Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசபக்தர்களான திரையரங்கு உரிமையார்களே...

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (14:57 IST)
மக்களிடம் தேசப்பற்று குறைந்துவிட்டது, அதனால் திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவதற்குமுன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டதும் அதனை வரவேற்ற முதல் தேசபக்தர்கள் நீங்கள். இந்த ஆணையை அமல்படுத்த ஒருவாரகால அவகாசம் தந்தும், அதற்கு முன்னதாகவே தேசியகீதத்தை உங்கள் திரையரங்குகளில் இசைத்து உங்களின் பீறிடும் தேசபக்தியை நிபித்திருக்கிறீர்கள். கேட்கையில் புல்லரிக்கிறது.


 
 
இந்த ஆணையின் மூலம் ஒன்றை ஆமோதித்திருக்கிறீர்கள். அதாவது உங்கள் திரையரங்கில் படம் பார்க்க வருகிறவர்களுக்கு தேசபக்தி குறைவு, தேசியகீதம் இசைக்கவிட்டு அதனை வளர்க்க வேண்டும். பார்வையாளர்கள் தேசியகீதத்துக்கு எழுந்து நிற்பதைப் பார்த்து உங்களின் தேசபக்தி இதயம் நெகிழ்ச்சியில் விம்மியதாக உங்களில் சிலர் பேட்டி தந்திருக்கிறார்கள். 
 
பார்வையாளர்களாகிய எங்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது போல், பார்வையாளர்களாகி எங்களையும் நீங்கள் மகிழ்ச்சிப்படுத்துவீர்களா? அதுதானே நியாயம்?
 
கோச்சடையான் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கோச்சடையானுக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் பார்வையாளர்களிடமிருந்து 30 சதவீத கேளிக்கைவரி வசூலிக்கக் கூடாது என்று இதே நீதிமன்றம் உத்தரவிட்டதை ஏன் தேசபக்த திரையரங்கு உரிமையாளர்களே நீங்கள் கடைபிடிக்கவில்லை? உங்கள் கல்லா பெட்டியின் கனம் குறைந்துவிடும் என்றா?
 
பொருள்களை அதன் எம்ஆர்பி தொகைக்கே விற்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், தண்ணீர் பாட்டில் முதல் தின்பண்டங்கள்வரை அனைத்தையும் தேசபக்த திரையரங்கு முதலாளிகளே நீங்கள் பலமடங்கு விலை வைத்து விற்கிறீர்கள். 
 
உங்கள் தேசபக்தி புல்லரிப்பு ஏன் உங்கள் கேன்டீனில் மட்டும் செல்லுபடியாகவில்லை?
 
புதிய படம் வெளியானால் சட்டத்துக்கு புறம்பாக பல மடங்கு கட்டணம் வைத்து விற்கும் தேசபக்தர்களே, அப்போதெல்லாம் இந்த தேசம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா...?
 
பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை, டிக்கெட் கட்டணத்தில் வழிப்பறி, உள்ளே நுழைந்தால் கேன்டீனில் உலகமகா கொள்ளை... தேசத்துக்கு எதிரான அனைத்தையும் செய்து, சே... என்னடா தேசம் இது என்று மக்களை புலம்ப வைக்கும் நீங்கள் தேசபக்தியை பற்றி பேசுகிறீர்கள். தேசியகீதத்துக்கு மக்கள் எழுந்து நிற்பதைப் பார்த்து உங்களுக்கு புல்லரிக்கிறது. இந்த புல்லரிப்பில் உங்களின் எல்லா சட்டவிரோத தேசவிரோத செயல்களும் மறந்து போகும் என்று தேசபக்தர்கள் நீங்கள் நினைக்கிறீர்கள்.
 
கயவர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்று சாமுவேல் ஜாக்சன் சொன்னதுதான் நினைவில் வந்து தொலைக்கிறது.

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

லிங்குசாமி மேல் அதிருப்தியில் கமல்ஹாசன்… காரணம் இதுதானா?

கதைகட்டுவது இதயத்தை நோகச்செய்கிறது… விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு சைந்தவி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments