Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனித உரிமை மீறல்கள் : அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

மனித உரிமை மீறல்கள் : அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (19:03 IST)
மனித உரிமைகள் : நேர்காணல
ஆர். நடராஜ் இ.கா.ப. புலனாய்வு அதிகாரி
மனித உரிமைகள் ஆணையம் - தமிழ்நாடு

தமிழகத்தில் மனித உரிமைகள் பற்றி எந்த அளவிற்கு விழிப்புணர்வு உள்ளது?

webdunia photoWD
மக்களிடையே பெரும்பாலும் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு இல்லை. பல இடங்களில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மனித உரிமை மீறல் பற்றிய அறிதல் இல்லாமல்தான் மக்கள் உள்ளனர்.

அரசு சாரா மையங்கள், நிறுவனங்கள், படித்தவர்கள் எல்லோரும் இணைந்து பொதுமக்களிடையே தனி மனித உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

மனித உரிமை ஆணையமும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மனித உரிமை ஆணையம் எந்த அளவிற்கு பணியாற்றியுள்ளது?

மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1993ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதில் உள்ள முக்கியமான பணி, மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் மத்திய மனித உரிமை ஆணையத்தின் முக்கியப் பணி என்னவென்றால், மக்களிடையே மனித உரிமை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது, மற்ற அமைப்புகளுடனும் இணைந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பு.

அது இரண்டு விதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி, மற்றொன்று பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்ச்சி.

அரசு அலுவலர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏன் என்றால், மனித உரிமை மீறப்படும்போது, அந்த மனித உரிமை மீறப்பட்டு, அதற்கான நிவர்த்தி நடவடிக்கை அரசு அலுவலர்கள் செய்யாவிட்டால் அதற்கு மனித உரிமை ஆணையம் வந்து நடவடிக்கை எடுக்கும். அதுதான் மனித உரிமை ஆணையத்தின் பணி.

அதனால் அரசு அலுவலர்களுக்கு இந்த மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக மாவட்டம் தோறும் பல விழிப்புணர்ச்சி முகாம்களை நடத்துகிறோம். குறிப்பாக காவல்துறைக்கு.

ஏனென்றால் உயிர், உடமையைப் பாதுகாப்பதில் காவல்துறைக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது. யாருடைய உயிர் அல்லது உடமை பறிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் பணி. அதனால் காவல்துறை ஆணையர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். மனித உரிமை பற்றிய தகவல்களையும், மனித உரிமை மீறல் இருந்தால் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியும் அறிவுறுத்தப்படுகிறது.

அது தவிர, பொதுமக்களுக்கு தனி மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். நான் பல கிராமங்களுக்குச் சென்று கூட்டங்கள் நடத்தி அதில் பேசியுள்ளேன். அங்கு வரும் மக்கள் மனுக்களைக் கொண்டு வந்து கொடுக்கின்றனர். ஏதாவது ஒரு அரசு அதிகாரி வந்தால் அவரிடம் தங்களது பிரச்சினைகளைக் கூறினால் போதும், அது தீர்ந்துவிடும் என்று எண்ணுகின்றனர். ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் தீர்க்க ஒவ்வொரு துறைகள் உள்ளன. அவர்களுக்கு அந்தந்தத் துறைகள் பற்றிய தகவல்கள் இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நிவர்த்தி செய்து கொள்ள பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது. அதற்கு யாரை சந்திக்க வேண்டும், எந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றனர்.

இதுபோன்ற கூட்டங்களை சிறிய நகரங்கள், நகரங்களிலும் நடத்துகிறோம். குறிப்பாக மாணவர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறோம். அதற்காக கல்லூரி, பள்ளிகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அன்றுதான் மனித உரிமைகள் என்னவென்று அறியப்பட்டு வரையறுக்கப்பட்டது. அப்போதுதான் இரண்டாம் உலகப் போர் முடிந்து அதில் ஏற்பட்ட சேதங்களை பார்த்து, அழிவுகளைப் பார்த்து மனித உரிமைகளை வரையறுத்தனர். பல நாடுகள் இணைந்து இதுபோன்ற அழிவு இனி ஏற்படக் கூடாது என்று முடிவு செய்து ஒரு 30 சரத்துகள் கொண்ட ஒரு அறிக்கையை கொடுத்தனர்.

அந்த தினம்தான் மனித உரிமைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது சுமார் 60 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பல நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துகிறோம். மாணவர்கள் பங்கேற்கும் கட்டுரைப் போட்கள், பேச்சுப்போட்டிகள் என பல வகையில் அன்றைய தினம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனர்.

மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா?

இது ஒரு சங்கடமான கேள்வி. மனித உரிமைகள் எந்த அளவிற்கு பாதுகாக்கப்படுகிறது அல்லது மனித உரிமைகள் மீறப்பட்டால் அதற்கு நிவர்த்தி கிடைக்கிறதா என்பதை அறிய வேண்டும்.

அதற்கு மனித உரிமை மீறல் பற்றி வரும் மனுக்களை வைத்து சொல்வதா அல்லது மனுக்கள் குறைந்திருந்தால் விழிப்புணர்ச்சி இல்லை என்று சொல்வதா.

மேலும், மனுக்கள் அதிகம் வந்தால் விழிப்புணர்ச்சி அதிக அளவில் ஏற்பட்டுள்ளது என்று கூறுவதா, அல்லது மனித உரிமைகள் மீறல் அதிக அளவில் ஏற்படுகிறது என்று கூறுவதா? எனவே இதில் சிக்கல் ஏற்படும்.

அதிகமாக மனுக்கள் வர வேண்டும். அப்போதுதான் விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது என்பதை கண்டறிய முடியும். மனுக்கள் வரும்போதுதான் அதற்கான நிவர்த்தி கிடைக்கும்.

எனவே அதிகமாக மனுக்கள் வர வேண்டும். அப்போதுதான் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும்.

இதேப்போல எப்போது நாம் எல்லா குற்றங்களையும் பதிவு செய்கிறோமோ அப்போது குற்றங்கள் குறையும்.

பொதுமக்கள் காவல்துறை பற்றி கூறும் பொதுவான குற்றச்சாற்று என்னவென்றால், எந்தவொரு மனுவைக் கொடுத்தாலும் அவை பதிவு செய்யப்படுவதில்லை என்பதுதான்.

நான் என்ன சொல்வேன் என்றால், வரும் அனைத்து மனுக்களையும் பதிவு செய்யுங்கள். உடனே அதிகமான வழக்குகள் இருப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த குற்றங்களை புலனாய்வு செய்து குற்றவாளிகளைப் பிடித்து விட்டால் பின்னர் குற்றங்கள் குறையும். ஏனெனில் குற்றவாளிகள் எல்லாம் சிறையில் இருப்பார்கள். எனவே குற்றங்களை தடுக்கலாம்.

தவறுக்கு சட்டப்படி ஒரு தண்டனை வேண்டும். ஒருவன் ஒரு தவறைச் செய்துவிட்டான். ஆனால் அதுபற்றி அவன் மீது எந்த குற்றப்பதிவும் இல்லாமல் அவன் சுதந்திரமாக இருக்கிறான் என்றால் அதைவிட மோசமானச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால் வரும் அனைத்து மனுக்களையும் பதிவு செய்வது காவல்துறைக்கு முக்கியமானதாகும்.

அதுபோலத்தான் மனித உரிமைகள் ஆணையத்திற்கும் அதிகமாக மனுக்கள் வர வேண்டும். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க எடுக்க குற்றங்கள் குறையும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு கேள்வி கேட்க வேண்டும். எனக்கென்ன என்று இருந்துவிட்டால் மனித உரிமைகள் ஆணையத்திற்கு வேலையே இருக்காதே.

தற்போது தகவல் அறியும் சட்டம் ஒன்று உள்ளது. அதுபற்றி எத்தனை பேருக்கு விவரம் தெரியும். நமக்கு என்னத் தகவல் தேவையோ அதனை அறிந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு.

அரசுத் துறைகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. மற்ற தனியார் துறைகள் பற்றி நாம் கூற முடியாது. அரசுத் துறையில், அரசு ஊழியர்கள் மனித உரிமைகளைப் பாதுக்க வேண்டும். அவர்கள் மனித உரிமையை மீறக் கூடாது. அப்படி மீறினால் மனித உரிமைகள் ஆணையம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.

நீங்கள் அளிக்கும் பரிந்துரை எந்த அளவிற்கு சட்டப்பூர்வமாகக் கொண்டு செல்லப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது?

webdunia
webdunia photoWD
மனித உரிமை ஆணையத்திற்கு மனித உரிமை மீறல் நடந்தது பற்றி விவரம் வந்தால் அதன் மீது இரண்டு வகையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்று, மனித உரிமை மீறல் நடந்ததற்கு ஈடாக ஒரு தொகையை அளிக்கலாம். எந்த அரசு ஊழியர் மனித உரிமை மீறலை செய்தாரோ அவர்தான் அந்த தொகையை அளிக்க வேண்டும். ஆனால் முதலில் அந்த தொகையை அரசு கட்டிவிடும். பின்னர் அவரது ஊதியத்தில் இருந்து அரசு பிடித்துக் கொள்ளலாம் என்று ஆணையிடப்படும்.

இரண்டாவதாக துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பது. அதாவது இதுபோன்றதொரு மனித உரிமை மீறல் நடந்துவிட்டது. மேலும் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற பரிந்துரையை அரசுக்கு அளிப்பதும் ஆணையத்தின் பணியாகும்.

இதுதான் மனித உரிமை ஆணையத்தின் நடைமுறை.

மனித உரிமைகள் ஆணையத்திற்கு குற்றவியல் நீதிமன்றத்திற்கான அதிகாரம் உள்ளது.

இதில் தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மேலும் சில அதிகாரங்களை அளிக்க வேண்டும்.

நான் தற்போது ஒரு யோசனையை அளித்துள்ளேன். அதாவது மனித உரிமை ஆணையத்திற்கு என தனியாக நிதியை அரசு ஒதுக்கீடு செய்துவிட வேண்டும். யாராவது ஒருத்தருக்கு சரியீடு அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டால், அந்த சரியீட்டை மனித உரிமைகள் ஆணையமே அளித்து விடலாம். பிறகு அதுபற்றிய விவரத்தை அரசுக்கு அளித்துவிடலாம். இதனால் தாமதம் தவிர்க்கப்படும்.

தற்போது மனித உரிமைகள் ஆணையம் ஒரு ஆணையை அரசுக்குப் பிறப்பிக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் நீதிமன்றத்தை நாடி அந்த ஆணைக்கு எதிராக தடை உத்தரவை பெற்று விடுகிறார். அதனால் சில அதிகாரங்களை மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும்.

ஒரு நபர் குற்றம் செய்துள்ளார் என்று தெரிந்திருந்தாலும் அவரை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் மனித உரிமைகள் ஆணையத்திற்கு கிடையாது. அதனை சட்டப்படி செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் வேலை.

உதாரணமாக ஒருவரை முறையில்லாமல் கைது செய்து விட்டால் அவர் தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடரலாம். அதற்கு நஷ்ட ஈடும் அளிக்கப்படும். அதனை மனித உரிமைகள் ஆணையமே அளித்தால் பணி எளிதாகும்.

மேலும் பல பரிந்துரைகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றத் திட்டங்கள் ‌சிலவ‌ற்றா‌ல் அடி‌ப்படை மனித உரிமைகள் பாதிக்கப்படுவது பற்றி? உதாரணமாக நிலக் கையகம் போன்றவை.

இதனை எல்.பி.ஜி. என்று கூறுவோம். அதாவது உலகமயமாக்கல், தனியார் மயமாக்கல், பொருளாதார மயமாக்கல் என்பதாகும். நகரங்களில் ஒரு சாரார் அதிகமாக சம்பாதிக்கின்றனர். ஒரு சாரார் பள்ளத்திலேயே இருக்கின்றனர். இதுவே ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினை. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், வாகன விபத்துகள் அதிகரிப்பது, பாலியல் குற்றங்கள், கேளிக்கை நடனங்கள் போன்ற பிரச்சினைகள் எல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. நிலங்களை கையக்கப்படுத்தவது என்பது ஒரு பெரிய பிரச்சினை. தமிழ்நாட்டில் பார்த்தால் அது பெரிய அளவில் பிரச்சினையாகவில்லை. அரசு எந்த நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று போனாலே அங்கு பிரச்சினை ஏற்படுகிறது.

விமான நிலையத்திற்கு எந்த வகையான நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். பொதுவாக அரசு நிலத்தை கையக்கடுத்தினாலே அது அரசியலாக்கப்படும். அதுவும் பிரச்சினைதான்.

தனியார் நிறுவனங்கள் நிலங்களை கையகப்படுத்தும்போது அதற்கான சரியீடு சரியாக கொடுக்கப்படுகிறதா என்பதில் பிரச்சினை ஏற்படும்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிட்டியுள்ளது.

ஒரு விவசாயின் தரிசு நிலத்தை கையகப்படுத்துகிறோம். அது தனியாராக இருந்தாலும் சரி, அரசாக இருந்தாலும் அவருக்கு வருங்காலத்தில் எந்த அளவிற்கு அந்த நிலத்தின் விலை உயரும் என்பதை கணக்கிட்டு அதற்கேற்ற அளவிற்கு பாண்டு அளிக்கப்படுகிறது. அதனை வைத்துக் கொண்டு அவர் எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த சூழ்நிலை இங்கும் வர வேண்டும். இதனால் நிலத்தை வழங்கியவர்களின் மனச்சோர்வை தவிர்க்கலாம்.

தமிழகத்தில் இந்த பிரச்சினை இல்லை. ஏனெனில் சிப்காட் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி வைத்திருக்கிறது. தற்போது கோககோலா நிறுவனம் ஒன்றிற்கு கூட அதுபோன்றுதான் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிலத்தில் இருந்து தண்ணீரை எடுத்துத்தான் அந்த நிறுவனம் இயங்க உள்ளது. ஆனால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள், அந்த நிலத்தில் இருந்து அதிகளவிலான நீரை உறிஞ்சி எடுக்கும்போது எங்களுக்கு நீராதாரம் பாதிக்கப்படும் என்று போராடி வருகின்றனர்.

இதனால் நிலக் கையகம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு முன்நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

மனித உரிமைகள் அமைப்பிற்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கிறதா?

காவல்துறை உள்ளிட்ட எல்லா அரசு துறைகளும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு நீதிமன்ற அமைப்புப் போன்றது. எனவே அனைத்துத் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

மேலும் ஏதாவது ஒரு தவறு நடந்தால் அவை பத்திரிக்கைகளில் வெளி வந்துவிடுகிறது. அதை வைத்தே மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அதனால் நம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயம் அரசு ஊழியர்களிடையே உள்ளது. அது மிக மிக முக்கியம். மனித உரிமைகள் மீறப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதன் மீதான மேன்மை நிலை இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பொதுவாக அரசு ஊழியர்களிடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது.

ஒரு சில அரசு சாரா நிறுவனங்கள் மனித உரிமை மீறல் என்று ஒன்றை வைத்துக் கொண்டு தவறான முறையில் செயல்படுகின்றன. அதாவது அரசு ஊழியர்களை மிரட்டி, இந்த வேலையை முடித்துக் கொடுக்காவிட்டால் மனித உரிமை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டிவிடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதுவும் நடக்கிறது.

உதாரணமாக வீரப்பன் விவகாரத்தில் மனித உரிமை ஆணையத்தின் தனிக் குழுவை அமைத்து அதுபற்றி விசாரணை நடத்தினர். நீதிபதி சதாசிவம் தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மக்களிடையே விசாரணை நடந்தது. அப்போது அவர்களிடையே நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்று சொல்கிறீர்கள், அதற்கு எந்த வகையான நிவாரணம் வேண்டும் என்று கேட்கப்பட்டது. காவல்துறை மீதோ, வருவாய் துறை மீதோ வழக்குப் போடலாம் என்று கூறினர் அல்லது சரியீடு மட்டும் போதுமா என்றும் கேட்டனர். அதற்கு அங்குள்ள எல்லோரும் சரியீடு வேண்டும் என்று கூறினர். சில அமைப்புகள் சரியீடு வேண்டும், அதிகாரிகள் மீது வழக்கும் போட வேண்டும் என்று வலியுறுத்தினர். இரண்டுமே வேண்டும் என்றால் சரியான சாட்சிகள் வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெறும் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் சரியீடு கிடைத்தால் போதும் என்று சொல்லிவிட்டனர். பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சரியீடு கொடுத்து அந்த விவகாரத்தை முடித்து வைத்தது.

இதுபோன்று சரியீடு மட்டும் கொடுக்கப்பட்டால் தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடுமே?

அவ்வாறு இல்லை. சரியீடு மட்டும் கொடுக்கப்படுவதில்லை. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்கிறது. அதுவும் அவர்களுக்குத் தண்டனைதான். ஆனால் மக்கள் கேட்பது குற்றவியல் நடவடிக்கை. அது மற்ற குற்றவாளிகளை நடத்துவது போல நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதாகவும். அதனைத்தான் தவிர்த்திருக்கிறோமே தவிர தவறு செய்தவர்களை காப்பாற்றுவதாகாது.

என்கவுண்டர்ஸ் என்பது பற்றி இருவேறு‌க் கரு‌த்துக‌ள் ‌நிலவு‌கிறது. அதுப‌ற்‌றி?

எந்தவொரு நபரும் என்கவுண்டர் மரணம் என்பதை நியாயப்படுத்த முடியாது. எதற்குமே சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மீறி யாரையும் சுடுவது குற்றம்தான். ஆனால், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்போதோ அல்லது வேறு விதமான பிரச்சினைகளிலோ தற்காப்பு நடவடிக்கையாக என்ன எடுக்கலாம் என்பதை ஆலோசித்து இந்த முடிவை எடுக்கலாம் என்ற வரைமுறை உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு என்கவுண்டர் நடந்திருந்தால், அதில் எந்த வகையான படையை (போர்ஸ்) காவல்துறையினர் பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும்.. மேஜிஸ்ட்ரேட் அதிகாரி ஒருவர் நடத்தும் விசாரணையின் அடிப்படையில் அளிக்கும் அறிக்கையை வைத்துத்தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு எந்த பிரச்சினை என்றாலும் உடனடியாக விசாரணை ஆணையம் அமைக்கப்படும்.

எல்லா மாநிலங்களுக்கும் ஒரு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. அதில் எப்பொழுது காவல்துறை மீது ஒரு பிரச்சினை எழுகிறதோ அப்போது உடனடியாக ஒரு நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே சட்டத்திற்குப் புறம்பாக உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என்கவுண்டர் என்பதை எந்த வகையிலும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. பத்திரிக்கைகளில் சில சமயங்களில் வரும் செய்திகளில் கண்டதும் சுட உத்தரவு என்பதும் தவறானது.

100 பேரைக் காப்பாற்ற 10 பேரை சுடலாம் என்ற கருத்தும் தவறு. என்கவுண்டர்களை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள இயலாது. அது ஒரு மிருகத்தன்மையானது. விலங்குகளையே நாம் பாதுகாக்க வேண்டும் என்ற நிலை இருக்கும்போது மனிதர்களை சுடுவது என்பது மிகத் தவறானதாகும்.

சட்டம் ஒழுங்குப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரெளடிகளை சுடுவது தவறில்லை என்று மக்கள் கருத்துக் கணிப்புக்களில் வாக்களித்துள்ளனர். இதற்குக் காரணம் காவல்துறைதான். ரெளடிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதால்தான் மக்கள் இவ்வாறு வாக்களித்துள்ளனர். குற்றவியல் அமைப்பு - அதாவது காவல்துறை மற்றும் நீதித்துறையும் சேர்ந்து குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதால்தான் மக்கள் இந்த அளவிற்கு வெறுத்துப்போய் சுட்டுக் கொல்வதில் தவறில்லை என்று கூறும் அளவிற்கு போய்விட்டனர்.

சரிகா ஷா வழக்கில் இப்போது மேல்முறையீடு செய்துள்ளனர். சரிகா ஷா மரணம் நிகழ்ந்து பல ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்காமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அளவிற்கு நமது நீதிமன்ற வரைமுறைகள் உள்ளன. அவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

எனவே என்கவுண்டர் என்பது கூடவே கூடாது. மேலும் மரண தண்டனையும் கூடவே கூடாது. பல நாடுகளில் தற்போது மரண தண்டனை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் மட்டுமே இன்னமும் மரண தண்டனை உள்ளது. அதுவும் நிறுத்தப்பட வேண்டும்.

துப்பாக்கி கொடுத்துள்ளது சுடுவதற்காகத்தான் என்று காவல்துறைக் கருதக் கூடாது.

டிசம்பர் 6 போன்ற குறிப்பிட்ட சில நாட்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சில அப்பாவிகளும் கைது செய்யப்படுகின்றனர். இதில் மனித உரிமை ஆணையத்தின் நடவடிக்கை என்ன?

இதில் மனித உரிமை நடவடிக்கையை விட காவல்துறை முக்கிய அதிகாரிகள்தான் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில்தான் மனித உரிமைகள் ஆணையம் தலையிடுகிறது.

புகார் வந்தாலோ அல்லது தாங்களாகவேச் சென்றோ மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளும். கலவரமோ, போராட்டங்களோ நடைபெறும்போது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதுதான் வழக்கம்.

மேலும் இதுபோன்ற ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் குற்றவாளிகளே தாங்களாகவே முன்வந்து சிறைக்குச் செல்கின்றனர். ஏனெனில் அவர்கள் வெளியே இருந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களைத்தான் கைது செய்வார்கள். எனவே அதற்கு முன்பே பாதுகாப்பாக சிறைக்கு வந்து விடுகிறார்கள், அந்த நிகழ்வுகளும் உண்டு.

இதுபோன்ற பிரச்சினைகளில்தான் உயர் அதிகாரிகள் பாரபட்சமின்றி குற்றவாளிகளை மட்டும் கைது செய்து, மக்களுக்கு நம்பிக்கை அளித்தால் அதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். ஆனால் உயர் அதிகாரிகள் நேரடியாக செல்லலாமல் இருந்துவிடும் சூழ்நிலையில்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன.

ஆனால் பல சமயங்களில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் அவசியமாகிறது. அதனை தவிர்க்க இயலாது. ஆனால் அதனை உயர் அதிகாரிகள் நேரடியாக இருந்து செய்யும்போது தவறுகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்காமல், செய்திகளை வைத்து மனித உரிமைகள் ஆணையம் தானே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ளுமா? அதுபோன்ற அதிகாரம் உள்ளதா?

இருக்கிறது. அதனை தனிச்சை நடவடிக்கை (suo moto) என்று கூறுவர். எங்களுக்கு எந்த புகார் மனுவும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. செய்தி வந்தாலே அதனை அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுப்போம்.

சமீபத்தில் கூட ஒரு பொழுதுபோக்கு இடத்தில் பள்ளிக் குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக செய்தி வந்தது. அதற்கு யாரும் எங்களிடம் புகார் வரவில்லை. நாங்களாகவே முன்வந்து அவ்விடத்திற்குச் சென்று இந்த மரணத்திற்கு யார் காரணம் என்பதை விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல மழைக்காலத்தில் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து அனாதை இல்லத்தில் இருந்த ஒரு குழந்தை இறந்துவிட்டது.

இதற்கு இரண்டு பேர் காரணமாகிறார்கள். ஒன்று மின் அலுவலகத்துறை அதிகாரிகள். மற்றொருவர் அனாதை இல்லக் காப்பாளர். அந்தக் குழந்தை சாலைக்கு வந்திருக்கக் கூடாது. அக்குழந்தையை பராமரிக்கத் தவறியதும் குற்றமாகிறது. இதிலும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கிறது.

இதுபோன்ற சில நிகழ்வுகளில் மனித உரிமைகள் ஆணையம் தானேச் சென்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளது.

ஹைதராபாத்தில் மாநில ம‌னித உரிமை ஆணையம் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த சுபாஷன் ரெட்டி என்பவர்தான் அதன் தலைவராக சேர்ந்தார்.

அப்போது அங்குள்ள முக்கியச் சாலை ஒன்றில் ஒரு குழந்தை சாலையை கடக்கும்போது வாகன விபத்தில் இறந்துவிட்டது. அவர் அங்கு சென்று அந்தக் குழந்தையின் மரணம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டார். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. மனித உரிமைகள் ஆணையம் நினைத்தால் எதையும் செய்யலாம்.

குறிப்பாக அரசு அலுவலர்கள். அரசு அலுவலர்கள் கண்ணியத்தை மீறக் கூடாது. அவர்களது பணியை சீராக செய்ய வேண்டும். அவர்கள் தங்களது பணியை ஒழுங்காகச் செய்தால் எல்லாமே சரியாக இருக்கும்.

இதேபோல சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மனித உரிமைகள் ஆணையர் ஒருவர், ஒரு இடத்தில் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டால் அப்பகுதி காவல்துறை அதிகாரிகளை அழைத்து, அப்பகுதியில் கள்ளச் சாராயத்தை தடுக்காதது உங்கள் குற்றம். எனவே இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டியது உங்கள் கடமை என்று ஆணை அளித்துள்ளார்.

சட்டத்தை சரியாக அமல்படுத்தவில்லை என்பதால்தான் இங்கு சாராய மரணம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

இதேப்போல மனித உரிமைகள் ஆணையம் எந்தப் பிரச்சினையையும் நல்ல முறையில் தங்களது கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் பெற்றுள்ளது. அரசு அலுவலர்கள் நல்ல முறையில் பணியாற்ற மனித உரிமைகள் ஆணையம் வழிவகை செய்து கொடுக்கும். இதன் மூலம் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்

லாக்-அப் மரணம் என்பது போன்ற நிகழ்வுகளில் மனித உரிமைகள் ஆணையம் தலையிடுகிறதா?

கைதி மரணம், விசாரணைக் காவலில் இருந்தாலும் சரி, எந்தக் கதையின் மரணமாக இருந்தாலும் நாங்கள் தன்னிச்சையாகவேச் சென்று புலனாய்வு மேற்கொள்கிறோம். எக்ஸிக்யூட்டிவ் மேஜிஸ்ட்ரேட் விசாரணை துவங்குகிறது.

தற்போது கைதி மரணம் என்பது வெகுவாகக் குறைந்துள்ளது.

உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்கள் எவ்வளவு சாதகமான தீர்ப்புகளை வழங்கியுள்ளது?

webdunia
webdunia photoFILE
பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது உத்தரவாக இருக்கும். அதனை நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவுப் பெற்றுக் கொள்கிறார்கள். மீண்டும் விசாரித்து அந்த சரியீட்டை அரசு வழங்குவதே சரியானது.

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இருக்கும் எந்த வழக்கையும் மனித உரிமைகள் ஆணையம் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அந்த நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்றப் பின்னர்தான் எடுத்துக் கொள்வோம்.

ஏதாவது ஒரு வழக்கில் சம்பந்தப்பட்டவர், இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாமா?

செய்ய முடியும். ஆனாலும், நீதிமன்றம் இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையத்தை சேர்த்துக் கொள்ளுமாறு அரசுக்குத்தான் உத்தரவிடும். நீதிமன்றத்திற்கும் அந்த அதிகாரம் உண்டு.

நாட்டின் வளர்ச்சி!

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் நாம் கடந்து வந்த பாதையை பார்க்க வேண்டும். இதுவரை என்ன சாதித்துள்ளோம், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்.

நாட்டின் வங்கிக் கணக்கையும், அன்னிச் செலாவணியையும் வைத்து நாட்டின் வளர்ச்சியைப் பார்க்காமல், ஒவ்வொரு குடும்பத்திலும் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கிறதா என்பதை வைத்து கணக்கிட வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவர்களுக்குரிய உரிமை அளிக்கப்படுகிறதா? அவர்களது மனித உரிமைகள் மீறப்படுகிறதா என்பதை ஆராய்ந்து அந்த தவறுகளை திருத்திக் கொள்வோம். அதற்குரிய நாளாக இந்நாளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil