Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்யானந்தாவை விமர்சிக்கும் சொர்க்கம் என் கையில் - சர்ச்சைக்குரிய பிளாஷ்பேக்

நித்யானந்தாவை விமர்சிக்கும் சொர்க்கம் என் கையில் - சர்ச்சைக்குரிய பிளாஷ்பேக்

ஜே.பி.ஆர்

, வெள்ளி, 25 ஜூலை 2014 (12:01 IST)
கன்னட தயாரிப்பாளரும், இயக்குனரும், இசையமைப்பாளருமான மதன் படேல் தயாரித்து இயக்கியிருக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு இந்து தர்மா சக்தி என்ற அமைப்பின் செயலாளர் என்.தேவசேனாதிபதி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பது -
'சொர்க்கம் என் கையில் என்ற திரைப்படத்தை பெங்களூரை சேர்ந்த மதன்பட்டேல் என்பவர் இயக்கி, தயாரித்துள்ளார். இந்த படத்தில், இந்து மத சன்னியாசிகள் பெண் பக்தர்களை மயக்குவது போல பல அவதூறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்து மதத்தில் சன்னியாசிகள், கடவுளின் தூதர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், இந்த படத்தில் அந்த சன்னியாசிகளை கேவலப்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 
 
இந்த படம் முதலில் கன்னட மொழியில் தயாரிக்கப்பட்டது. ஆனால், இந்த படம் பொதுமக்கள் பார்ப்பதற்கு தகுதியில்லை என்று கர்நாடக மாநில திரைப்பட தணிக்கை குழு கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த படத்தை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, சொர்க்கம் என் கையில் என்ற தலைப்பில் படத்தை வெளியிட உள்ளனர். இதற்கான தணிக்கை (சென்சார் போர்டு) சான்றிதழையும் பெற்றுள்ளனர். 
 

எனவே, இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். சொர்க்கம் என் கையில் படத்தை வெளியிட அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான மதன்பட்டேலுக்கு தடை விதிக்க வேண்டும். இந்து மத சன்னியாசிகளை அவதூறாக சித்தரித்துள்ள மதன்பட்டேல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.'
webdunia
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, இரண்டு வாரத்துக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர், திரைப்பட தணிக்கைதுறை தலைவர், போலீஸ் கமிஷனர், படத்தின் தயாரிப்பாளர் மதன் படேல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
 
சொர்க்கம் என் கையில் படம் கன்னடத்தில் 2010 -ல் தயாரான சுவாமி சத்யானந்தா என்ற படத்தின் தமிழ் டப்பிங். நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் அந்தரங்கமாக இருந்த வீடியோ சன் தொலைக்காட்சியில் வெளியிட்டதை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை மதன் படேல் தயாரித்து இயக்கினார். நித்யானந்தாவை நினைவுப்படுத்தும் சாமியார் கதாபாத்திரத்தில் ரவி சேத்தன் நடித்தார். 
 

2011 -ல் இந்தப் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் சட்ட நடவடிக்கை எடுத்தது. மதன் படேலும், ரவி சேத்தனும் நித்யானந்தாவிடம் 3.5 கோடிகள் கேட்டு மிரட்டியதாக குற்றஞ்சாட்டியது. நித்யானந்தாவின் புகழை கெடுக்கும்வகையில் எடுக்கப்பட்டிருக்கும் சுவாமி சத்யானந்தா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். படத்துக்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டது. நீதிமன்றம் படத்தை வெளியிடவும், விளம்பரம் செய்யவும் தடை விதித்தது.
webdunia
அதனை எதிர்த்து பெங்களூரு உயர்நீதிமன்றத்துக்கு சென்றார் மதன் படேல். படமும் ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கு ஐந்து இடங்கள் எடிட் செய்யப்பட்டு ஏ சான்றிதழ் கிடைத்தது.
 
2011 -ல் தனது படத்தை தெலுங்கில் அதே பெயரில் டப் செய்து வெளியிட முயன்றார் மதன் படேல். அங்கும் நித்யானந்தாவின் தியான பீடம் வழக்குத் தொடர்ந்து தடை வாங்கியது. இறுதியாக 2013 -ல் யுஏ சான்றிதழுடன் சுவாமி நித்யானந்தா படம் யாரிவனு என்ற பெயரில் கன்னடத்தில் வெளியானது. நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 

கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் சட்ட போராட்டம் நடத்திய சுவாமி சத்யானந்தா படம்தான் தமிழில் சொர்க்கம் என் கையில் என்ற பெயரில் வெளியாக உள்ளது. அதற்குதான் தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
webdunia
வழக்கை தொடுத்திருக்கும் தேவசேனாதிபதி தனது மனுவில், இந்து மத சன்னியாசிகள் பெண் பக்தர்களை மயக்குவது போல பல அவதூறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்து மதத்தில் சன்னியாசிகள், கடவுளின் தூதர்களாக கருதப்படுகின்றனர். ஆனால், இந்த படத்தில் அந்த சன்னியாசிகளை கேவலப்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவில் பல இந்து சாமியார்கள் பெண் பக்தர்களிடம் ஆபாசமாக நடந்து அடி வாங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கெதிராக ஒருபோதும் வாய் திறக்காதவர்கள்தான் தேவசேனாதிபதி போன்றவர்கள். சாமியார்களின் பிரம்மச்சாரியத்தை ரஞ்சிதாவுடன் காற்றில் பறக்கவிட்ட நித்யானந்தாவை விமர்சிக்கக்கூட தயங்கும் இவர்கள் அவர்களை குறித்து படம் எடுக்கும் போது மட்டும் இந்து, சாமியார்கள், புனிதம் என்றெல்லாம் பேசுவது போலியானது, சந்தர்ப்பவாதமானது.
webdunia

இந்து மதமும், சாமியார்களின் மீதான மரியாதையும் நித்யானந்தா போன்றவர்களால்தான் கேவலப்படுத்தப்படுகிறது. முதலில் அவர்களுக்கெதிராக தேவசேனாதிபதி போன்றவர்கள் குரல் தர வேண்டும். நித்யானந்தாவை விமர்சிக்க வலுவில்லாத இந்து பரிஷத் அமைப்புதான் மதன் படேலின் கன்னடப் படத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு மிரட்டலும் விடுத்தது. தப்பு செய்தவர்களை விட்டுவிட்டு அந்த தப்பை திரைப்படமாக்குவர்களின் மீது பாய்வது என்னவிதமான தர்மம்?
 
இது இந்து மதத்துக்கும், இந்து சாமியார்களுக்கும் மட்டுமல்ல எல்லா மதத்துக்கும், மதத் தலைவர்களுக்கும் பொருந்தும்.
 

Share this Story:

Follow Webdunia tamil