Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் 3 திரைப்படங்கள்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் 3 திரைப்படங்கள்
, ஞாயிறு, 27 செப்டம்பர் 2015 (13:02 IST)
சென்ற வருடங்களில் அதிக மலையாளப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன. அதிதி, மாலினி பாளையங்கோட்டை, உன் சமையல் அறையில், 36 வயதினிலே, பாபநாசம் என பல படங்கள்.

பெங்களூர் டேய்ஸ் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. இவை தவிர வேறு சில படங்களும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரவுள்ளன.
 
மெமரிஸ்:
 
த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோ‌சப், த்ரிஷ்யத்துக்கு முன்பு எடுத்தப் படம், மெமாரிஸ். பிருத்விராஜ் நாயகன். காலையில் எழுந்ததும் பிவரேஜ் சென்று இரண்டு முழுபாட்டில் மது வாங்கி குடிப்பதுதான் பிருத்விராஜின் ஒரே வேலை.


 

திறமையான போலீஸ் அதிகாரியான அவரை குடியில் தள்ளியது, அவரது மனைவி மற்றும் மகளின் மரணம். பிருத்விராஜால் கைது செய்யப்படும் ஒரு கிரிமினல், அவரது கண் முன்பே அவரது மனைவியையும், மகளையும் சுட்டுக் கொன்று விடுகிறான். அது அவரை தீராத குடிநோயாளியாக மாற்றுகிறது.
 
இந்த நேரத்தில், நகரில் மர்மமான முறையில் திருமணமான நடுத்தரவயது ஆண்கள் கொல்லப்படுகிறார்கள். அதனை கண்டுபிடிக்கும் பொறுப்பு பிருத்விராஜுக்கு தரப்படுகிறது. முதலில் மறுப்பவர், அம்மாவின் பிடிவாதத்தால் ஒப்புக் கொள்கிறார். தொடர் கொலைகளை நடத்தும் சைக்கோவை அவர் எப்படி படிப்படியாக துப்பறிந்து கண்டுபிடிக்கிறார் என்பது கதை.
 
கொரிய த்ரில்லர்களுக்கு இணையாக கதை, திரைக்கதை, மேக்கிங் என அனைத்திலும் மிரட்டிய படம், மெமரிஸ். த்ரிஷ்யத்தைவிட ஒருபடி மேல் என்பதே பல ரசிகர்களின் கணிப்பு. 
 
இந்தப் படத்தை ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் அருள்நிதியை வைத்து எடுத்து வருகிறார். கதை, திரைக்கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் தமிழிலும் இப்படம் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

பாண்டிப்படா:
 
பாண்டி என்பது, மலையாளிகள் தமிழர்களை குறிப்பிடும் சொல். கிட்டத்தட்ட ஒரு மோசமான வார்த்தை, அவர்களின் அர்த்தத்தில். பாண்டிப்படை என்பதுதான் பாண்டிப்படா.
 
webdunia

 
ரஃபி மெக்கார்டின் இயக்கிய இந்தப் படத்தின் உரிமையை சுந்தர் சி. வாங்கியுள்ளார். அவரே இயக்கி நடிப்பதாக திட்டம்.
 
திலீப் ஒரு மலையாளி, ஊரில் கடன்மேல் கடன்வாங்கி பிசினஸ் செய்து அனைத்திலும் நஷ்டத்தை சந்தித்தவர். அவருக்கு மிகக்குறைந்த விலைக்கு தமிழ்நாட்டில் ஒரு இடம் விலைக்கு வருகிறது. இப்போது வாங்கினால், உடனே பலமடங்கு அதிக விலைக்கு அந்த இடத்தை விற்க முடியும். மேலும், பல லட்சங்கள் கடன்வாங்கி அந்த இடத்தை வாங்குகிறார்.
 
அதன் பிறகுதான் குறிப்பிட்ட அந்த இடம், தாதாக்களான பிரகாஷ்ராஜ், ராஜன் பி.தேவ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதும், எதிரெதிர் துருவங்களான அவர்கள் அந்த இடத்தை யார் வாங்கினாலும் அவர்களை நையப்புடைப்பதும் திலீப்புக்கு தெரிய வருகிறது. இத்தனைக்கும் பிரகாஷ்ராஜின் சகோதரியைத்தான் ராஜன் பி.தேவ் திருமணம் செய்திருக்கிறார்.
 
இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தால் மட்டுமே இடத்தை விற்க முடியும் என்ற நிலையில், அந்த தீ விளையாட்டில் துணிந்து இறங்குகிறார், திலீப். நாயகன் அவர் என்றாலும் படம் நெடுக அமர்க்களம் செய்வது, பிரகாஷ்ராஜ். 
 
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் சுந்தர் சி. நடிக்க உள்ளார். மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

வெள்ளிமூங்கா:
 
2014 -இல் வெளியான இந்த நகைச்சுவை அரசியல் படத்தின் தமிழ் உரிமையையும் வாங்கியுள்ளனர். பிஜு மேனன் நடித்த இந்தப் படம் தமிழுக்கு எவ்வளவு தூரம் ஒத்துவரும் என்பது முதல் கேள்வி.
 
webdunia

 
அரசியலில் பெரிய ஆளாக வேண்டும், தான் பார்த்து விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய வேண்டும். இந்த இரண்டும்தான் வெள்ளிமூங்கா நாயகனின் இரண்டு லட்சியங்கள். 
 
முதல் லட்சியத்தின் முட்டுக்கட்டை கேரளாவின் பிரதான கட்சிகளான கம்யூனிஸ்டும், காங்கிரஸும். நாயகனோ இந்த இரண்டு கட்சியிலும் சேராதவன். வடக்கே உள்ள ஏதோ பெயர் தெரியாத கட்சியின் மாநில நிர்வாகி. அவர்கள் கட்சிக்கு கேரளாவில் எண்ணி ஐம்பது உறுப்பினர்கள் இருந்தால் அதிசயம். அதை வைத்து, தனது அரசியல் சதுரங்கத்தால் எப்படி கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் நாயகன் எம்எல்ஏ ஆகி மந்திரியும் ஆகிறான் என்பது கதை.
 
இதனுடன் சேர்ந்து அவனது காதல் கதையும் வருகிறது. அவன் விரும்பும் பெண், அவனுடன் படித்த தோழியின் மகள். அந்த தோழிக்காக இளம் வயதில் நாயகன் அடித்து துவைத்த நபர்தான் இப்போது, தோழியின் கணவன். இந்த இடியாப்ப சிக்கலில் எப்படி அனைவரின் சம்மதத்துடன் நாயகன் காதலியை கைப்பிடிக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய லாஜிக்குடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
 
இந்த மூன்று முக்கிய திரைப்படங்கள் விரைவில் தமிழில் தயாராக உள்ளன. இவை தவிர வேறு சில படங்களும் மலையாளத்திலிருந்து தமிழுக்கு இந்த வருடம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil