Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்கா சாதனையும் சர்ச்சையும்

லிங்கா சாதனையும் சர்ச்சையும்

ஜே.பி.ஆர்

, செவ்வாய், 23 டிசம்பர் 2014 (13:03 IST)
லிங்கா படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சிலரும், இல்லை படம் வெற்றி என தயாரிப்பாளர் தரப்பும் கூறி வருகிறது. இதில் எது எண்மை?
 
ரஜினி படம் மற்ற அனைத்து நடிகர்களின் படங்களைவிட மிக அதிகம் வசூல் செய்யும் என்பதை 12 -ஆம் தேதி வெளியான லிங்கா மீண்டும் நிரூபித்தது. உள்ளூர், வெளிநாடு என அனைத்து இடங்களிலும் படம் முதல் மூன்று தினங்களில் சரித்திர சாதனை வசூலை பெற்றது. 
இந்த வருடம் சூப்பர்ஹிட்டான விஜய்யின் கத்தி சென்னையில் முதல் வார இறுதியில் 1.7 கோடிகள் வசூலித்தது. லிங்காவின் முதல் வார இறுதி வசூல் 2.6 கோடிகள். தயாரிப்பாளர் தரப்பு கூறுவது போல லிங்கா மிகப்பெரிய ஓபனிங்கை பெற்றது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உண்மை.
 
அதேநேரம் நான்காவது நாளிலிருந்து படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகம் சரிய ஆரம்பித்தது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 2.6 கோடிகள் வசூலித்த படம் இரண்டாவது வார இறுதியில் அதில் பாதியைக்கூட வசூலிக்கவில்லை. 1.13 கோடிகளை மட்டுமே வசூலித்தது. முதல் பத்து தினங்களில் லிங்காவின் சென்னை மாநகர வசூல் 5.35 கோடிகள். நிச்சயமாக வேறு எந்த நடிகரின் படத்தையும்விட அதிகம். அதேநேரம் மூன்று தினங்களில் 2.6 கோடி வசூலித்த படம் அடுத்த ஏழு தினங்களில் 2.75 கோடிகளையே வசூலித்தது. ரஜினியின் சிவாஜி, எந்திரன், சந்திரமுகி போன்ற படங்களுடன் ஒப்பிடுகையில் இந்த சரிவு சதவீதம் அதிகம்.
 
மாணவர்களுக்கு அரையாண்டு பரீட்சை நேரத்தில் படத்தை வெளியிட்டதால் வசூலில் சரிவு ஏற்பட்டது. ஆனால் பரீட்சை முடிந்து அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் மீண்டும் கூட்டம் அதிகரித்துள்ளது என வேந்தர் மூவிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது உண்மையா?
 
சென்னை மற்றும் புறநகரில் லிங்கா திரையிடப்பட்டுள்ள 30 திரையரங்குகளுக்கு, டிக்கெட்நௌ டாட் காமின் மூலம் முன்பதிவு செய்யலாம். இன்று இந்த முப்பது திரையரங்குகளிலும் டிக்கெட்கள் தாராளமாக கிடைக்கின்றன. இதுதான் தமிழகம் முழுவதிலுமுள்ள நிலைமை.

எந்திரன், சந்திரமுகி போன்ற திரைப்படங்களுக்கு முதல்வாரத்தை கடந்தும் திரையரங்குகள் பார்வையாளர்களால் நிரம்பின. அதற்கு காரணம் படம் ஜனங்களை கவர்ந்திருந்தது. லிங்காவால் அந்த மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை. இதை வைத்து ரஜினின் சந்தை மதிப்பு குறைந்துவிட்டதாக கூற முடியாது.
webdunia
பத்து கோடியில் தயாராகும் மற்ற ஹீரோக்களின் படங்கள் பதினைந்து கோடிகள் வசூல் செய்தால் ரஜினியின் படம் 25 கோடிகள் சாதாரணமாக வசூலிக்கின்றன. லிங்காவும் அப்படியே. இருந்தும் நஷ்டம் என்று ஏன் குரல்கள் கேட்கின்றன?
 
பத்து கோடியில் தயாராகும் படத்தை இருபது கோடிக்கு விற்றால் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். அதே பத்து கோடி படத்தை முப்பது கோடிக்கு விற்றால்...? லிங்காவில் நடந்தது அதுதான். மிக அதிக விலைக்கு படத்தை விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் வாங்கின. அதனை படம் வசூல் செய்யுமா என்ற பதட்டம் அவர்களுக்கு. 
 
அதேநேரம், படம் வெளியான முதல் வாரமே நஷ்டம் என்று கூறுவது சரியா?
 
ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும்முறை வந்த பிறகு படத்தின் ஒட்டு மொத்த வசூலில் எண்பது சதவீதம், முதல் பத்து தினங்களில்தான் வருகிறது. ஹேப்பி நியூ இயர் படம் முதல் 3 தினங்களில் 100 கோடியை தாண்டி வசூலித்தது. அப்படியானால் பத்து தினங்களில் எத்தனை கோடிகளை அது வசூலித்திருக்க வேண்டும்? ஆனால் அதன் ஒட்டு மொத்த வசூலே 202 கோடிகள்தான்.

மொத்த வசூலில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகம் முதல் மூன்று தினங்களில் கிடைத்தது. இதுதான் தமிழ் சினிமாக்களின் நிலையும். கத்தியின் இதுவரையான சென்னை வசூலான 7.8 கோடிகளில் 90 சதவீதம் இரண்டே வாரங்களில் கிடைத்தது. அதனால்தான் லிங்கா வெளியான ஐந்தாவது நாளே படத்தால் நஷ்டம் ஏற்படுமோ என்று விநியோகஸ்தர்கள் பதறிப் போயினர்.
 
தமிழில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த பட்டியலில் ரஜினியின் படங்களே முதல் மூன்று இடங்களில் உள்ளன. கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட எந்த நடிகரின் படமும் லிங்கா அளவுக்கு வசூலிக்கவில்லை. அப்படியிருந்தும் படத்தை வாங்கியவர்களுக்கும், திரையிட்டவர்களுக்கும் நஷ்டம் ஏற்படுமோ என்ற பதட்டம் ஏற்படுமாயின் அது நிச்சயம் கவலைப்பட வேண்டிய விஷயம்.

ரஜினியின் புகழுக்கு இது சிறப்பு சேர்ப்பதாக இராது. தயாரிப்பாளரும், ஒட்டு மொத்த விநியோகஸ்தரும் மட்டும் லாபத்தை பங்கிட்டால் போதாது, சிறு விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லாபம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் படத்தின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். அதனை வலியுறுத்தும் அதிகாரமும், கடமையும் ரஜினிக்கு மட்டுமே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil