Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்!

குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்!
, திங்கள், 18 பிப்ரவரி 2008 (14:15 IST)
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவு‌ம் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்திய‌ப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி, குழந்தை இறப்பு விகிதத்தை கட்டாயம் குறைக்க உதவாது என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது, ஆண்டுதோறும் உலகில் 5 வயது பூர்த்தியடையாத குழந்தைகள் இறக்கும் எண்ணிக்கை 1 கோடியாக உள்ளது என்றும், இதில் 99 விழுக்காடு குழந்தைகள் வளரும் நாடுகளைசேர்ந்தவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகின்றது.

பல நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை சமுதாயத்தின் அனைத்து நிலையில் உள்ள மக்களும் பெறும் வகையில் கொண்டு போய் சேர்க்காததே இந்த நிலைக்கு காரணம் என்றும், வாழ்கை என்பது பரிசுச் சீட்டு விழுவதைப் போன்று உள்ளதாகவும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த டேவிட் மீஃபம் தெரிவித்து உள்ளார்.

உலகின் ஏழை நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகள் கூட எளிமையான கொள்கைகள் மூலம் திட்டங்களை தீட்டி குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்துள்ளன. ஒரு குழந்தை 5 வயது வரை வாழ்வதற்கான வாய்ப்பு என்பது அக்குழந்தை எந்த நாட்டில், எந்த சமூகத்தில் பிறக்கின்றது என்பதை பொறுத்துதான் உள்ளது என்றும் டேவிட் மீஃபம் கூறியுள்ளார்.

செல்வமும், வாழ்தலும் தொடர்பான ஐ,நா. மேம்பாட்டுத் திட்டத்தின் அறிக்கைபடி, உலகில் உள்ள நாடுகளின் பட்டியலில் அங்கோலா கடைசியில் முதலாவதாக உள்ளது. அங்கோலா நாட்டின் பொருளாதார பலன் சமமான விகிதாச்சாரத்தில் வெளிப்படையாக பிரித்துக் கொடுக்கப்படும் நிலை உருவாகுமானால் அந்நாட்டில் 5 வயதை எட்டாமல் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

உலகின் ஏழை நாடுகள் என்று அழைக்கப்படும் நேபாளம், மாலாவி, தான்சானியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் எளிமையான செயல் திட்டங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியதில் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தெற்காசியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் இந்தியா, ஏழை அண்டை நாடுகளை விட இதனைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பின்தங்கி உள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் உள்ள ஒரிஸ்ஸா, பீகார், இராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் இறப்பு விகிதமும், குழந்தைகள் பிறக்கும் போது மரணம் அடையும் விகிதமும் உலகில் உள்ள நாடுகளை எல்லாம் விட மிக அதிகமான அளவிற்கு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகள் வாழ்வது சந்தர்ப்ப சூழ்நிலைகளை சார்ந்தது என்று ஏன் கூறவேண்டிய நிலையென்றால், ஒரிஸ்ஸா மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மருத்துவக்கு எருகில் உள்ள மருத்துவரையோ, மருத்துவ மனைக்கு செல்லவோ ஒரு சில நாட்கள் ஆகின்றது. இதற்கு அம்மக்கள் படகுகளையும், ஆட்டோக்களையும் நம்பியுள்ளனர்.

அரசு வளர்ச்சியடையாத பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ பணியாற்ற ஊக்கத் தொகை வழங்கினாலும், இந்த நிலை மாறாததற்கு காரணம் தற்போது வேகமாக வளர்ச்சியடைந்து வரும் புதிய தொழில் நுட்பத் குறைகளில் கிடைக்கும் வருவாயை விடக் குறைவாக இருப்பதுதான் என்று மருத்துவர் பகாரூதத் மிஸ்ரா தெரிவித்து உள்ளார்.

மருத்துவர்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதியுடன் வீடுகள் வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு உடனடியாக சென்று சிகிச்சையளிக்க வாகனங்கள் வழங்காத நிலையில் இதுப்போன்ற இழப்புகளைத் தடுக்க இயலாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த ஷெரின் மில்லர் தெரிவித்து உள்ளார்.

பொருளாதார வளர்ச்சியை பெருக்க முடியும் நம்மால் ஏன் சமூதாய மேம்பாட்டை உருவாக்க இயலவில்லை?, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நாட்டில் பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கில் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் உண்மையிலேயே இந்தியா வளர்ந்து வரும் நாடாகதான் உள்ளது.

உண்மையிலேயே ஒரிஸ்ஸாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாவதற்கு காரணம் மக்களின் பழங்கால பழக்க வழக்கங்களும், நடைமுறைகளும்தான் என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். முறையான மருத்துவர்களிடம் சிகிச்சை பெறும் நிலையில் இதுப்போன்ற குழந்தைகள் இறப்பு விகிதத்தையும், பேறுகாலத்தின் போது தாயும் மரணம் அடைவதை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை சீரிய நடவடிக்கைகள் எடுத்து கட்டுப் படுத்தாவிட்டால் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 2015 ஆம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என்ற புத்தாயிரத்தாண்டின் இலக்கை எட்ட இயலாமல் போய்விடும். இந்த ஆய்வறிக்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil