Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (12:33 IST)
குற்றம், குறைகளை பெரிதுப்படுத்திக் கொள்ளாமல் பெருந்தன்மையுடன் வாழ்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.07.2017 முதல் 13.02.2019 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
 
ராகுவின் பலன்கள்:
 
  இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையையும், உத்யோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான் இப்பொழுது ஒன்பதாம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனதில் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். 
 
வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்திலும் கொஞ்சம் கூட நிம்மதியில்லாமல் தவித்தீர்களே! இனி குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். என்றாலும் ராகு 9-ம் வீட்டில் நுழைந்திருப்பதால் தந்தையாருக்கு செரிமானக் கோளாறு, கை, கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனத்தாங்கல் வரும். 
 
எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தந்தைவழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் அதிகமாகும். பாகப்பிரிவினை பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். கோர்ட், கேஸ் என்று போக வேண்டாம். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் வரும். தோல்விமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களை உள்வளர்த்துக் கொள்ளுங்கள்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் அஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலைக் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சொந்த-பந்தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் நெருங்கியவராக இருந்தாலும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். விபத்துகள் வந்து நீங்கும்.
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் திருதியாதிபதியும்-சுகாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். ஆன்மிகப் பெரியவர்கள் உதவுவார்கள். தாயாரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். வீட்டில் கழிவு நீர், குடி நீர் குழாய் பழுது வந்துப் போகும். வீண் பழிச் சொல் வரக்கூடும். 
 
  உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4-ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019 முடிய ராகுபகவான் பயணிப்பதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவர். அரசால் ஆதாயம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சனை நல்ல விதத்தில் முடிவடையும். 
 
  மாணவ-மாணவிகளே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 
 
கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். காதல் கசந்து இனிக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள். 
 
அரசியல்வாதிகளே! எதிர்ப்புகள் ஆங்காங்கே இருக்கும். தொகுதி மக்களிடையே சலசலப்புகளும் வரும். கோபப்படாமல் அமைதியாக மக்களை எதிர்கொள்வது நல்லது. தலைமைக்கு கட்டுப்படுங்கள். சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 
 
கலைத்துறையினரே! படைப்புகளை வெளியிடுவதில் தன்மானத்தை யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போய் சில வாய்ப்புகளைப் பெற்று படைப்புகளை வெளியிட்டு வெற்றி பெறுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளும் வரும். 
 
   வியாபாரத்தில் போட்டிகள் தளரும். தொழில் நுணுக்கங்களை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்துச் சேருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பிளாஸ்டிக், இரும்பு, கணினி உதிரி பாகங்களால் லாபம் அதிகரிக்கும். கடையை உங்கள் ரசனைக் கேற்ப அழகுப்படுத்தி, விரிவுப்படுத்துவீர்கள். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். 
 
உத்யோகத்தில் இருந்து வந்த வேலைச்சுமை குறையும். மேலதிகாரி உங்களின் நிர்வாகத் திறனை பாராட்டுவார். தள்ளிப் போன பதவியுயர்வு இனி உண்டு. நல்ல கல்வித் தகுதி, திறமை இருந்தும் வேலைக்காக பல அலுவலகங்கள் ஏறி இறங்கினீர்களே! இப்போது நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அயல்நாடுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்தும் சிலருக்கு புதிய வேலை அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகளும் நீங்கும். பணிகளை முடிப்பதிலிருந்த தோய்வு நீங்கும். 
 
கேதுவின் பலன்கள்:
 
  இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறத்திலும் பந்தாடிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து அமர்கிறார். எனவே சவால்களில் வெற்றி பெறுவீர்கள். மனோபலம் கூடும். பிரச்னைகளை சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கரை புரளும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். கம்பிரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். மனைவி ஆசைபட்ட டிசைனில் தங்க நகை வாங்கி தருவீர்கள். 
 
தாயாரின் நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். திருமணம், சிமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். தூக்கமின்மையால் அவதிப்பட்டீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுபடுவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். 
 
சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வழக்கில் வெற்றிப் பெறுவீர்கள். ஆனால் இளைய சகோதர வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போங்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கவனமாக கையாளுங்கள். நல்ல பதவியில் இருக்கும் பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.  
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2-ம் பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் தைரியம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல்கள் இருந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயங்களில் இழுபறி நிலை மாறும். பழைய கடன் பிரச்னையை நினைத்து கலங்குவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். சிறுசிறு நெருப்புக் காயங்கள், அலர்ஜி, சிறுநீர் பாதையில் அழற்சி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். 
 
உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால் உங்கள் செயலில் வேகம் கூடும். பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். அவருடன் மனக்கசப்புகள் வந்து நீங்கும். 
 
  7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் ஜுவனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் மகர ராசியில் கேது செல்வதால் செல்வாக்குக் கூடும். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கு சாதகமாகும். சங்கம், இயக்கம் இவற்றில் புதிய பதவிகள் தேடி வரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. ஓட்டை உடைச்சலாக இருந்த வாகனத்தை விற்றுவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள்.   
 
வியாபாரம் தழைக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கி நட்புறவாடுவீர்கள். 
 
இந்த ராகு-கேது மாற்றம் உங்களுக்கு புதிய அனுபவங்களை கற்றுத் தந்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். 
 
பரிகாரம்
 
சேலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீசொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீசுகவனேஸ்வரரை வில்வதளத்தால் அர்ச்சித்து வணங்குங்கள். தாயில்லா பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments