனி கபூர் சொன்னதையடுத்து, புலியை இந்தியில் வெளியிட்டனர். அதற்காக நியமித்த புரொடக்ஷன் டிஸைனருக்கான சம்பளம் எட்டு லட்சங்கள். இந்தியில் படத்தை வெளியிட ஒரு கோடி ரூபாய். இவ்வளவு செலவுகளுக்குப் பின் இந்தியில் திரும்பக் கிடைத்தது வெறும் பூஜ்யம்.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

இந்த நெருக்கடிகளுக்கு நடுவில் சிம்புதேவன் சொன்ன தேதியில் படத்தை முடிக்காததால் 8 கோடிகள் தயாரிப்பாளருக்கு அதிக செலவு ஏற்பட்டது. ஒருவழியாக படமும் வெளியானது. அதன் முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். போட்ட பணத்தை படம் வசூலிக்கவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் நஷ்டம்.

webdunia

 
 
தயாரிப்பாளரின் நிலைமை தெரிந்த விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, சுதீப் ஆகியோர், தயாரிப்பாளர் கடைசியாக தந்த காசோலையை வங்கியில் போடாமல் திருப்பியளித்தனர்.
 
பேசியதைவிட அதிகம் வாங்கிய ஸ்ரீதேவி படத்தின் தெலுங்கு, இந்தி பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததுடன் 50 லட்சங்கள் இன்னும் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.
 
இந்தப் பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் புலி படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குனரும்தான்.
 
பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வேடத்தில் முதலில் பேசப்பட்டவர் ஸ்ரீதேவி. இதேபோல் அதிக சம்பளம், தனி காஸ்ட்யூம் டிஸைனர் கேட்டதால், அதெல்லாம் முடியாது என்று அவரை நீக்கிவிட்டு ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்தார் ராஜமௌலி. ஸ்ரீதேவி கேட்டதில் கால்வாசி சம்பளம்கூட ரம்யா கிருஷ்ணன் கேட்கவில்லை. அதேநேரம், ரம்யா கிருஷ்ணனின் கம்பீரத்தில் கால்வாசிகூட புலி ஸ்ரீதேவியிடம் இல்லை.
 
ராஜமௌலிக்கு இருந்த தன்னம்பிக்கையும், துணிச்சலும், முக்கியமாக நட்சத்திரங்களிடம் அடிபணியாத தைரியமும் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனரிடமும் இல்லை. ஸ்ரீதேவி கேட்டதற்கெல்லாம் சலாம் வைத்து குனிந்தார்கள். அதற்கான வினையை இப்போது அறுவடை செய்கிறார்கள்.
 
புலி படத்தை தயாரித்தவர்கள் நஷ்டமடைந்தனர். நடித்த விஜய், சுதீப், ஹன்சிகா, ஸ்ருதி சம்பளத்தில் கொஞ்சம் விட்டுத் தந்தனர். ஸ்ரீதேவி மட்டும் எரிகிற வீட்டில் இன்னும் பிடுங்க முடியுமா என்று புகார் தந்திருக்கிறார்.
 
என்ன கொடுமை இது நாராயணா...?

Share this Story:

Follow Webdunia tamil