Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சத்குருவின் தமிழ்‌ப் புத்தாண்டு வாழ்த்து

சத்குருவின் தமிழ்‌ப் புத்தாண்டு வாழ்த்து
, திங்கள், 16 ஏப்ரல் 2012 (17:24 IST)
WD
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீன வாழ்க்கை என்று சொல்லப்படும் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்க முடியவில்லை, முதுமைப்பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டமுமே மக்களுக்கு பிரச்னையாக இருக்கிறது.

ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகிறார்கள். வாழ்க்கையின் இயல்பே மாற்றம்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. அசைவின்மையை (stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின் மாற்றம் என்பதும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்குத் தொடர்பே இல்லாமல் இருப்பதால்தான் ஒவ்வொரு மாற்றமும் உங்களுக்கு துன்பத்தைத் தருவதாக இருக்கிறது.

வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பயப்படுவதால்தான் அதை முன்னதாகவே கண்டு கொள்ள மக்கள் தற்போது வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கின்றனர், குனிந்து கை ரேகைகளைப் பார்க்கின்றனர். உங்களிலேயே உள்ள அசைவின்மையை ஒருமுறை நீங்கள் சுவைத்துவிட்டால், பிறகு மாற்றங்கள் உங்களைத் துன்புறுத்தாது. மாற்றம் என்பது மாறும் தன்மை கொண்டது. அசைவின்மை என்பது நிலைத்த தன்மை கொண்டது, விழிப்புணர்வைச் சார்ந்தது.

எனவே அந்த அசைவின்மையை, விழிப்புணர்வை நீங்கள் சுவைக்க முடிந்தால் பிறகு மாற்றம் நிகழும்போதும் அதை உங்களால் கொண்டாட முடியும். எனவே அந்த விழிப்புணர்வைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டும் வருடமாக இந்தப் புத்தாண்டு உங்களுக்கு அமையட்டும்.

அனைவர்க்கும் எனது தமிழ்‌ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
அன்பும் அருளும்,

சத்குரு ஜக்கி வாசுதேவ், ஈஷா அறக்கட்டளை

Share this Story:

Follow Webdunia tamil