Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லிங்கா நஷ்டம் - கொடி பிடிக்கும் விநியோகஸ்தர்கள் கொந்தளிக்கும் ரசிகர்கள்

லிங்கா நஷ்டம் - கொடி பிடிக்கும் விநியோகஸ்தர்கள் கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஜே.பி.ஆர்

, வியாழன், 19 பிப்ரவரி 2015 (08:52 IST)
லிங்கா படத்தின் நஷ்டத்துக்கு நிவாரணம் கேட்டு சில விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர். அநியாய விலை வைத்து தந்ததால் நஷ்டம் என்ற அவர்களின் ஆரம்ப நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்தவர்களே அவர்களின் இப்போதைய அரசியல் அழுகுணி ஆட்டம் கண்டு வெறுப்படைந்துள்ளனர். 
போராட்டம் நடத்தும் சிங்காரவேலன் உள்பட பல விநியோகஸ்தர்கள் தொழிலுக்கு புதியவர்கள். லிங்கா படத்தை வாங்கி அதன் மூலம் விநியோகஸ்தர்களான கத்துக்குட்டிகளும் இருக்கிறார்கள்.
 
பரம்பரையாக வந்த பணத்தையும், ரியல் எஸ்டேட்டில் வெட்டிப் பிடித்த கோடிகளையும் கொட்டி குறுகிய காலத்தில் பெரும் பணம் சம்பாதிக்க திட்டமிட்ட பேராசைக்காரர்கள் இவர்கள். தங்களின் முதலீட்டில் சிறிது நஷ்டம் ஏற்பட்டதும், ஏதோ பொதுமக்களுக்குதான் பங்கம் ஏற்பட்டது போல் பொதுவெளியில் பிச்சை எடுக்கப் போகிறேnம் என்று போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர் இந்தப் பேராசைக்காரர்கள். நஷ்டம் வந்தாலும் லாபம் வந்தாலும் நாங்களே பொறுப்பு என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டவர்கள் எந்த அடிப்படையில் நஷ்டஈடு கேட்கிறார்கள்?
 
ரஜினிக்கு ஆதரவாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டதும் இந்த விநியோகஸ்தர் கும்பல் பதில் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
லிங்கா பட விநியோகஸ்தர்கள் போராட்டம் தொழில் தர்மத்திற்கு மாறானது என்றும், போராட்டத்திற்குள் அரசியல் தலைவர்களை இழுப்பது வருந்தத்தக்கது என்றும், உண்மையில் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் அதற்காக உள்ள கூட்டமைப்பில் சங்கத்தின் மூலம் பேசி நல்ல முடிவு எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

லிங்கா பட நஷ்டம் தொடர்பான போராட்டம் திருச்சி, தஞ்சை விநியோகஸ்தர் சம்பந்தப்பட்ட போராட்டம் போன்ற ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். “லிங்கா” படத்தை திரையிட்டதன் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை சுட்டிக் காட்டி இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவிஸ், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் படத்தின் கதாநாயகன், நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவருக்கும் தமிழ்நாட்டின் “லிங்கா” திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பில் கடிதம் மூலமாகவும் மின் அஞ்சல் மூலமாகவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
webdunia
தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், சம அளவில் நஷ்டம் அடைந்து இருந்து விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கோரினால் அது தொழில் தர்மத்திற்கு எதிரானது என்பதில் மாற்று கருத்தில்லை. லிங்கா பட விவகாரத்தில் லாபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இது எப்படி தவறாகும்.
 
கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த அவுட்ரேட் மற்றும் மினிமம் கியாரண்டி முறையில் விநியோகஸ்தகர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்ட போது நஷ்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் நிறைய உண்டு. நஷ்டஈட்டை திருப்பிக் கொடுத்த விஷயங்கள் மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் நடைபெற்ற சம்பவங்கள் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தெரியாததா?
 
பாபா மற்றும் குசேலன் போன்ற படங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை தாமாக முன் வந்து ரஜினி வழங்கினார். நடிகர் கமலஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ், ஹேராம் போன்ற படங்கள் நஷ்டத்தை சந்தித்த போது துதாமாகவே முன்வந்து நஷ்டத்தில் பங்கு கொண்டார்.
 
இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சினிமாவில் நடந்து உள்ளன. லிங்கா படப் பிரச்சனை தொடர்பாக ஜனவரி 10ம் தேதி வள்ளுவர் கோட்டம் எதிரில் நஷ்டம் அடைந்த திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின்னர் எங்களை அழைத்த கோவை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணி கணக்குகளை ஒப்படைக்குமாறும், நஷ்டஈடு தரப்படும் எனவும் கூறினார். அதனை நம்பி கணக்குகளை ஒப்படைத்தோம். கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்டஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மத்திற்கு மாறானது என்பதை தயாரிப்பாளர் சங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
இந்த படத்தை ரஜினிகாந்தை நம்பித்தான் வாங்கினோம். அதனால் நஷ்டத்தில் அவரும் பங்கு கொள்ளவேண்டும் என அழைக்கிறோம். பிரச்சனையை தீர்க்க சங்கத்தை அணுக வேண்டும் என்று கூறும் நீங்கள் எந்த சங்கத்திலும் உறுப்பினர் அல்லாத புது விநியோகஸ்தர்களுக்கு படத்தை விற்ற ராக்லைன் வெங்கடெஷையோ, வேந்தர் மூவிஸ் நிறுவனத்தையோ ஏன் கண்டிக்கவில்லை. புதிய விநியோகஸ்தர்களுக்கு உங்கள் தொழில் தர்ம முறையை போதித்து விட்டல்லவா படத்தை விற்றிருக்க வேண்டும்.

தமிழில் மூன்று படங்களை தயாரித்த ராக்லைன் வெங்கடெஷ் உங்கள் சங்கத்தில் உறுப்பினர் கூட கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். உறுப்பினரல்லாத ஒருவருக்காக குரல் கொடுப்பதன் பின்னணியை அறிந்து கொள்ள விரும்புகிறோம். மக்கள் இந்த பிரச்சனையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
webdunia
நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக பேசினால் அவரின் கால்ஷீட் கிடைக்கும் என்ற நப்பாசையில் பல பேர் தொடர்ந்து அறிக்கை வெளியிடுகிறார்கள். பணத்தை இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். எனவே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாமல் அகிம்சை முறையில் போராடும் விநியோகஸ்தர்களுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் இரண்டற கலந்திருப்பதால் அரசியலில் சினிமாக்காரர்கள் நுழைவதையும், சினிமாவில் அரசியல்வாதிகள் நுழைவதையும் யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.
 
இத்துடன் நிறுத்தியிருந்தால் பராவாயில்லை. ரஜினியை ஜெயலலிதாவுக்கு எதிராக திருப்பிவிடும் வகையில் போஸ்டரடித்தது அதிருப்தி விநியோகஸ்தர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக ரஜினி ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர். 
 
விநியோகஸ்தர்கள் மெகா பிச்சை போராட்டத்தை தலைவர் வீட்டுமுன் நடத்தினால் தக்க பதிலடி தருவோம் என்று பதிலுக்கு போஸ்டரடித்து மிரட்டியுள்ளனர். 
 
இந்த விவகாரத்தில் நம்முடைய கருத்து இதுதான்.
 
ஒரு நட்சத்திரத்தை மையமாக வைத்து தகுதிக்கு மீறி வியாபாரம் செய்தது முதல் தவறு. சினிமா வியாபாரத்தின் அடிப்படை தெரியாமல் பேராசையில் கேட்ட பணத்துக்கு படத்தை வாங்கியது இரண்டாவது தவறு. நஷ்டம் வந்தால் எங்கள் பொறுப்பு என்று ஒப்பந்தம் போட்டுவிட்டு இப்போது கூச்சல் போடுவது மூன்றாவது தவறு. பிரச்சனையை அரசியலாக்குவது மன்னிக்க முடியாத பெரும் தவறு.
 
இனிமேலாவது எந்த நடிகரின் படமாக இருந்தாலும், படத்தைப் பார்த்து, அதன் தரத்தை மதிப்பிட்ட பிறகே வாங்குவோம், எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் வியாபாரத்தைப் பொறுத்தே பணம் தருவோம் என்ற முடிவை விநியோகஸ்தர்கள் இனிமேலாவது எடுக்காவிடில் அது உலகமகா தவறாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil