Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் சங்கம் செய்தது சரியா?

நடிகர் சங்கம் செய்தது சரியா?

ஜே.பி.ஆர்.

, ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2015 (13:00 IST)
அரசியல் அளவுக்கு விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது, தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கத்துக்கு சொந்தமான நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததை அடிப்படையாக வைத்து நடிகர் சங்கம் இரு அணிகளாக வடம் இழுக்கின்றன.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையிலான அணி ஒருபுறம். விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் அடங்கிய அதிருப்தி அணி மறுபுறம்.
 

 
நிலம் குறித்த அடிப்படை பிரச்சனை தவிர்த்து, இன்றைய நிர்வாகிகளின் கட்சி சார்ந்த அடையாள அரசியலும் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. சரத்குமார், ராதாரவி போன்றவர்களின் வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கைகளை அச்சம் காரணமாக திரையுலகினர் வாய்மூடி அனுமதித்தாலும் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதை நேரடிப் பேச்சுகளில் அவதானிக்க முடிகிறது.
 
நடிகர் சங்கத்தின் சமீபத்திய நடவடிக்கையை, திரைத்துறையை தாண்டி பலரும் விமர்சித்து வருகின்றனர்.
 
நீதிமன்ற உத்தரவு காரணமாக சங்கத்தின் உறுப்பினர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டனர். அதில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி, தொழில்முறையற்ற ஆயுள்கால உறுப்பினர் என குறிப்பிடப்பட்டு, சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்னமும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்கிறார்.
 
webdunia

 
அரசியலில் நுழைந்த உடனேயே சினிமாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தவர் ஜெயலலிதா. கருணாநிதி முதல்வராக இருந்த போதும் இல்லாத போதும் கதை, திரைக்கதை, வசனம் என்று தள்ளாத வயதிலும் பங்களிப்பு செலுத்தி வந்திருக்கிறார். அவை குறிப்பிடத்தகுந்தவையா தரமானவையா என்பது வேறு விஷயம். ஆனால், தொடர்ந்து பங்களிப்பு செலுத்தி வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரை தகுதி நீக்கம் செய்து, பங்களிப்பே செய்யாத ஒருவரை இன்னும் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயுள்கால உறுப்பினராக தொடர்வது வெளிப்படையான அதிமுக ஆதரவு நடவடிக்கை மற்றும் திமுக காழ்ப்புணர்வின் வெளிப்பாடு. 

கலையுலகம் ஒருபோதும் அரசியல் கட்சிகளின் அடையாளமாக தங்களை மாற்றிக் கொள்ளலாகாது. அப்படிதான் மலையாள, கன்னட, தெலுங்கு, இந்தி திரையுலகங்கள் இயங்குகின்றன. ஆனால், தமிழகத்தில் ஆளும்கட்சி எதுவோ அவற்றின் தலைமையை குளிர்விக்கும் சேகவனாக கலையுலகம் தொடர்ந்து தன்னை தரம் தாழ்த்தி வந்துள்ளது. அந்த அடிமைத்தனத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் நடிகர் சங்கத்தின் இந்த செயல்பாடு.
 
webdunia

 
மேலும், திரைத்துறையில் எந்த பங்களிப்பும் செலுத்தாத ராதிகாவின் மகள் ரேயான், ராதாரவியின் மகன் ஹரி என பலரும் வாக்களிக்கும் உரிமையுள்ள உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
தென்னிந்திய நடிகர் சங்கம் எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற கலைஞர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர். தலைவராக இருந்த போது, அவர் வெளியிட்ட சினிமா புத்தகத்தில் நடிகர் சங்க உறுப்பினர்களின் பெயர்கள் உடனுக்குடன் முகவரியுடன் வெளியிடப்படும். அன்று உறுப்பினர்களின் விவங்கள் வெளிப்படையாக வைக்கப்பட்டன. முகவரி மாறினால் அதையும் பிரசுரித்தார் எம்.ஜி.ஆர். 
 
ஆனால், இன்று நீதிமன்றம் சென்று வாதாடிதான் உறுப்பினர்களின் பட்டியலையே வாங்க முடிகிறது. அதிலும் அரசியல் சார்பு குளறுபடிகள்.
 
எம்.ஜி.ஆரைப்போல் ஆக ஆசைப்படும் நடிகர்கள்தான் எம்.ஜி.ஆரிடம் காணப்பட்ட இதுபோன்ற அரிய குணங்களை கடைபிடிக்காமல் புறந்தள்ளுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil