Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுவர்களுக்கும் சர்க்கரை வியாதி

சிறுவர்களுக்கும் சர்க்கரை வியாதி

Webdunia

சிறுவர்களுக்குள் போட்டியும், முதன்மை இடத்தைப் பெறப் பெற்றோர்கள் செய்யும் கெடுபிடியும் அவர்களுக்குள் மன அழுத்தத்தைத் தற்போது உருவாக்கி வருகிறது.

குறிப்பிட்ட நோய்களால் தோன்றும் தொற்று, மன உளைச்சல் - இவையும் சிறுவர்களிடம் சர்க்கரை வியாதி தோன்றும் சாத்தியக் கூறை அதிகரித்து வருகிறது.

ஆரம்பக் கட்டத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுகிறது என்று புகார் செய்வார்கள். இரவு நேரங்களில் சிறுநீர் கழிக்க ஓரிரு முறை எழுந்து செல்வார்கள்.

அடுத்து சோம்பல், பலவீனம், களைப்பு என்று அவர்கள் போக்கு மாறும். சிறுகச் சிறுக எடை குறையும், ஆனால் உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும். தோல் சம்பந்தமான சொரி, சிரங்கு, கட்டி ஆகியன தோன்றும். சீழ் பிடிக்கும். காயம் ஆறாது. பிறப்பு உறுப்புகளில் தினவு ஏற்பட்டு அடிக்கடி சொரியத் தோன்றும். எரிச்சல் ஏற்படும்.

முக்கிய வழிமுறை

சர்க்கரை வியாதி சிறுவர்களுக்குத் தோன்றுவது மிகவும் சோகமானது. அதைத் தவிர்ப்பதற்கு சில கட்டுப்பாடு வழிமுறைகள் மிகவும் அவசியம்.

1. வயதுக்குரிய உடல் எடையை சிறுவர்கள் இழந்திருந்தால் அதைப் பெறச் செய்து தொடர்ந்து தக்க வைத்திருத்தல்.

2. சர்க்கரை வியாதி தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுபட முன்னெச்சரிக்கை உத்திகளைக் கையாளுதல்.

3. ரத்தச் சர்க்கரையின் அளவு எந்த வகையில் இயல்பாக இருக்க வேண்டுமோ கூடுமான வரை அந்த அளவில் இருக்க வைத்தல்.

4. ஒழுங்கான லேப்-டெஸ்ட்டில் வெறும் வயிற்றுடனும் மற்றும் உணவு உட்கொண்டு ஒன்றரை மணி நேரம் கழித்தும் என்று கட்டாயம் இருமுறை ரத்தச் சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும். சிறுநீர் சர்க்கரை அளவையும் சோதித்தல் அவசியம்.

சர்க்கரை வியாதியும் உணவும்

உணவுதான் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துணவுத் தேவையை மீறி எந்தச் சிறப்பு உணவும் நீரிழிவு வந்த சிறுவருக்குக் கிடையாது.

எனினும் உட்கொள்ளும் உணவிற்கு ஏற்றவாறு இன்சுலின் சுரக்கும் அளவு சர்க்கரை வியாதி வந்த சிறுவரிடையே குறைந்து காணப்படும்.

அதற்கு உணவு முறையில் மாற்றம் தேவை. ஒரு குழந்தையின் சத்துணவுத் தேவையைக் கண்டறிய பல்வேறு அம்சங்களை நாம் கவனிக்க வேண்டிவரும்.

பொதுவாக நார்ச்சத்து அதிகமுள்ள கீரை வகைகள், வாழைத்தண்டு ஆகியவை ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும். காய்கறிகள், தவிடு நீக்காத தானியங்கள், பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவை மிகவும் துணை புரியும்.

எந்த வகை உணவு, எந்தெந்தக் கால அளவிற்குள் உட்கொள்ளப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் சிறுவர் மனதில் பதியச் செய்ய வேண்டும். குறிப்பாக சர்க்கரைச் சத்து அதிகமுள்ள மாவுப் பொருள்கள் விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.

பிறந்த நாள் நிகழ்ச்சி, வீட்டு விசேஷங்கள், திருமணங்கள் ஆகிய சமயங்களில், கட்டுப்பாடுகளைச் சிறிது தளர்த்தலாம். ஏனெனில் சிறுவர்கள் ரகசியமாக உண்ணும் ஆவலையும், எதிர்ப்புணர்ச்சியையும் நாம் விதிக்கும் கட்டுப்பாடு ஏற்படுத்திவிடும். எனவே அதனைச் சற்று தளர்த்துவதே நலம் பயக்க உதவும்.

சாக்கலேட்டுகள், கேக்குகள், ஐஸ் கிரீம் மற்றும் இனிப்பு வகைகளை அந்த விசேஷ நேரங்களில் சிறுவர் உண்ண அனுமதிக்கும் போதே, அவற்றின் கலோரி அளவைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பிற உணவுப் பொருள்களைக் குறைக்கச் செய்ய வேண்டும்.

தடுக்கப்பட வேண்டிய உணவு வகைகள் :

சர்க்கரை, ஜாம், தேன், ஜுஸ் வகைகள், டின்னில் அடைக்கப்பட்ட பழங்கள், இனிப்புகள், சாக்கலேட்டுகள், குளூகோஸ் பானங்கள், இனிப்புச் சேர்த்த உணவு, கேக்குகள், இனிப்பு வகை பிஸ்கெட்டுகள், பாயசங்கள், சாஸ் வகைகள்.

சுதந்திரமாக உண்ணத்தக்க உணவு வகைகள் :

இறைச்சி வகைகள், மீன், பொரிக்கப்படாத முட்டை, சூப் வகைகள், டீ அல்லது காபி (இனிப்பு சேர்க்ககாதது), கோஸ், பீன்ஸ், வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், சிவப்பு முள்ளங்கி, கீரைகள், உப்பு, மிளகு, கடுகு, வெண்ணெய் மற்றும் மார்கரின். இனிப்பு சுவைக்கு சாக்கரீன் சேர்த்துக் கொள்ளலாம்.

உடற்பயிற்சி

எல்லா வகை உடற்பயிற்சிகளும் விளையாட்டுகளும் சர்க்கரை வியாதி வந்த சிறுவனர்களுக்கு உகந்தவை.

அவர்களை, உடற்பயிற்சி விளையாட்டு ஆகிய துறைகளில் ஊக்குவிக்கவும் அவர்கள் தளர்ந்து போகும் சமயங்களில் உற்சாகப்படுத்தவும் செய்ய வேண்டியது அவசியம்.

தான் மற்ற சிறுவர்களை விட வேறுபட்டு நிற்கிறோம் என்று அவர்கள் கருதிவிடக் கூடாது. கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதிக்கலாகாது.

விளையாடி முடித்த சமயங்களில் ஆரஞ்சு ஜூஸை அல்லது சாக்கலேட்டை அவர்களுக்கு வழங்கலாம்.

சிறுவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவது அவர்களது வாழ்க்கை முறையையே பாதித்துவிடும். அது மட்டுமல்ல பெற்றோர் வேதனை, கவலை மற்றும் குற்ற உணர்வுக்கும் ஆளாகிவிடுவர்.

சிறுவர்கள் வளரவளர அவர்களிடையே உணவு மற்றும் மாத்திரைக் கட்டுப்பாடுகள் உள்மனதில் ஓர் எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்துவது சகஜம். அப்போது அவர்கள் உணவு பற்றிய அறிவுரைகளை தூக்கி எறிவர். எனவே சற்றுவிட்டுக் கொடுத்து அவர்களுக்குப் புரியச் செய்ய வேண்டும்.

பெற்றோர்களின் மிதமிஞ்சிய கவலையும் பாதுகாப்பு அறிவுரையும் சிறுவர்களுக்கு தனிமையுணர்வையும், தான் அசாதாரணம் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். இதனால் அடிக்கடி சர்க்கரை அளவுச் சோதனைக்காக ரத்தம், சிறுநீர் முலிய லப் டெஸ்ட் எடுப்பது, இன்ஸூலின் ஊசி போட வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிய அம்சங்கள் அதிகரிக்கும்.

அடிக்கடி சிறுசிறு நோய்கள், மயக்கம் வருதல் ஆகியவை சர்க்கரை வியாதிச் சிறுவரிடையே மிகவும் சகஜம். அப்போது கூடுதலாக இன்சுலின் தர வேண்டிய வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil