Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாமி ஐயப்பனின் புனித திருஆபரண ஊர்வலம்!

Webdunia
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி சபரி மலையில் எழுந்தருளியுள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை மகர ஜோதி தரிசனமும் மிக மிக பிரசித்திப் பெற்றதாகும்!

webdunia photoWD
சுவாமி ஐயப்பனுக்கு நடைபெறும் மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு அவர் வளர்ந்த பந்தளம் நகரில் உள்ள பந்தளராஜா அரண்மனையில் இருந்து திருஆபரணம் கொண்டு செல்லப்படும்.

பந்தளத்தில் அச்சன்கோயில் ஆற்றை ஒட்டியுள்ள ஐயப்பனின் வலிய கோயிக்கால் என்றழைக்கப்படும் கோயிலிற்கு அருகில் உள்ள பந்தளராஜாவின் அரண்மனையில் இருந்து திருஆபரணம் கால்நடையாகவே சபரி மலைக்கு கொண்டு செல்லப்படும்.

மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஐயப்பன் வளர்ந்த இடமான பந்தளத்திற்கு வந்து அங்குள்ள கோயில் பிரார்த்தனை செய்ய பின்னர் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருஆபரணத்தை பக்தியுடன் தரிசித்துவிட்டுச் செல்வார்கள்.

இரண்டு மாத காலத்திற்கு இவ்வாறு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும் திருஆபரணம், மகர விளக்குப் பூஜைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது 12 ஆம் தேதி வலிய கோயிக்கால் சாஸ்தா கோயிலில் இருந்து மதியம் 1.30 மணிக்கு சபரி மலையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும்.

ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருஆபரணத்தை பந்தளராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த மூத்த குடும்ப உறுப்பினர் தலைமையில் கொண்டு செல்லப்படும். திருவாதிரநாள் ராகவவர்ம ராஜா அரசரின் தூதராக இருந்து திருஆபரண ஊர்வலத்தை தலைமையேற்றுச் செல்கிறார்.

webdunia photoWD
பந்தளம் கோயிலில் இருந்து திருஆபரணம் ஊர்வலம் புறப்படும்போது வானத்தில் அன்று மட்டும் ஒரு கழுகு தோன்றும். திருஆபரணம் கொண்டு செல்லப்படும் ஊர்வலப் பாதையில் வானில் அக்கழுகு தொடர்ந்து பறந்து வருவது இன்று வரை நடந்துவரும் ஓர் அதிசயமாகும்.

சுவாமி ஐயப்பன் வரலாறு!

ஐயப்பனின் பிறப்பு, வளர்ப்பு குறித்து பல்வேறு புராணங்கள் இருந்தாலும், அவர் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்தவர் என்றும், குழந்தையாய் பம்பை நதிக்கரையில் விடப்பட்ட ஐயப்பனை பிள்ளைப்பேறற்ற பந்தளராஜா ராஜசேகரன் கண்டெடுத்து அரண்மனைக்கு கொண்டு வந்து தனது வாரிசாக ஏற்றுக்கொண்டார் என்பதே பொதுவாக அறியப்பட்ட ஐயப்பனின் வரலாறாக உள்ளது.

webdunia photoWD
பந்தளம் அரண்மனையில் (இன்றைக்கும் அந்த அரண்மனை நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது) வளர்ந்த ஐயப்பன், அவரை பந்தளராஜா கண்டெடுக்கும் போது அவரது தலையில் மணி மாலை இருந்ததால் மணிகண்டன் என்றே பெயர் சூட்டப்பட்டு வளர்ந்தார். பந்தள நாட்டின் இளவரசராக மணிகண்டன் வளர்ந்தபோது ராஜா ராஜசேகரனின் மனைவி கருதரித்து ஆண் மகனைப் பெற்றெடுத்தார்.

ஐயப்பனை இளவரசராக பந்தளம் ராஜா முடிசூட்ட முற்பட்டபோது, அதனைத் தடுக்க பந்தள அமைச்சர் செய்த சதித் திட்டத்திற்கு ராணியும் உடந்தையானார்.

மணிகண்டனுக்கு பட்டம் சூட்டுவதைத் தடுக்க அவரை மாய்த்துவிட சதித்திட்டம் தீட்டப்பட்டது. மகாராணிக்கு வயிற்று வலி என்றும், அதற்கு மருந்தாக காட்டில் இருந்து புலிப்பாலை கொண்டுவர வேண்டும் என்றும் சதிக்கு உடன்பட்ட அரண்மனை வைத்தியர் கூற, தாயின் நோய் தீர்க்க ஐயப்பன் காட்டிற்குப் புறப்பட்டார். பந்தள ராஜா தடுத்தும் அதனை ஏற்காத மணிகண்டன் காட்டிற்குச் சென்று பெரும் புலிக்கூட்டத்துடன் அரண்மனைக்குத் திரும்பினார்.

மணிகண்டனின் தெய்வீகத் தன்மையை உணர்ந்து கொண்ட மகாராணியும், அமைச்சரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். ஆயினும், இளவரசராக பொறுப்பேற்க மணிகண்டன் மறுத்துவிட்டார்.

தனது பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தான் காட்டிற்குச் செல்வதாகவும், தனக்கென்று ஒரு கோயிலைக் கட்டுமாறு அரசரிடம் கூறியதாகவும், அதனை அவ்வாறே அரசரும் நிறைவேற்ற அதுவே இன்று புகழ்பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயிலாக திகழ்கிறதென்றும் வரலாறு கூறுகிறது.

webdunia photoFILE
தன்னை வணங்க வருவோர் எப்படிப்பட்ட உள, உடல் நிலையுடன் வரவேண்டும் என்பதை தன்னை வளர்த்த பந்தள ராஜாவிற்கு ஐயப்பன் வலியுறுத்திச் சென்றதாகவும், அதுவே இன்றளவும் சபரி மலைக்குச் செல்லும் கோடான கோடி பக்தர்கள் கடைபிடிக்கும் விரதமாக உள்ளதென்றும் அந்த புனித வரலாறு பகர்கிறது.

பந்தளம் திருக்கோயிலிற்குச் செல்ல...

திருவனந்தபுரத்தில் இருந்து கேரளத்தின் வடபகுதிக்குச் செல்லும் தேச நெடுஞ்சாலையில் பந்தளம் அமைந்துள்ளது.

ரயில் மார்கமாக செல்வோர் செங்கனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 14 கி.மீ. சென்றால் பந்தளத்தை அடையலாம்.

விமான மார்கமாகச் செல்வோர் திருவனந்தபுரம் வந்திறங்கி 100 கி.மீ. சாலைப் பயணம் செய்து பந்தளத்தை அடையலாம்.

அச்சன்கோயில் நதிக்கரையில் அழகிய இயற்கைச் சூழலில் ஐயப்பனின் குறிப்பிடத்தக்க புனிதத் தலங்களில் ஒன்றான வலிய கோயிக்கால் ஆலயமும், அதனையொட்டி பந்தள அரண்மனையும் உள்ளது.

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – மேஷம் | Pongal Special Astrology Prediction 2025

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (10.01.2025)!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை! - 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை!

இந்த ராசிக்காரர்கள் வியாபார முயற்சிகள் பலன் தரும்! - இன்றைய ராசி பலன் (09.01.2025)!

Show comments