Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?
, வெள்ளி, 27 ஜூலை 2012 (16:49 IST)
கேள்வி: உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?

WD
சத்குரு: நீங்கள் கேட்பதைப் பார்த்தால், அது இறந்த காலமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போலிருக்கிறதே? உண்மையில், நிகழ்காலத்தில் கடவுளை அனுதினமும் ஒவ்வொரு கணத்திலும் நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கடவுளைத் தவிர வேறு எதையும் எங்கேயும் காணவில்லை.

எப்படி என்கிறீர்களா? கடவுள் என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? உங்களைச் சுற்றி படைக்கப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது? எங்கெல்லாம் படைப்பு நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தானே?

அதாவது அதோ அந்த மரத்தில், இந்தப் பூவில், உங்களில், என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத் தவிர வேறு எதை நீங்கள் காண முடியும்?
ஒரு படைப்பை அணுகும்போது, கவனம் பலவிதங்களில் அமையலாம். உங்கள் உடலைப் பற்றி‌தெரிந்துகொள்ள விழிகளால் கவனிக்கலாம். உங்கள் மனதைப் புரிந்து கொள்ள உங்களுடன் சிறிது நேரம் பேச்சு கொடுத்துக் கவனிக்கலாம். அல்லது உங்களுள் அடிப்படையான இயங்கும் உயிர்ச் சக்தியைக் கவனிக்கலாம்.

காலையில் நீங்கள் சாப்பிட்ட சிற்றுண்டி மாலைக்குள் உங்கள் உடலின் ஒரு பகுதியாக மாறுகிறதே, இந்த அற்புதத்தை யார் நிகழ்த்துவது? உங்களைப் படைத்தவர்தானே? அதை அவர் வெளியில் இருந்து கொண்டா செய்கிறார்? உங்களுக்குள் இருந்து கொண்டு அல்லவா செய்கிறார்? அப்படியானால், கடவுள் உங்களுள் இருக்கிறார் அல்லவா?

ஒவ்வொரு படைப்பிலும் அதைப் படைத்தவன் இருக்கிறான் என்று புரிந்து கொண்டால், கடவுளைப் பார்க்கத் தனியாக எந்தப் பயணமும் மேற்கொள்ளத் தேவை இல்லையே?

கடவுளை நான் பார்க்கிறேன். தினம் தினம் கணத்துக்குக் கணம் என்னிலும் என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காண்கிறேன், கண்டு கொண்டே இருக்கிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil