Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினி பாப்கார்ன் - சார் ஒரு நிமிஷம்... நாத்திகனை ஆத்திகனாக்கிய ஸம்பாஷணை தவறுதானே?

சினி பாப்கார்ன் - சார் ஒரு நிமிஷம்... நாத்திகனை ஆத்திகனாக்கிய ஸம்பாஷணை தவறுதானே?

ஜே.பி.ஆர்.

, திங்கள், 8 டிசம்பர் 2014 (11:29 IST)
நாத்திகனை ஆத்திகனாக்கிய ஸம்பாஷணை
 
காவியத்தலைவன் படத்தைப் பற்றி நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் நிறைய விமர்சனங்கள். அதில் நம்மை கவர்ந்தது படத்தில் இடம்பெறும் பகத்சிங் குறித்த சித்திரம். காவியத்தலைவனில் பகத்சிங் வந்தே மாதரம் என்று முழங்குகிறார். நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்று எழுதிய பகத்சிங் தனது வாழ்நாளில் இன்குலாப் சிந்தாபாத் என்று கர்ஜித்திருக்கிறாரே அன்றி வந்தே மாதரம் என்று இன்றைய காக்கி டவுசர்களின் குரலை ஒருபோதும் எதிரொலித்ததில்லை.
நாத்திகனுக்கு ஏனய்யா ஆத்திக கோமணம் கட்டுகிறீர்கள் என்று விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்கள் சில தோழர்கள். நியாயம்தானே. ஸம்பாஷைணையின் துணையுடன் வரலாற்றை திருத்த முற்படுவது எந்தவிதத்தில் நியாயம் சொல்லுங்கள்.

கடவுளே இதற்கு ஒரு முடிவை தாரும்
 
சமீபத்திய ஆனந்தவிகடன் இதழில் ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விமர்சிக்கும் அதிகப்பிரசங்கிகளுக்கு அடித்தொடையில் சூடு வைத்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் அரசியலின் ஆழம் தெரியும், ஆண்டவன் விரும்பினால் வருவேன் என்று தெளிவாக சொல்லியிருக்கிறார். அதை புரிஞ்சுக்காத கூறுகெட்ட பயல்கள்தான் ஏதேதோ பேசுகிறார்கள் என்ற ரீதியில் ரவிக்குமார் கூறியிருந்தார்.
webdunia
ஆ... எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். அதே பேட்டியில் ரஜினி இமயலைக்கு இனி போவாரா என்ற கேள்விக்கு, சாமியாராகும் எண்ணத்துடன் அவர் இனிமேல் இமயலைக்கு போகவே மாட்டார், வேண்டுமென்றால் சுற்றுலா பயணியாக செல்லலாம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார் ரவிக்குமார்.
 
படிப்பறிவோ பட்டறிவோ இல்லாத முட்டாளான நம்முடைய சந்தேகம் இதுதான். அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்பதை ஆண்டவன்தான் முடிவு செய்யணும் என்கிறீர்கள். சரி. ஆனால் அந்த ஆண்டவன் சம்பந்தப்பட்ட விஷயத்தையே இன்னொருவர் - அதாவது ரவிக்குமார் திட்டவட்டமாக முடிவு செய்கிறார். ரஜினி இனிமேல் இமயமலைக்கு செல்ல மாட்டார் என்று. ஆண்டவன் விஷயத்தில் அடுத்த நபருக்கே இவ்வளவு உறுதி இருக்கும்போது ஆண்டவன் தீர்மானிப்பான் என்கிற அரசியல் விஷயத்தில் ஏன் ரஜினிசார் உங்களால் ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை? உங்களின் ஆன்மீகத்தின் எல்லை எது என்று அடுத்த நபரால் திட்டவட்டமாக சொல்ல முடிகிறது. ஆனால் அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை உங்களால் கூட தெளிவாக கூற முடியவில்லை. இது தடுமாற்றமா இல்லை ஏமாற்றுதலா?
 
ப்ளீஸ்.. இனிமேலாவது, வந்தா வருவேன்... வராட்டி வரமாட்டேன் என்று தமிழகத்தை குழப்பாமலிருங்கள்.

ஆளுக்கொரு நீதி...?
 
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இந்த வருடம் இரு தமிழ்ப் படங்களை திரையிடுகிறார்கள். அதனை பெரும் சாதனையாக சில இதழ்கள் கருத்து தெரிவித்துள்ளன. சென்ற வருடம் கமல் பெங்களூரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். தமிழ்ப் படம் திரையிடப்படாத திரைவிழாவில் கமல் கலந்து கொள்ளலாமா என்று தட்டிக் கேட்டோம். அதனால்தான் இந்த வருடம் தமிழ்ப் படத்தை திரையிட்டிருக்கிறார்கள் என்று வெற்றிக்கு சிலர் சொந்தம்வேறு கொண்டாடுகிறார்கள்.
webdunia
சரி. இந்த மாதம் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கயிருக்கிறது. இதில் எத்தனை கன்னடப் படங்களை திரையிடுகிறார்கள்? இதற்கு முந்தைய வருடங்களில்? கர்நாடகாவில் திரைப்பட விழா நடத்தினால் தமிழ்ப் படத்தை திரையிட வேண்டும். இல்லையென்றால் அது தமிழனுக்கு அவமானம். தமிழகத்தில் நடத்தப்படும் திரைப்பட விழாவில் கன்னடப் படங்கள் திரையிடப்படுவதில்லை. உங்கள் கூற்றுப்படி அது கன்னடர்களுக்கு அவமானம். தமிழனுக்கு குரல் கொடுத்த நீங்கள் கன்னடர்களின் அவமானத்துக்கு குரல் கொடுத்தீர்களா? குரல் கொடுப்பதுதானே பத்திரிகை தர்மம்?
 
தமிழகத்தில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கன்னடப் படங்களை திரையிட மாட்டீர்கள். ஆனால் கர்நாடாகாவில் நடக்கும் திரைப்பட விழாவில் தமிழ்ப் படம் திரையிட வேண்டும். இல்லையென்றால் தமிழனுக்கு அவமானம் என்று கொடி பிடிப்பீர்கள். எந்த ஊரு நியாயம்யா இது?

Share this Story:

Follow Webdunia tamil