Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாய்ப்பு இல்லாமல் நடிகர்களாகும் இயக்குனர்கள்

வாய்ப்பு இல்லாமல் நடிகர்களாகும் இயக்குனர்கள்

ஜே.பி.ஆர்.

, வியாழன், 14 ஜனவரி 2016 (10:08 IST)
சினிமா ஒருவழிப்பாதை. ஒருமுறை உள்ளே நுழைந்துவிட்டால் திரும்பி செல்வது கடினம். எப்படியாவது சினிமாவில் பிடித்து நின்றாக வேண்டும்.


 


 
கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை இயக்கியவர் மூர்த்தி. முதல் படம் வெற்றி. இரண்டாவது படம் சின்ன சறுக்கல்.
 
சின்ன சறுக்கல்தான். ஆனால், அதன்பிறகு படமே அமையவில்லை. கடைசியில் முட்டி மோதி பப்பாளி என்ற சின்ன பட்ஜெட் படத்தை எடுத்தார். அதுவும் பணால்.
 
சினிமா சினிமா தவிர வேறில்லை என்று சினிமாவைத் தவிர வேறு எதுவும் அறியாத மூர்த்தி இப்போது தனது சர்வைவலுக்காக நடிகராகியிருக்கிறார். சசியின் பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனியின் குருவாக மூர்த்தி நடித்துள்ளார். இனி தொடர்ச்சியாக நடிப்பது என்றும் அவர் முடிவு செய்துள்ளார். 
 
மூர்த்தியைப் போல் இயக்குனராக தொடர முடியாதவர்களுக்கு நடிப்புதான் கை கொடுக்கிறது. இறந்துபோன மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா என சீனியர்களில் தொடங்கி சிங்கம்புலி, ரவிமரியா என ஜுனியர்கள்வரை பலபேர் படம் இயக்குவதற்கான வாய்ப்பின்றி நடிகர்களானவர்கள்.
 
2002 -இல் ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இயக்குனரான ரவி மரியா அடுத்து 2010 -இல் மிளகா படத்தை இயக்கினார்.
 
இரண்டுமே பிளாப்பான நிலையில் முழுநேர நடிகராகிவிட்டார். இன்று அவர் சினிமாவில் நிலைத்திருக்க இந்த தொழில் மாற்றமே அவருக்கு கை கொடுத்திருக்கிறது.
 
அதேபோல் சிங்கம்புலி அஜித்தை வைத்து ரெட் படத்தை இயக்கினார். படம் சரியாகப் போகவில்லை.
 
பாலாவின் கருணையில், மாயாவி படம் கிடைத்தது. அதுவும் சரியாகப் போகாமல் இப்போது முழுநேர நகைச்சுவை நடிகராகிவிட்டார். 
 
பார்த்திபன் கனவு மூலம் கவனிக்கத்தகுந்த இயக்குனராக கரு.பழனியப்பன் அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் இயக்கிய படங்கள் சரியாகப் போகவில்லை. 
 
கடைசியில் தானே நடித்து ஒரு படத்தை இயக்கினார். அதுவும் சரிவராமல் இப்போது சந்திரா இயக்கத்தில் கள்ளன் படத்தில் நடித்து வருகிறார். நல்ல வேடங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருக்கிறார் அவரும்.
 
நடிகர்களாகியிருக்கும் இயக்குனர்கள் அனைவரும் தற்கால இளம் இயக்குனர்களுடன் நல்ல நட்பை பேணி வருகிறவர்கள். அவர்களின் படங்களின் கதை விவாதங்களில் கலந்து கொள்கிறவர்கள்.
 
பாண்டிராஜின் கதை விவாதங்களில் மூர்த்தியின் பங்களிப்பு அதிகளவில் இருக்கும். மூர்த்திக்காக ஒரு படத்தை தயாரிக்க பாண்டிராஜால் இயலாது. 
 
அதேநேரம் தனது படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் மூர்த்தியை நடிக்க வைக்க அவரால் முடியும். நடிகர்களாகும் இயக்குனர்களுக்கு குறைவில்லாமல் படங்கள் கிடைக்க இதுவும் ஒரு காரணம்.
 
பெரும் இயக்குனராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து, எப்படியாவது சினிமாவில் பிழைத்திருந்தால் போதும் என்ற நிலைமையில் நடிப்புதான் பலருக்கும் கை கொடுக்கிறது.
 
சாதனையைவிட வறுமை அண்டாமலிருப்பதுதான் மனிதனுக்கு முக்கியம். மூர்த்திக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்க நமது வாழ்த்துகள்.

Share this Story:

Follow Webdunia tamil