500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் திடீர் அறிவிப்பால் கறுப்புப்பணம் ஒழியும் என்கிறார்கள். இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக சாதாரண மக்கள் தங்களுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கலை பொறுத்துக் கொள்ள வேண்டும் என மோடியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கறுப்புப்பணம் நோட்டுகளாகத்தான் இருக்கும் என்று எண்ணுவதே ஒரு மித் தான். ஆனால், கறுப்புப்பணம் பெரும்பாலும் முதலீடாக மாற்றப்படும், அது மோடி அரசுக்கும் தெரியும், அதனை தடுக்க எதுவும் செய்யாத மோடி அரசு, கறுப்புப்பணம் நோட்டுகளாகத்தான் இருக்கும் என்ற பொதுமக்களின் மித்தை பயன்படுத்தி இப்படியொரு நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இதனால் கறுப்புப்பணம் ஒழியப்போவதில்லை. அதேநேரம் சாதாரண அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்நாள் எல்லாம் வியர்வை சிந்தி சம்பாதித்து சேர்த்து வைத்திருக்கும் சொற்ப பணத்துக்கும் கணக்கு காட்ட வேண்டியிருக்கும், அதற்கு அவர்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். மோடியின் இந்த நடவடிக்கையால் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் ஒருசிலரும் பாதிக்கப்படலாம். ஆனால், கறுப்புப்பணத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் கார்ப்பரேட்களும் பெருமுதலாளிகளும் இந்த நடவடிக்கையால் துளியும் பாதிக்கப்பட போவதில்லை என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் கூறுவது உண்மை என்பது போலவே மோடி அரசின் இதுநாள் வரையான நடவடிக்கைகள் அமைந்துள்ளன. பிஎப் பணத்துக்கும் வரி போட்டு சாதாரணர்களை கசக்கும் மோடி அரசு, அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடிகளை தள்ளுபடி செய்கிறது, வரிச்சலுகை அளிக்கிறது. கார்ப்பரேட்களுக்கு லட்சம் கோடிகளை தாரைவார்த்துவிட்டு சாதாரணர்களை கசக்கிப் பிழிவது எந்த மாதிரியான நடவடிக்கை? மோடி கார்ப்பரேட்களுக்கு அளிக்கும் சலுகைகளை மறைக்கவே சாதாரணர்களை கசக்கிப் பிழிகிறார் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால், இதையெல்லாம்கவனத்தில் கொள்ள நமது நட்சத்திரங்களுக்கு நேரம் ஏது?
மோடியின் நடவடிக்கைக்கு அவர்களின் ரியாக்ஷன் என்ன, பார்ப்போம்.
ரஜினி - வாழ்த்துகள் பிரதமர் மோடி ஜி. புதிய இந்தியா பிறந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அதற்கு மோடி பதில் ட்வீட் செய்துள்ளார். நன்றி. வளமானதும் எல்லா தரப்புகளையும் உள்ளடக்கக் கூடிய ஊழலற்றதுமான இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் தோளோடு தோள் சேர்க்க வேண்டும் என்று அவர் பதில் ட்வீட் செய்துள்ளார்.
கமல் - வணக்கங்கள் திரு. மோடி. இந்த முடிவு கட்சிகள் பாகுபாடின்றி அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்பட வேண்டும். முக்கியமாக ஒழுங்காக வரி கட்டுபவர்களால் என்று கமல் ட்வீட் செய்துள்ளார். அதற்கு மோடி, இந்த முடிவு, மேம்பட்ட இந்தியாவில் வாழத் தகுதியான நேர்மையான குடிமகன்களைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது என பதில் ட்வீட் செய்துள்ளார்.
தனுஷ் - அசாத்தியமான முடிவு மோடி ஜி. வரலாற்றுச் சிறப்புமிக்கது. தலை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த். தூய்மையான இந்தியா. பெருமைப்படும் இந்தியன்.
சித்தார்த் - அன்புள்ள திரு. நரேந்திர மோடி. நீங்கள் ஒரு லெஜண்ட். தேசப்பற்றுள்ள ஒவ்வொரு இந்தியனும் இன்றிரவு நன்றாக உறங்குவார்கள். இந்த நாளுக்கு நன்றி. தூய்மையான இந்தியா. ஜெய்ஹிந்த்.
அனிருத் - இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்த பிரதமரை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்.
அதர்வா - ஊழலுக்கு அடி. காலம் மாறுகிறது கனவு மெய்ப்படுகிறது. ஒரு மேம்பட்ட, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஜெய்ஹிந்த்.