Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபம் - The Last Stand

விஸ்வரூபம் - The Last Stand
, திங்கள், 28 ஜனவரி 2013 (16:33 IST)
நாளை ஜட்ஜ்மெண்ட் டே. விஸ்வரூபம் திரையிடலாமா கூடாதா என்பதை நாளை தனது தீர்ப்பின் மூலம் நீதிபதி அறிவிப்பார். அது எப்படியிருப்பினும் - சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும் கமலின் பிரச்சனை உடனே தீரப்போவதில்லை.
FILE

படத்தைப் பார்த்தவர்கள் இணையத்தில் விமர்சனங்கள் எழுதியுள்ளனர். தொண்ணூறு சதவீதத்தினர் படம் நல்ல பொழுதுப்போக்கு திரைப்படம் என்று கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் இந்திய இஸ்லாமியர்களையோ அல்லது உலகத்தில் உள்ள பிற இஸ்லாமியர்களையோ கமல் எங்கே இழிவாக சித்தரித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் கதை அமெரிக்காவில் ஆரம்பித்து ஆப்கானிஸ்தான் செல்கிறது. மீண்டும் இறுதியில் பேக் டூ அமெரிக்கா. ஆப்கான் தீவிரவாதிகள் நியூயார்க் நகரை தரைமட்டமாக்க முயற்சிப்பதும் கமல் அதனை முறியடிப்பதும்தான் கதை. இதில் இந்தியா எங்கு வந்தது? தீவிரவாதிகளின் தலைவர் உமர் தமிழில் பேசுகிறார். கமல் ஆப்கானைச் சேர்ந்த அவருக்கு தமிழ் எப்படி தெரியும் என்று கேட்க, சிறிதுகாலம் கோவையிலும், மதுரையிலும் தங்கி இருந்ததாகச் சொல்கிறார்.

இதுபோன்ற ஜல்லியடிப்பு சீன்கள் இடம்பெறுவது முதல்முறையல்ல. ரோஜாவில் வரும் மெயின் வில்லனும் இதுபோல் ஒரு காரணம் கூறுவான். படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரம் ஆங்கிலத்திலோ இல்லை வேறு மொழியிலோ பேசிக் கொண்டிருந்தால் சரிதான் நீங்களும் உங்க படமும் என்று ரசிகன் எழுந்து போய்விடுவான். ஆப்கானிஸ்தான்காரன் தமிழ் பேசினால், அவனுக்கு எப்படிய்யா தமிழ் தெரியும்? கமல் டியூசன் எடுத்தாரா என்று லாஜிக் கொக்கி போடுவார்கள். இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க அந்த கதாபாத்திரத்திடமே, உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்ங்கிற கேள்வியை போட்டு நான் தமிழ்நாட்டில் கொஞ்ச காலம் கோழி யாவாரம் செய்தேங்கிற மாதிரி ஒரு பதிலை தருவார்கள். இந்த லாஜிக் புண்ணாக்குக்கு கமல் வைத்த காட்சிதான் அது. அது தவறு எனும்பட்சத்தில் அந்த காட்சியை மியூட் செய்யலாம், இல்லை படத்திலிருந்தே தூக்கிவிடலாம்.

இந்த சொத்தை காரணம் தவிர்த்து விஸ்வரூபத்தில் இஸ்லாமிய தலைவர்கள் டென்ஷன் ஆகிற அளவுக்கு எதுவும் இல்லை என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

படத்தில் வரும் கழுத்தை அறுக்கும் காட்சி, சிறுவன் துப்பாக்கியின் ரகத்தை சொல்வது, பொது இடத்தில் தூக்கில் போடுவதெல்லாம் ஆப்கானிஸ்தானில் நடப்பது. அங்குள்ள தீவிரவாதிகள் செய்வது. கழுத்து அறுப்பு காட்சிகளையெல்லாம் அவர்களே படம் பிடித்து பல வருடங்களுக்கு முன்பே இணையத்தில் வெளியிட்டு நாங்க எவ்ளோ மோசமானவங்க என்று உலகத்துக்கு பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள். அந்த தீவிரவாதிகளின் செயல்களை கமல் படத்தில் காட்டியிருக்கிறார். இதில் எங்கு இஸ்லாமியர்கள் வந்தார்கள்? தாலிபன் தீவிரவாதிகளை அப்துல்லா, உமர் என்று காட்டாமல் ராமன், முருகேசன் என்றா காண்பிக்க முடியும்?

எந்தவாதமும் எடுபடாத நிலையில் கமலுக்கு வேறு கதையே இல்லையா, ஆப்கானிஸ்தானுக்கு ஏன் போனார் என்கிறார்கள். அதாவது ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளைப் பற்றி படமெடுத்தால் மொத்த இஸ்லாமியர்களும் அப்படிதான் என்றொரு தோற்றம் ஏற்பட்டுவிடுமாம். என்ன லாகொக்ப்பா இது? பின்லேடனும் இஸ்லாமியர்தான். அவன் செய்த அட்டூழியங்களைப் பார்த்து இந்திய முஸ்லீம்ங்களை அப்படி யாரேனும் நினைத்தார்களா? ஏன் மும்பையில் தாக்குதல் நடத்திய கசாப்பும் மற்றவர்களும் இஸ்லாமியர்கள்தான். அதை வைத்து இந்திய முஸ்லீம்களை தவறாக யார் நினைத்தார்கள்? நிஜமாக ஒரு தாக்குதல் நடந்து எக்கச்சக்கமான உயிர்கள் பறிக்கப்பட்ட போது கூட இந்திய இஸ்லாமியர்களின் மீது காழ்ப்புணர்வு கொள்ளும்விதத்தில் - இஸ்லாமிய சகோதரர்களே உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் பக்கத்துவீடு எதிர்த்த வீடு சகோதரர்கள் உங்களிடம் நடந்து கொண்டார்களா? எனில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து உங்கள் சுற்றமும், நட்பும் உங்களை தவறாக நினைக்கும் என்று சொல்வது உங்களை ஒருபோதும் தவறாக நினைக்காத அவர்களை கொச்சைப்படுத்துவது ஆகாதா?

மத, சாதி, இன, மொழி, அரசியல் ரீதியாக இயங்கும் தலைவர்களுக்கு, கிடைக்கிற சின்ன விஷயங்களையும் ஊதிப்பெருக்க வேண்டிய தேவை உள்ளது. தலைவர்களின் உள்ளும், புறமும், முன்பும், பின்பும் அவர் சார்ந்த சாதி, மத, இன, மொழி, அரசியல் பற்றார்களே நிரம்பி இருக்கிறார்கள். ஒரு இந்து மடாதிபதியை, போப்பாண்டவரை, ஒரு முஸ்லீம் தலைவரைச் சுற்றி மற்ற மதத்தினர் இருப்பதில்லை. ஒரு அரசியல் கட்சி தலைவரை சுற்றி அவரது கட்சிக்காரர்களே நிரம்பியிருக்கிறார்கள். கட்சியில் இருந்து ஒருவர் நீக்கப்பட்டால் அவருடன் மற்ற கட்சிக்காரர்கள் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது என கட்சி தலைவர்கள் விடும் அறிக்கையை நாம் காலம் காலமாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சாதாரண ஜனங்களைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள். எல்லா சாதி, மத, இன, மொழி, அரசியல் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். தலைவர்களின் தூண்டிவிடும் பேச்சுக்கு நாம் செவி கொடுக்கும் போது, அவர்களின் வார்த்தைகளை உண்மை என நம்பும்போது தருமபுரியைப் போல் நமது அருகில் வசிப்பவர்களையே வேட்டையாடுகிறவர்களாக அல்லது அருகில் இருப்பவர்களால் வேட்டையாடப்படுகிறவர்களாக கீழிறங்கிவிடுகிறோம். தலைவர்களின் மயிர்கூட இதில் சேதமடைவதில்லை.
webdunia
FILE

இஸ்லாமியர்களின் மீதும், இஸ்லாம் மதத்தின் மீதும் உலகில் ஏதேனும் அதிருப்தி நிலவுகிறது என்றால் அதற்கு முழுப்பொறுப்பானவர்கள் ஆப்கான் தீவிரவாதிகளைப் போன்றவர்களே. அவர்களின் மன்னிக்க முடியாத வன்முறைதான் இஸ்லாத்தின் மீது நம்பிக்கையுடன் வாழும் மற்ற 99 விழுக்காடு இஸ்லாமியர்களின் இருப்பையும், வாழ்வையும் தொந்தரவுக்குள்ளாக்குகிறது.

இந்து அடிப்படைவாதிகளின் வன்முறைக்கான எதிர்ப்பு இந்துக்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். கிறிஸ்தவ அடிப்படைவாதிகளின் வன்முறைக்கான எதிர்ப்பு கிறிஸ்தவர்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். சாதி தலைவர்களின் வன்முறைக்கான எதிர்ப்பு அந்தந்த சாதிகளிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அதுபோல மதத்தின் பெயரால் வனமுறையில் இறங்கும் ஆப்கான் தீவிரவாதிகளுக்கான எதிர்ப்பு அம்மதத்தினரின் மத்தியிலிருந்துதான் தொடங்க வேண்டும். வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைவிட உள்ளிருந்து வரும் எதிர்ப்புகள்தான் முக்கியமானது. உலகமெங்கும் சண்டித்தனம் செய்யும் அமெரிக்கா வியட்நாம் போரின் போது உள்ளூரில் போருக்கு எதிராக நடந்த கிளர்ச்சியால்தான் போரை கைவிட்டு மண்டியிட்டது.

இறுதியாக...

மும்பையில் தாக்குதல் நடத்திய கசாப்பும் பிறரும் மதரீதியாக இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களை இந்தியர்கள் எவரும் இஸ்லாமியர்களாக பார்க்கவில்லை, தீவிரவாதிகளாகவே பார்த்தனர். இதே இஸ்லாமிய தலைவர்களும் அவர்களை இஸ்லாமியர்களாக அல்ல தீவிரவாதிகளாகவே பார்த்தனர், பேசினர். எனில்,

கசாப்பைவிட பன்மடங்கு கொடியவர்களான, கசாப் போன்றவர்களை உருவாக்குகிற ஆப்கான் தீவிரவாதிகளை தீவிரவாதிகளாகப் பார்க்காமல் இஸ்லாமியர்களாகப் பார்ப்பது ஏன்? இது சரியா?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil