பாற்கடலில் மகாலட்சுமியுடன் தோன்றிய பெருமை பெற்றது வலம்புரிச் சங்கு. இதில் இடம்புரிச் சங்கும் உண்டு. வலம்புரிச் சங்கு, ‘தட்சிணாவர்த்தி சங்கம்’ என்று வழங்கப்படும். இடம்புரிச் சங்கு ‘வாமாவர்த்த சங்கம்’ என்று வழங்கப்படும். மகாவிஷ்ணுவின் இடது கரத்தில் இருப்பது வலம்புரிச் சங்காகும்.
மகாலட்சுமிக்கு ஒப்பான சங்கு எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு லட்சுமி வசிக்கிறாள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி பெருமை பெற்றது. வலம்புரிசங்கில் நீர்விட்டு கும்பத்தின் மேல் வைத்து புஸ்பங்களினால் பூஜை செய்து ஆராதனை செய்து அதன் பரிசுத்தமான தீர்த்தம் சுவாமி சிலைகளில் அபிஷேகிக்கும் போது அத்தீர்த்தம் மகாபுண்ணிய தீர்த்தமாக விளங்குகிறது.
ஆலயங்களில் பிரதான சங்காக வலம்புரிச் சங்கு இடம் பெறும். சங்கின் அமைப்பு, அந்தப் பிரணவத்தை உணர்த்துகிறது. வலம்புரி கணபதியின் தும்பிக்கையைப் போல் தோற்றம் அமைந்திருக்கும். பாற்கடலைக் கடைந்த போது வந்த பல மங்கலப் பொருட்களில் இந்தச் சங்கும் ஒன்று.
இந்தச் சங்கு உதயம் ஆனதும் மஹாவிஷ்ணு, அதைத் தன் கரத்தில் வைத்துக்கொண்டு சங்கு சக்ரதாரி ஆனார். சங்கு ஐஸ்வர்யம், வீரம், மங்கலம் இவற்றைப் பிரதிபலிக்கும் பொருளாக அமைகிறது. வலம்புரிச் சங்கில் லட்சுமி, குபேரன் ஆகியோர் வாசம் செய்கிறார்கள். இதை வைத்துப் பூஜை செய்ய, சுபீட்சம் பெருகும். வியாதிகள் நீங்கும்.