பஞ்சமி நாளில் ஸ்ரீவராஹி அம்மனை பூஜித்து வழிபட வேண்டிய நாள். வராஹி அம்மன் உள்ள ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.
சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவராஹி மிகவும் சக்தி வாய்ந்தவள். லோகமாதா பராசக்தியின் மறு வடிவம் என்று போற்றுகிறது புராணம். தஞ்சைப் பெரியகோயில் உள்ளிட்ட சில ஆலயங்களில் ஸ்ரீவராஹி தேவிக்கு தனி சந்நிதி உள்ளது.
இங்கு, பஞ்சமி திதியில் அன்னைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு, ஸ்ரீவராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்படும். இதன் பிறகு அன்னைக்கு சர்வ அலங்காரங்கள் செய்து, பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த செம்பருத்தி, செவ்வரளி, மல்லி போன்ற மலர்கள் சார்த்தி அன்னையை வழிபாடு செய்யலாம். பெண்கள் நினைத்தது நிறைவேற குங்கும அர்ச்சனை செய்து பிரார்த்தனையை செய்வார்கள். மேலும், சிறப்பாக பூசணிக்காயை சமமாக வெட்டி அதில் நல்லெண்ணெய் போட்டு விளக்கேற்றுவார்கள்.
பஞ்சமி திதி நாளில், ஸ்ரீவராஹி தேவியை வணங்கி வழிபட்டால், எதிரிகள் தொல்லை ஒழியும். எதிர்ப்புகள் விலகும். தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேறும். வழக்கு முதலான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.