Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரத் வெர்சஸ் விஷால் - குற்றம் நடந்தது என்ன

சரத் வெர்சஸ் விஷால் - குற்றம் நடந்தது என்ன

ஜே.பி.ஆர்

, புதன், 3 ஜூன் 2015 (11:05 IST)
நடிகர் சங்க கட்டிடம் குறித்து விஷால் கேள்வி கேட்பதும், அதான் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறதே. அது முடிந்தால்தான் எதுவும் சொல்ல முடியும். வழக்கு போட்ட பூச்சி முருகன் உங்க ஆளுதானே என சரத்குமார் பதிலளிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நடுவே நாசர்வேறு கடிதம் எழுதி சூழலை கதகதப்பாக்குகிறார்.
உண்மையில் நடிகர் சங்கத்தில் என்ன பிரச்சனை? 
 
நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் பதவியேற்ற பிறகு அது அனைவருக்குமான நடிகர் சங்கமாக இல்லை. சரத்குமார், ராதாரவி இருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்குரிய குடும்பச் சொத்தாக மாறிவிட்டது. அதுதான் அடிப்படை பிரச்சனை.
 
நடிகர் சங்கத்துக்கு என சொந்த கட்டிடம் வேண்டும் என்று தி நகர் ஹபுபுல்லா சாலையில் நிலம் வாங்கப்பட்டது. இது எம்.ஜி.ஆர். காலத்தில் அப்போதுள்ள நடிகர், நடிகைகளின் முயற்சியில் நடந்தது. கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்களை முறைப்படி திரட்டினால் அந்த இடத்தில் ஐந்து நட்சத்திர விடுதியே கட்ட முடியும்.
 
ஆனால், சரத்குமாரும், ராதாரவியும் இணைந்து எஸ்பிஐ சினிமாஸ் என்ற நிறுவனத்துக்கு 30 வருடங்களுக்கு அந்த இடத்தை லீஸுக்கு விட்டனர். அவர்கள் அந்த இடத்தில் ஷாப்பிங் மால் கட்டி, ஒருபகுதியை நடிகர் சங்கத்துக்கு தருவார்கள். இந்த ஒப்பந்தத்தில் சரத்குமார், ராதாரவி இருவர் மட்டுமே கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் நிறைவேறிய பிறகே செயற்குழு, பொதுக்குழுவில் இப்படியொரு திட்டம் இருப்பதை அவர்கள் தெரியப்படுத்தினர்.
 
எஸ்பிஐ சினிமாஸுடன் ஒப்பந்தம் போட்ட பின்பே இந்த விவகாரத்தை சரத்குமாரும், ராதாரவியும் சங்க உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினர் என்பதற்கு தகுந்த ஆதாரம் உள்ளது. 
 
நமது இடத்தில் நாமே கட்டிடம் கட்டாமல் வேறு ஒருவருக்கு அதனை ஏன் தர வேண்டும். அதில் நாம் ஒரு வாடகைக்காரரைப் போல் ஏன் இருக்க வேண்டும் என்பது விஷால், நாசர் போன்றவர்களின் கேள்வி. மேலும், இதுபோன்ற ஒப்பந்தத்தில் ஒன்பது பேர்களாவது நடிகர் சங்கம் சார்பில் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், சரத்குமாரும், ராதாரவியும் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ளனர். 
 
இதனை எதிர்த்து பூச்சி முருகன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒன்பது பேருக்கு பதில் இருவர் மட்டுமே கையெழுத்துப் போட்டதால் ஒப்பந்தம் செல்லாது எனவும், சங்கத்தில் நடப்பது எதுவுமே சரியில்லை எனவும் நீதியரசர் சந்துரு தீர்ப்பு வழங்கினார். சரத்குமார் தரப்பு அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பானுமதி, சசிதரன் இருவரும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். 
 
சரத்குமார், ராதாரவி ஆகியோரின் சங்க நலனுக்கு எதிரான தன்னிச்சையான செயல் காரணமாகதான் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சங்கத்தில் எதுவும் சரியாக இல்லை எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தை மறைத்து, பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார். அதனால்தான் சங்கத்துக்கு கட்டிடம் கட்ட முடியவில்லை என்ற பல்லவியை சரத்குமார் தொடர்ந்து பாடி வருகிறார். இந்த விவரங்களை எல்லாம் சொல்லி விளக்கம் கேட்டால், ஒரே விஷயத்துக்கு எப்போதும் விளக்கம் தந்து கொண்டிருக்க முடியாது. தேர்தல் வருவதால் கலகம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று தேர்ந்த அரசியல்வாதியைப் போல் மற்றவர்களை முட்டாளாக்குகிறார்.

இது மட்டுமில்லை. யாருடைய ஒப்புதலும் பெறாமல் சங்க கோப்புகளில், சரத்குமாரும், ராதாரவியும் சங்கத்தின் ஆயுட்கால அறங்காவலர்கள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த புதிய பதவியை அவர்களுக்கு யார் தந்தது? அவர்களாகவே வைத்துக் கொண்ட இந்தப் பதவி குறித்து உறுப்பினர்களுக்குகூட இதுவரை முறைப்படி தெரிவிக்கவில்லை.
webdunia
இந்த விவகாரத்தை முதலில் கையிலெடுத்தவர் நடிகர் குமரிமுத்து. அவர் விளக்கம் கேட்டு எழுதிய கடிதத்தில் சரத்குமாரையும், ராதாரவியையும் மோசமான வார்த்தைகளில் குறிப்பிட்டார் என சங்கத்தின் 13 -ஆம் சட்ட விதியை சுட்டிக்காட்டி சங்கத்திலிருந்து நீக்கினர். சரி, குமரிமுத்து அப்படியென்ன மோசமான வார்த்தையை உபயோகப்படுத்தினார்? சரத்குமாரையும், ராதாரவியையும் அவர் திருவாளர் என்ற வார்த்தையால் சுட்டியிருந்தார்.

திரு என்ற மரியாதைக்குரிய வார்த்தையின் விரிவுதான் திருவாளர் என்பது. அந்த வார்த்தை எப்படி மோசமான வார்த்தையானது. கேள்வி கேட்ட குமரிமுத்துவை சங்கத்திலிருந்து வெளியேற்றவும், அவர் கேள்வி கேட்காமலிருக்கவும் திருவாளர் என்ற மரியாதைக்குரிய வார்த்தையையே இவர்கள் மோசமான வார்த்தையாக்கினர்.
 
அதேநேரம் சங்கத்தின் துணைத் தலைவர் காளை, விஷாலையும் அவர் ஆதரவு நடிகர்களையும் வெளிப்படையாகவே நாய் என்று திட்டினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியதற்கு இதுவரை சரத்குமாரிடமிருந்தோ, ராதாரவியிடமிருந்தோ பதிலில்லை.

சங்கத்துக்கு நிறைய செய்திருக்கிறார் என்று காளைக்கு அவர்களாகவே பொதுமன்னிப்பு வழங்கிவிட்டனர். திருவாளர் என்றால் வெளியேற்றம், நாய் என்றால் பொதுமன்னிப்பு. இதுதான் திருவாளர்கள் சரத்குமார், ராதாரவியின் சுயநல தர்ப்பார். இது குறித்த கேள்விக்குதான் இருவரும் புரண்டு மறிகிறார்கள்.
 
கட்டிடம் குறித்து கேள்வி கேட்டால், சங்கத்துக்காக இரவு பகலாக உழைக்கிறேnம் என டபாய்ப்பதும், கேள்வி கேட்பவர்களை கலகம் செய்வதாக கட்டம் கட்டுவதும் சரத்குமார், ராதாரவியின் வழிமுறையாக உள்ளது. இவர்களையும் இவர்களின் ஆதரவுபெற்ற மற்ற நிர்வாகிகளையும் சங்கப் பொறுப்பிலிருந்து தூக்கி எறிவது ஒன்றே நடிகர் சங்கத்தின் அனைத்து விமோசனத்துக்கும் ஒரே தீர்வாகும்.
 
இவர்களின் கூட்டு தர்ப்பாருக்கு பயந்து மற்றவர்கள் வாய் மூடி இந்தவேளை துணிச்சலாக கேள்வி கேட்ட விஷால், நாசர் இருவரும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil