கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சாவதாரம் என்று சொல்லுவார்கள்.
முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர் பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று, அவருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அவருக்கு பிடித்த தின்பண்டங்களுடன் தயிர் சேர்த்தும், பாலையும் வெண்ணெயையும் கலந்தும் பக்தர்கள் ‘தஹிகலா’ தயாரிப்பதுண்டு. கிருஷ்ணர் மாடு மேய்க்கும்போது, கோபியர்கள் கொண்டுவரும் சாதங்களையும் கலந்து உண்பார். அதை இன்றும் பின்பற்றும் விதமாக, தஹிகலா தயாரிப்பது, வெண்ணெய் தாழியை உடைப்பது வழக்கத்தில் உள்ளது. இதுவே உறியடி விழாவாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணருக்கு வெண்ணெய் நிவேதனம் செய்யப்படுகிறது. கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். வரியைக் கட்ட மக்கள் வெண்ணெய் விற்க வேண்டியதாயிற்று. கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெய்யைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ன்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.