Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூளையைக் கொண்டு யோகம் செய்தல் - அன்னை

மூளையைக் கொண்டு யோகம் செய்தல் - அன்னை
, வெள்ளி, 28 ஜனவரி 2011 (17:55 IST)
ஜீவனின் சைத்திய மையத்திலிருந்து வருகிற உருமாற்றத்திற்கான முயற்சிக்கும், ஏதோ ஒன்றைப் பெறுவதற்காச் செய்யப்படும் மனக் கட்டுமானத்திற்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது என நினைக்கிறேன்.

எனக்கு எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, புரியவைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், இப்படிச் சொல்லலாம், விஷயங்கள் தலையில் இதுபோல் போய்க் கொண்டிருக்கும் வரை (அன்னை தமது நெற்றியருகே ஒரு விரலைச் சுழற்றிக் காட்டுகிறார்) அதற்கு ஆற்றலே கிடையாது. அதனுடைய சக்தியின் அளவும் எல்லையும் மிகவும் சிறிது. எப்பொழுதும் அது தன்னையே பொய்யாக்கிக் கொண்டிருக்கிறது.

பெரு முயற்சி செய்து சித்தத்தை உறுதி செய்கிறாய் - அது மிகவும் செயற்கையானது என்பது வேறு - எதையே ஒன்றைப் பிடித்துக்கொள்ள முயல்கிறாய், அடுத்த கணமே எல்லாம் மறைந்துவிடுகிறது. மறைந்தது உனக்குத் தெரிவதுகூட இல்லை. பிறகு "ஏன் இப்படி ஆயிற்று?" என்று நினைக்கிறாய்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்களோ, யோகம் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மிகப் பலமாக இருந்தாலன்றி மூளையைக் கொண்டு யோகம் செய்வது மிகவும் கஷ்டம் என்றே தெரிகிறது.

இச்சா சக்தி தலையில் இல்லை.

இச்சா சக்தி - நான் இச்சா சக்தி என்று அழைப்பது - இங்கே இருக்கிறது (அன்னை நடுமார்பைச் சுட்டிக் காட்டுகிறார்), அதற்குத்தான் செயலாற்றல் உள்ளது, சித்திபெறும் சக்தி உள்ளது.

முற்றிலும் மூளையைக் கொண்டே செய்யும் காரியம் எண்ணற்ற ஊசலாட்டத்திற்கு, ஏற்ற இறக்கத்திற்கு உட்படும். உதாரணமாக, மனத்தில் ஒரு கொள்கையை வகுத்த உடனேயே அதற்கு எதிரான வாதங்களெல்லாம் எழுவதைத் தவிர்க்க முடியாது. மனத்தின் சாமார்த்தியத்தைப் பற்றி உனக்குத் தெரியும்: அது எதை வேண்டுமானாலும் நிரூபிக்கும், எதைப்பற்றி வேண்டுமானாலும் விவாதம் பண்ணும்.

அதன் விளைவு, உன்னால் ஓர் அடி கூட முன்னேற முடியாது. கண நேரத்திற்கு ஏதோ சிறிது சக்தியுடைய ஒரு கருத்தைப் பிடித்துக்கொண்ட போதிலும், அந்தத் தீவிர நிலையைக் காப்பாற்ற முடிந்தாலன்றி, சிறிது தளர்த்தினாலும், எதிரான விஷயங்கள் எல்லாம் வந்துவிடும். அதுவும் மிகக் கவர்ச்சியான தோற்றத்தில் வரும் என்பது உனக்குத் தெரிந்ததுதானே. ஆகவே அது முடிவில்லாத போராட்டமாகவே இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil