Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிவகுமார்.... கமல், ரஜினியின் நெகிழ்ச்சிப் பதிவு

சிவகுமார்.... கமல், ரஜினியின் நெகிழ்ச்சிப் பதிவு
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (13:10 IST)
சிவகுமாரின் 75 -வது பிறந்தநாளை முன்னிட்டு 'கோல்டன் மொமன்ட்ஸ் ஆஃப் சிவகுமார் இன் தமிழ் சினிமா' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் கமல், ரஜினி உள்பட திரையுலக பிரபலங்கள் தங்களுக்கும் சிவகுமாருக்குமான நட்பை, நெருக்கத்தை பதிவு செய்துள்ளனர்.

 
 
கமல்
 
அழகான ஒரு தமிழ் முகம் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகம். அதுமட்டுமல்ல கையில் சிகரெட் பாக்கெட்டுடன் அலைவது நடிகர் குல நாகரீகமாக கருதப்பட்டுவந்த கோடம்பாக்கத்தில் வெற்றிலை கூடப் போட்டுப் பார்த்ததில்லை. அண்ணன் சிவகுமாரை, நான் நடன உதவி இயக்குநராக சந்தித்து அளவளாவ முடிந்ததை பல நண்பர்களிடன் பெருமையாக சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். நான் நடிகனான பொழுது அதை வரவேற்று நல்ல நடிகனாக இருப்பதற்கு பல அறிவுரைகள் தந்தார். அவற்றில் சில முறைமைகளை நான் கடைபிடிப்பதில்லை. எனினும் அது எங்கள் நட்பிற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது, ஒருவரை ஒருவர் சகோதர பாசத்துடன் பழக வைத்தது.
 
ஓவியம், யோகா, தமிழ் வாசிப்பு, உச்சரிப்பு, நன்நடத்தை என்ற தனித்துவத்துடன் 75 ஆண்டுகளைத் தொட்டிருக்கும் அந்த இளைஞன், நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கின் அப்பா என்ற இன்றையச் சிறுபிள்ளைகள் அடையாளம் சொன்னாலும் எங்களுக்கெல்லாம் அண்ணன் சிவகுமாரின் பிள்ளைகள் தான்.
 
அண்ணன் சிவகுமாருக்குக் கிடைத்த நல்வாழ்க்கை தானாக அமைந்ததல்ல, அவர் சிரத்தையுடன் முனைந்து அமைத்துக் கொண்டது. போதும் என்று சொன்னவரெல்லாம் இத்தனை பொன் செய்ததில்லை. எளிமையாக பழைய நண்பர்களை, ஏன் பழைய காரைக்கூட பாசத்துடன் போற்றும் பண்புடையவர். எங்கள் இருவருக்கும் ஊர் வம்பு பேசப் பிடிக்கும். நாரதர் வம்புமாதிரி நல்லதில் முடியும் வம்பு. காலம் சென்ற வி.கே.ராமசாமியின் நகைச்சுவை மாதிரி யாரையும் புண்படுத்தாத வம்பு. இன்றும் இருவரும் சந்தித்தால் ஒரு அரை மணி நேரம் தொண்டை வற்ற அரட்டை அடிக்காமல் போனதில்லை. இருவருமே பல 
தலைமுறை நடிகர்களுடன் நடிக்கவும், பழகவும் நேர்ந்ததால் பணிவும் தன்நம்பிக்கையும் ஒருங்கே அமையப் பெற்றோம். அவரைப் பார்த்து பலவற்றை கற்ற நான், அவர் வயதில் அவரின் ஆரோக்கியத்தையும் பெற்றால் எனதும், நல்ல வாழ்வாக அமையும். அன்பிற்கும் நட்பிற்கும் நன்றி அண்ணா.
 
ரஜினி
 
சிவகுமாருடன் நான் நடித்த படங்கள் இரண்டுதான். ஒன்று புவனா ஒரு கேள்விக்குறி, மற்றொன்று கவிக்குயில். அவருடன் பழகியதிலிருந்து நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கவழக்கங்களை என் வாழ்க்கையில் மறக்க முடியாது. அந்த காலத்தில் நான் மது, புகைப் பிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த நேரம். மதிப்பிற்குரிய சிவக்குமார் சலிக்காமல் ஒவ்வொரு நாளும், இந்த பழக்கங்களை எல்லாம் விட்டு விடு ரஜினி, நீ பெரிய நடிகனாக வருவே, இந்த கெட்டப் பழக்கங்களாலே உன்னோட உடம்பை கெடுத்துக்காதே அப்படின்னும் சொல்லிக்கிட்டே இருப்பார். என்னடா இந்த ஆள் நம்மள நிம்மதியா விடமாட்டேங்கறாரே என்று எனக்கே சில நேரங்களில் சலிப்பாயிருக்கும்.
 
என் மேலே அவருக்கு அந்த அளவுக்கு அன்பு, பாசம், நம்பிக்கை. அவர் நல்ல மனிதர், நல்ல உள்ளம் கொண்டவர், ஒழுக்கமானவர், நேர்மையானவர், ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர். இது போன்ற மனிதர்கள் சொல்வதெல்லாம் பலிக்காமல் இருக்காது. அவர் சொன்னது பலித்தது, நான் பெரிய நடிகன் ஆனேன். அவர் பேச்சை கேட்காததால் என்னுடைய உடம்பையும் கெடுத்துக் கொண்டேன்.
 
இன்னைக்கும் அவர் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. அவர் சொல்கிறபடி நடந்துகிட்டா ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம். இந்த மாபெரும் கலைஞன், மனிதன் நீடுழி வாழ்க என்று ஆண்டவனை வேண்டி அவருடைய 75 -வது பிறந்த நாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியாகராஜன் குமாரராஜா படத்தில் சமந்தா