Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானாகிய ஆன்மாவை எவ்வாறு அறிவது? - ரமணர்

நானாகிய ஆன்மாவை எவ்வாறு அறிவது? - ரமணர்
, வெள்ளி, 17 டிசம்பர் 2010 (17:45 IST)
ரமணர்: நான் என்பதன் யதார்த்தப் பொருளாம் அகண்ட உணர்வு நிர்விகாரமாய் என்றும் உளது. அதை விஷயீகரித்துத் (எதிரிட்டு ஓர் விஷயமாய்) தெரிந்துகொள்ள முடியாது, புதிதாய்த் தோன்றும் ஓர் உணர்வுமல்ல அது. புதிதாய்த் தோன்றுவதாயின் மறைந்தும் போகும். எப்போதும் எங்கும் இருப்பது இதுவே எனினும், 'தெரியவில்லையே' என்கிறோம். ஆதலால், நீங்காத இருப்பாம் அதை மறைக்கும் தடை எதோ தோன்றுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. அஞ்ஞானமே அத்தடை. 'தெரியவில்லை' என்று நினைக்கும் அந்த அஞ்ஞான விருத்திக்கு இடம் கொடாதிருந்தால், தானாம் ஆன்மா தானே விளங்கும். அறிவும் அறியாமையும் ஆன்மாவுக்கு அல்ல. செயற்கைத் தோற்றமாம் அவற்றை அவற்றைக் களைந்தால் இயல்பாம் ஆன்மா என்றென்றும் விளங்கும். அவ்வளவேதான்.

கே‌ள்‌வி: அலைபாயும் மனதை எவ்வாறு அடக்குவது?

உங்களுக்கு மட்டும்தான் இந்தத் தொல்லை என்றில்லை. இதையேதான் எல்லோரும் கேட்டு வருகிறார்கள். பகவத் கீதை போன்ற தர்ம நூல்களும் இதை விவகரிக்கின்றன. மனம் வெளிமுகமாய் அலையும் ஒவ்வொரு தருணமும் அதை உள்ளுக்கிழுத்து விடுமாறு கூறும் கீதோபதேசத்தைத் தவிர வேறென்ன வழி இருக்கக்கூடும்? அது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது என்னவே உண்மையே. தொடர்ந்து முயற்சி செய்தால் கைகூடும்.

கேள்வி: ஆனால், எண்ணத்தில் எழும் ஆசைகளின் பின்னாலேயே மனம் ஓடுகிறது. சிந்தையை ஒருமுகமாய் செலுத்துவதற்கான எமது இலக்கில் அதனைப் பதிக்க முடியாமற் போகிறதே?

ரமணர்: எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதனையே அனைவரும் நாடுகிறார்கள். உங்கள் மனம் ஏன் எதுஎதையோ நாடி வெளிமுகமாக அலைகிறது? புலனுணர்வுப் பொருட்களால் பெறக்கூடிய மகிழ்ச்சி உட்பட எல்லா இன்பங்களும் எங்கிருந்து வருகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைக் கண்டுபிடியுங்களேன்! அவை யாவுமே உங்கள் உள்ளிருந்தே, ஆன்மாவிலிருந்தே எழுகின்றன என்பதைக் காண்பீர்கள். அதன்பிறகு ஆன்மாவிலேயே மனத்தைப் பதிக்க உங்களால் இயலும்.

ஐயங்கொள்பவர் யார் என்பதையும் அன்னாரின் மூலாதாரத¨யும் கண்டுபிடித்த பின்னர் ஐயங்கள் யாவும் முற்றுப்பெறும். மாறாக, எழும் சந்தேகங்களை அகற்றிக் கொள்வதிலேயே முனைந்தால் எந்த முடிவும் காண முடியாது. ஒரு சந்தேகம் தீர்ந்தால் மற்றொன்று முளைக்கும். அவற்றிற்கு முடிவு ஏது? ஆனால், சந்தேகிப்பவர் என்று தனியாக ஒருவரும் உண்மையில் இல்லை என்பதை அன்னாரின் மூலத்தை நாடிக் கண்டுணர்ந்தபின் சந்தேகங்கள் யாவும் முடிவுறும்.

ஏகாக்கிரதை (ஒருமுகப்படுதல்) எனப்படுவது ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பதல்ல, அது நமது உண்மை இயல்பேயாம். அவ்வாறு இருக்கவிடாது அலைக்கும் நினைப்புகளுக்கு இடங்கொடாதிருத்தலே சாதனையாம்.

ஆன்மாவில் மட்டிலுமே மனத்தை ஏகாக்கிரமிப்பது மட்டிலா மகிழ்ச்சி அல்லது பேரின்பத்திற்கு இட்டுச் செல்கிறது. எண்ண அலைகளை உள்ளுக்கிழுப்பது, அடக்குவது, மனதை வெளிமுகமாகப் படரவிடாமல் தடுத்து நிறுத்துவது என்றெல்லாம் கூறப்படுவதே வைராக்கியம் ஆகும். ஆன்மாவில் மனத்தைக் குவிப்பதே சாதனை (முயற்சி). இதயத்தில் ஏகாக்கிரமிப்பது, ஆன்மாவில் ஏகாக்கிரமிப்பது இரண்டுமே ஒன்றே. ஆன்மாவில் மறு பெயரே இதய மையம்.

Share this Story:

Follow Webdunia tamil