Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனம் - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2016 (00:28 IST)
எங்கும், எதிலும் புதுமையை புகுத்துபவர்களே! உங்களுக்கு லாப ராசியில் சந்திரன் நிற்கும் போது இந்த 2017-ம் ஆண்டு பிறப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள்.


 

பணப்புழக்கம் அதிகரிக்கும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப உங்ளை மாற்றி கொள்வீர்கள். நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். சிலர் உங்கள் ரசனைக் கேற்ப நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப்புகுவீர்கள். சொந்த ஊர் பொது காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சூரியன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிகளும், சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு 12-ல் கேது தொடர்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணருவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனைச் செலுத்துவீர்கள். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். ஆனால் ராகு 6-ம் வீட்டில் நிற்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

27.7.2017 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் செல்வாக்குக் கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும். ஹிந்தி, மலையாளம் பேசுபவர்களால் மாற்றம் உண்டாகும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளெல்லாம் அடுத்தடுத்து நடந்தேறும். ஆனால் ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் பொறுப்பற்றப் போக்கை நினைத்து வருந்துவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்ப்பதால் உங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அழகு, அறிவுக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் செல்வாக்குக் கூடும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைவதால் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். வீண் அலைக்கழிப்புகளும் அதிகமாகும். திடீர் பயணங்கள் இருக்கும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களை கவனக் குறைவாக கையாள வேண்டாம். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

14.12.2017 முதல் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிப்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் நல்லது நடக்கும். உங்களைக் குற்றம், குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களின் மனசு மாறும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும். சொந்த- ஆனால் வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 10-ல் அமர்வதால் வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆனால் உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்தீர்களே! கடையை வேறு இடத்திற்கு இனி மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களும் வர வாய்ப்பிருக்கிறது. இரும்பு, உணவு, ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களை ஆழம் பார்ப்பார்கள்.

உத்யோகத்தில் செப்டம்பர் மாதம் முதல் அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். ஆனால் மூத்த அதிகாரிகளின் பாராட்டுதலால் ஆறுதலடைவீர்கள். எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடின உழைப்பாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பாலும் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்காதீர்கள். பள்ளி கல்லூரி கால தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். திருமண விஷயத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் போராடி வெற்றி பெறுவீர்கள். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை பேச்சை தவிர்க்கப்பாருங்கள் கடைசி வரிசையிலேயே அமர்ந்திருக்காமல் முதல் வரிசையில் வந்தமருங்கள்.

கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும். மூத்த கலைஞர்களை விட அறிமுக கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும்.

இந்த 2017-ம் ஆண்டு அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதுடன், சின்ன சின்ன எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்