Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனராக நான் செய்த அபத்தங்கள் - பட்டியலிடுகிறார் வசந்தபாலன்

இயக்குனராக நான் செய்த அபத்தங்கள் - பட்டியலிடுகிறார் வசந்தபாலன்

ஜே.பி.ஆர்

, வியாழன், 19 பிப்ரவரி 2015 (16:25 IST)
காவியத்தலைவன் நன்றாக ஓடும், தனக்கு புகழ் கிடைக்கும் என்று அதிகம் நம்பினார் வசந்தபாலன். படம் ஓடாததுடன், அடுத்தப் படம் வசந்தபாலனுக்கு கிடைப்பதே கடினம் என்ற நிலைமைக்குள் அவரை தள்ளியது. தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இணையத்தில் விமர்சனம் எழுதுகிறவர்களை கடுமையாக கண்டித்து ஒரு பதிவை வெளியிட்டார்.
அதன் பிறகு, ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள் என்று இருபது விஷயங்களை பட்டியலிட்டுள்ளார்.
 
1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
 
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
 
4.நமக்கு சுக்கிரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
 
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் U will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
 
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது

16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
 
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
 
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
webdunia
- இப்படி பட்டியலிட்டவர் தொடர்ந்து, "இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன. ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி" என்று எழுதியுள்ளார்.
 
ஆறு பாட்டு, நாலு சண்டை என்று படம் செய்கிறவர்கள் மத்தியில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், தனது தனித்துவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று நினைக்கிறவர், அதற்காக பாடுபடுகிறவர் வசந்தபாலன். அந்தவகையில் அவரது முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. ஆனால், நல்ல படம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நல்ல படத்தை உருவாக்குவதில்லை.
 
காவியத்தலைவனை எடுத்துக் கொண்டால், அது முப்பதுகளின் நாடக உலகை பற்றிய படம். அதை அப்படியே திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே வசந்தபாலனின் விருப்பம். ஆனால், முப்பதுகளின் நாடக உலகை படமாக்கினால் இன்றைய பார்வையாளர்கள் திரையரங்குக்கு வருவார்களா மாட்டார்களா என்பது சினிமா கம்பெனியில் டீ விநியோகிக்கும் பையனுக்கும் தெரியும். 
 
காவியத்தலைவன் போன்ற படங்கள் இந்தகாலகட்டத்தைப் பொறுத்தவரை பரிசோதனை முயற்சிகள். பதினைந்து கோடிக்கு மேல் வியாபாரம் இல்லாத சித்தார்த், பிருத்விராஜ் போன்ற நடிகர்களை வைத்து 25 கோடியில் ஒரு படத்தை எடுப்பது, அதுவும் காவியத்தலைவன் போன்ற பரிசோதனை முயற்சியை மேற்கொள்வது கல்லை கட்டி கடலில் நீந்துவதைவிட ஆபத்தானது. போட்ட பணம் நிச்சயம் திரும்பாது. மஹதீரா போன்று கமர்ஷியல் படம் என்றால் நகுலை வைத்துக்கூட நாற்பது கோடியில் படம் எடுக்கலாம். காவியத்தலைவனுக்கு பத்து கோடியே அதிகம்.
webdunia
வசந்தபாலனின் முக்கியமான பிரச்சனை, அவரது திரைக்கதை. ஒரு சம்பவம் மெல்ல மெல்ல கட்டவிழும்போதுதான் அது பார்வையாளர்களை கவரும். கதையோடு அவர்களை ஈர்த்துக் கொள்ளும். காவியத்தலைவனில் ஒரு சுப்ரபாதத்தில் ராஜா வேஷம்கட்டும் (ராஜாபார்ட); பொன்வண்ணன் பிகு செய்கிறார். தன்னால்தான் நாடகம் நடக்கிறது என்று இறுமாப்புடன் நடந்து கொள்கிறார்.

உடனே அவரை துரத்திவிட்டு இன்னொரு நபரை தேர்வு செய்கிறார் நாசர். பொன்வண்ணனின் அகந்தை அந்தக் காட்சியில் மட்டும் - அடுத்து வேஷம் கட்டப்போவது சித்தார்த்தா இல்லை பிருத்விராஜா என்று காட்டுவதற்கு மட்டும் - காட்டப்படுகிறது. இதேபோல்தான் அனைத்துக் காட்சிகளும் முன்னறிவிப்பில்லாமல் தேவைப்படும் போது மட்டுமே வசந்தபாலனின் படங்களில் பெரும்பாலும் காட்டப்படும்.
 
வேதிகா சித்தார்த்தை தேடி வந்து, எனக்கு உன்னைப்போல் ஒரு குழந்தை வேண்டும் என்று கேட்பது எத்தனை ஆழமான காட்சி. எவ்வளவுதூரம் சித்தார்த்தின் மீது காதல் கொண்டிருந்தால் அவரிடமிருந்து இப்படியொரு வார்த்தை வரும். அந்தக் காதல் ஒரேயொரு காட்சியிலாவது படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? வேதிகாவின் மனம் சித்தார்த்தின்பால் நகருவதை வசந்தபாலன் காட்சிப்படுத்தியிருக்கிறாரா? இல்லை எனும் போது, ஒரு பெண் எனக்கு உன்னைப் போல் பிள்ளை வேணும் என்று கேட்பது எப்படி பார்வையாளர்களை ஈர்க்கும்? அவர்கள் தேமே என்று வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
 
வசந்தபாலனின் முந்தையப் படமான அரவானிலும் தன்ஷிகாவின் கதாபாத்திரமும் இப்படிதான் திடீரென்று காதல் கொண்டு கதறும். அதற்கு முன்பு தன்ஷிகா ஆதியின் மீது காதல் கொண்டதற்கான சிறு சலனம்கூட படத்தில் இராது. அந்தவகையில் வேதிகா கதாபாத்திரம் பரவாயில்லை. 
 
வசந்தபாலனின் பட்டிலைப் பார்க்கையில் அவர் தனது தோல்விக்கான காரணத்தை தன்னிடமோ, தனது படங்களிலோ தேடாமல் வெளிப்புற காரணிகளில் ஆராய்ந்து கொண்டிருப்பது தெரிகிறது. வசந்தபாலனின் சறுக்கல்களுக்கு பிரதான காரணம் அவர் தேர்வு செய்யும் கதைகளும், பலவீனமான திரைக்கதையுமே. திரைக்கதையின் சூட்சுமம் அறியாத ஜெயமோகன் போன்றவர்களை தவிர்த்து அலைபாயுதே செல்வராஜ் போன்றவர்களை இனிமேலாவது வசந்தபாலன் பயன்படுத்தினால் மட்டுமே அவர் சொல்லும் மாயக்கனியை அவரால் பறிக்க இயலும்.
 
தவறினால் அடுத்தமுறை தயாரிக்கிற அபத்தங்களின் பட்டியல் இதைவிட பெரியதாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil