இறைவனின் படைப்பாற்றலாக வெளிப்பட்ட பராசக்தியின் நான்கு அம்சங்களில் ஒன்றே மகா சரஸ்வதி என்றழைக்கப்படும் செயல்-சக்தி என்று ஸ்ரீ அரவிந்தர் “அன்னை” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“மகா சரஸ்வதி அன்னையின் செயல்-சக்தி ஆவாள். அவள் பூரணம், ஒழுங்கு ஆகியவற்றின் அதி தேவதை. நால்வருள் (மகேஸ்வரி, மகாலக்ஷ்மி, மகா காளி, மகா சரஸ்வதி) இளையவளாகிய இவள் காரியங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் உதவுபவள், சட இயல்பிற்கு மிக அருகிலுள்ளவள், கை தேர்ந்த கலைஞனின் ஆழ்ந்த திட்ப நுட்பமான அறிவு, நுண்மை, பொறுமை, உள்ளொளி பெற்ற மனத்தின், உணர்வுடன் வேலை செய்யும் கையின், ஊடுறுவிக் காணும் பார்வையின், இவற்றின் நூலிழை பிசகாத் திறமைகளைத் தன்னுள் கொண்டவள். தான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு இவைகளைக் கொடுக்கவல்லவள்” என்று அப்புத்தகத்தில் (பக்கம் 54-55) கூறியுள்ளார்.
வெளிப்பாட்டின் வரிசையில் மகா சரஸ்வதியே (இறைவனின்று) இறுதியில் வந்தவள். அவளுடைய தனி இயல்பில், அவளுடைய அதிர்வின் தன்மையில் அவள்... ஒரு குழந்தைக்கூட நெருங்கியவளாக இருக்கிளாள். இளம் பருவத்தினரை, குழந்தைகளை, வளர்ச்சி இன்னும் முடியாதிருப்பவைகளை அவள் விரும்புகிறாள். அவர்களை உருமாற்றிப் பூரணப்படுத்துவதற்குப் போதிய காலம் உள்ளது. இளைஞர்களின் நடவடிக்கைகளை அவள் விரும்புகிறாள் என்று மகா சரஸ்வதியின் தன்மைகளை அரவிந்தருடன் ஆன்மீக மாமுயற்சியில் ஈடுபட்ட ஸ்ரீ அன்னை கூறுகிறார்.
நமது வாழ்வில் நமது பணிகளில் நம்மை முழுமையை நோக்கி உந்தும் ஆற்றலாகவும், அதனை நாம் முடிப்பதற்கான சக்தியாகவும் மகா சரஸ்வதி திகழ்கிறார். எனவேதான் கல்வி, இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகள் அனைத்திற்குமான கடவுளாக சரஸ்வதியை வணங்குகிறோம். நமது பணிகளில் நாம் பயன்படுத்தும் கருவிகளையும் தூய்மைபடுத்தி ஆயுத பூசை கொண்டாடுகிறோம். இதுவே நவராத்திரி, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை ஆகிய பண்டிகைகளின் ஆன்மீக அடிப்படையாகும்.
வங்காளம் உள்ளிட்ட நமது நாட்டின் கிழக்கு மாநிலங்களில் துர்கா பூசையாக கொண்டாடப்படுகிறது. பராசக்தியின் ஆற்றலாகத் திகழும் மகா காளியின் வடிவமான துர்கைத் தாயை அங்கு வழிபடுகின்றனர்.