சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. நவராத்திரி தினங்களில் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு தமிழகத்தில் இருந்து வந்துள்ளது.
கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 நாட்களிலும் (நவ-ஒன்பது) சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை மாலை 6 மணி முதல் 9 மணி வரை பாட்டு, கோலாட்டம் உள்ளிட்ட தாங்கள் அறிந்து வைத்துள்ள பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக் கொள்வதுடன் மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். கலைகளும் வளர்க்கப்படுகிறது.
கலைகளில் பிரதானமாக வாய்ப்பாட்டு, நடனம், புராணக் கதைகள், சொற்பொழிவு போன்றவை இடம்பெறும். தவிர கொலு வைப்பதால் சிறுவர்-சிறுமிகள் உள்ளிட்ட இளைய சமுதாயத்தினர் மத்தியில் இயற்கையில் அமைந்துள்ள அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது.
பெண்களிடம் கொலு பொம்மைகள் அழகுப்படுத்தும் திறன் காரணமாக தன்னம்பிக்கை ஏற்படுவதுடன் வயதானவர்களை மதிக்கும் பண்பும் வளர்க்கப்படுகிறது.
கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன - புதிய பொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான பொம்மைகளை செய்து பிழைப்பு நடத்தும் கைவினைக் கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் கொலுவால் ஏற்படுகிறது என்றால் மிகையில்லை.
இந்திய தட்பவெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து தேவைப்படும். அந்த வகையில் நவராத்திரி நாட்களில் விதவிதமான புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில் முன்னோர் இந்த பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவ ரீதியிலும் நிறைவைத் தருகிறது.
ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு வகைகள், பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக படைத்து, அவற்றை மற்றவர்களுக்கும் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பெண்கள். புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய நோய்க் காரணிகள் அதிகம் என்பதால் புரதச் சத்து நிறைந்த பயறுகளை உண்பதற்கான ஒரு பண்டிகையாகவும் நவராத்திரி பண்டிகை திகழ்கிறது. கொலு வைத்து கொண்டாடும் இந்த பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத் தருகிறது எனலாம்.