திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் அமைந்துள்ள அங்காளப் பரமேஸ்வரி ஆலயம் தற்போது மக்களால் அறியப்பட்டு வரும் கோயிலாகும்.
இந்தக் கோயிலின் சிறப்பம்சம் என்னவெனில் இங்கு அங்காளப்பரமேஸ்வரி தாயார் புற்று வடிவத்தில் காட்சி அளிக்கிறார்.
நிறை மாத கர்பிணியாக இருந்த அங்காளப் பரமேஸ்வரி தாயாருக்கு தண்ணீர் தாகம் எடுத்த போது எதிரே இருந்த குளத்தில் தண்ணீர் கொண்டு வர ஈஸ்வரன் சென்றதாகவும், அப்போது வலி தாங்க முடியாத தாயார் ஓரிடத்தில் அமர்ந்து அங்கேயே புற்றாக மாறினார் என்று இந்த கோயிலைப் பற்றிக் கூறுகிறார்.
அதன்படியே, இந்த கோயிலில் உள்ள முக்கிய தெய்வமான அங்காளப் பரமேஸ்வரி தாயார் புற்று வடிவத்தில், ஒரு கர்பிணிப் பெண் படுத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் காட்சி அளிக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலர் மட்டுமே வந்து வணங்கிச் சென்று கொண்டிருந்த இந்த கோயில் தற்போது பலராலும் அறியப்பட்ட கோயிலாக உள்ளது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், ஞாறிற்றுக் கிழமைகளிலும் தாயாரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு வளையல், எலுமிச்சை மாலை, பூ முதலியவற்றை வாங்கி வருகின்றனர்.
கோயிலில் அம்மனின் பாதங்களில் வைத்து அந்த எலுமிச்சைப் பழத்தை வாங்கி வந்து வீட்டில் வைப்பது நல்லப் பலன்களைத் தரும் என்று நம்புகின்றனர்.
முக்கியமாக குழந்தைப் பேறு வேண்டி இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. புதுமனத் தம்பதிகளும், திருமணமாகி நீண்டநாளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பகுதிகளும் இந்த கோயிலுக்கு வந்து தாயாரை வணங்கிச் சென்றால் குழந்தைப் பேறு கிட்டும் என்று நம்புகின்றனர்.
குழந்தைப் பேறு வேண்டி இங்கு வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டியதும், அம்மனுக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஜடை, வளையல், புடவை, பூ என சீமந்தத்திற்குண்டான அனைத்தையும் வாங்கி வந்து படைக்கின்றனர்.
கோயிலை எதிர்நோக்கிய படி திருக்குளம் உள்ளது. கோயிலைச் சுற்றி விரிந்து பரந்த காலி நிலங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கோயிலுக்கு அருகே ஏராளமான கடைகளும் வந்து விட்டன. பக்தர்கள் தங்குவதற்கான கட்டடமும் கட்டப்பட்டு வருகிறது.
எப்படிச் செல்வது?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில்கள் அனைத்தும் புட்லூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும். ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது.
பேருந்து மார்கமாகவும் சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புட்லூர் பேருந்து நிறுத்த்தில் நிற்கும். அங்கிருந்தும் நடந்து செல்லும் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.