Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் முன்...

பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் முன்...
, வியாழன், 13 பிப்ரவரி 2014 (18:07 IST)
FILE
பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த திரையுலகமே குவிந்துள்ளது. ரசிகர்கள் சாரைசாரையாக வந்து போகிறார்கள். பூ தூவி அஞ்சலி செலுத்தி நாளை படமாக்கி தொங்கவிடுவதுடன் கடமையை முடித்து கைகழுவும் அவசர உலகம் இது. இந்த நேரத்தில் பாலுமகேந்திராவின் நிறைவேறாத இரண்டு கனவுகளை நினைவுப்படுத்துவது அவசியம்.

தனது கடைசி காலத்தில் பாலுமகேந்திரா முப்பது பேர் கூடும் இலக்கிய, சினிமா நிகழ்வுகளுக்கும்கூட சலிக்காமல் ஓடி வந்திருக்கிறார். நல்ல சினிமா மீது அவருக்கு இருந்த அடங்காத ஆசையும், இலக்கிய தாகமுமே அவரை செலுத்தியது. எல்லா இடத்திலும் நான் சொல்வதுதான், அதைதான் இங்கேயும் சொல்கிறேன் என்று இரண்டு விஷயங்களை மீண்டும் நினைவுப்படுத்துவார்.

தமிழ் சினிமாவுக்கென்று ஆவணக் காப்பகம் அமைக்க வேண்டும். சினிமா ரசனை வகுப்பை பள்ளிகளில் தொடங்க வேண்டும்.

இந்த இரண்டையும் அவர் கோரிக்கையாக முன் வைக்காத மேடைகள் இல்லை. வரிச்சலுகைக்காகவும், இலவச வீட்டுமனைக்காகவும், படப்பிடிப்பு வாடகையை குறைக்கவும் இன்னும் எதெதற்கோ முதல்வரையும் மற்றவர்களையும் சந்தித்த தமிழ் சினிமா பிரதிநிதிகள் பாலுமகேந்திராவின் கோரிக்கையை ஒரு பொருட்டாக மதித்ததேயில்லை. அவரின் கோரிக்கையில் இருந்த நியாயத்தையும் தேவையையும் உணரக் கூடிய மனது அவர்களிடம் இல்லை.

அதன்பிறகுதான் தீவிர இலக்கியம், தீவிர சினிமா பேசும் முப்பது பேர் கூட்டத்திடம் தனது கோரிக்கையை முன் வைக்க ஆரம்பித்தார். பாலுமகேந்திரா இயக்கிய பல படங்களின் நெகடிவ்கள் இன்று இல்லை. எல்லாம் அழிந்துவிட்டன. இது அவருடைய படங்களுக்கு மட்டும் நேர்ந்த கதியல்ல. தமிழில் முக்கியமான படங்கள் அனைத்தின் கதியும் இதுதான்.
webdunia
FILE

தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பின் 1940 வரை வெளியான நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்றிரண்டு படங்களின் பிரதி தவிர எதுவும் நம்மிடையே இல்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமேயும். நடித்தவர்கள், படத்தின் கதை, தொழில்நுட்பக் கலைஞர்கள் எதுவும் தெரியாது. பாலுமகேந்திரா படங்கள் இயக்கத் தொடங்கியது எழுபதுகளில். அப்போது எடுத்தப் படங்களின் நெகடிவ்களும் இல்லை. ஆவணப்படுத்துவதில் தமிழ் சமூகத்தைப் போல் பொறுப்பற்ற சமூகம் வேறு இருக்க முடியாது. இதனை கவலையுடன் அணுகிய ஒரே கலைஞன் பாலுமகேந்திரா.

இன்றுவரை இதற்கான பாஸிடிவ்வான பதில் அரசிடமிருந்தோ, திரைத்துறையிடமிருந்தோ வரவில்லை.

அவர் வலியுறுத்திய இன்னொரு விஷயம் சினிமா ரசனையை பள்ளிப் படிப்பிலேயே சொல்லித் தர வேண்டும் என்பது. ஆவணக்காப்பகத்துக்கு செவி சாய்த்தவர்கள் கூட இந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. சினிமாவை ரசிப்பதற்கு பயிற்சி எதுக்கு? பார்த்தா தெரிஞ்சிடப் போகுது. இதுக்கெல்லாம் வகுப்பா? இந்தாளுக்கு வேலையில்லை என காதுபட பேசிய சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவை சினிமாவாகப் பார்க்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனதால்தான் சினிமாவால் பிரபலமடைந்த ஐந்து பேரை முதலமைச்சராக்கினோம். எழுத்துக்கூட்டிப் படிப்பதற்கே மூன்று வயதில் பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கையில் சினிமா போன்ற ஒரு கலை ஊடகத்தை புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் அதற்கான ரசனை பயிற்சி அவசியம். குளிப்பதும், பல் துலக்குவதும் கூட நாம் கற்றுக் கொண்டதே தவிர தானாக வந்தது இல்லை.
webdunia
FILE

பரந்துபட்ட வாசிப்பனுவத்தின் வழியாகவே ஒரு இயக்குனரால் தொடர்ச்சியாக இயங்க முடியும் என்று பாலுமகேந்திரா நம்பினார். அந்த புரிதலில் இருந்து உருவானதுதான் அவரின் சினிமா ரசனை கல்வி. அதனை முடிந்த மட்டும் தனது உதவி இயக்குனர்களுக்கு அவர் ஊட்டினார். தனது சினிமா பட்டறையில் பயின்றவர்களுக்கு அது குறித்து சொல்லித் தந்தார்.

பாலுமகேந்திராவின் இந்த இரு கோரிக்கைகளுக்கும் செயல்வடிவம் தருவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவருக்கு நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil