ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தில் உள்ளே இருப்பாள் இங்கு வராது இடர்.
மரணமே இல்லாத பெருவாழ்வு தரும் அமிர்தம் வேண்டி ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் திருமாலின் கூற்றுப்படி மந்திர மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்மை கயிறாகக் கொண்டு கடைந்தனர். அப்போது வலி பொறுக்காது வாசுகி பாம்பு விஷத்தைக் கக்கியது. இதை சிவபெருமான் பருகி திருநீலகண்டர் ஆன கதை நாம் எல்லோரும் அறிந்ததே.
இதன் பின்னர் பாற்கடலில் கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம், உச்சை சிரவசு எனும் தெய்வக்குதிரை போன்ற அரியப் பொருட்கள் தோன்றின. மேலும் இந்தப் பாற்கடலில் இருந்தே திருமகள், இந்திராணி, கலைமகளாம் சரஸ்வதி ஆகியோர் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
இப்படி பாற்கடலில் பிறந்து சத்திய லோகத்தில் பிரம்மனுடன் சேர்ந்து வேதநாதமாய்த் திகழும் கலைமகளின் புண்ணியத் திருநாளான சரஸ்வதி பூஜையன்று விரதமிருந்து பூஜிக்க சர்வ சித்திகளையும், கலைகளையும் ஒருங்கேப் பெற்றுவிடலாம்.
புரட்டாசி மாதத்தில் வரும் பிரதமை முதல் தசமி வரையிலும் உள்ள 9 நாட்கள் சக்திக்குரிய திருநாட்களாகும். இதில் இறுதிநாளான விஜயதசமிக்கு முன் தினம் நவமியன்று சகலகலாவல்லியாம் சரஸ்வதியை பூஜித்தல் வெகுசிறப்பு.