பார்த்தசாரதி பெருமாள் கோயில்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:03 IST)
மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது.
108
திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலுக்கு பல பெரும் சிறப்புகள் உள்ளன. பிருந்தாரண்ய ஸ்தலம் என்றும், பஞ்ச வீரத்தலம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகும். இந்த கோயிலில் அமைந்திருக்கும் பார்த்தசாரதியின் திருமுகத்தில் பல தழும்புகள் இருக்கும். அதாவது மகாபாரதப் போரில் அர்ஜூனனுக்கு தேரோட்டியாக வந்து, போரில் பட்ட விழுப்புண்களின் தழும்புகள் அவை. மேலும் கிருஷ்ண அவதாரங்களில் மீசையுடன் காணப்படும் அவதாரமும் இவர். அர்ஜூனனை பார்த்தா என்று அழைப்பார்கள். தேரோட்டியை சமஸ்கிருதத்தில் சாரதி என்று கூறுவார்கள். எனவே பார்த்தனின் சாரதியாக வந்த இவர் பார்த்தசாரதி என்று அழைக்கப்பட்டார். இக்கோயிலில் பார்த்தசாரதிக்கும், நரசிம்மருக்கும் தனித்தனி கொடிமரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்கோயிலின் அமைப்பு
கோயிலில் அமைந்திருக்கும் மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கிறார். பெரும்பாலும் பெருமாள் தனது குடும்பத்தாருடன் காட்சி அளிப்பது மிகவும் அரிதாகும்.
சுமதி என்ற தொண்டைமான் மன்னனுக்கு ஏழுமலையான், பார்த்தசாரதியாக அருள் பாலித்த தலம் என்று இந்த கோயிலின் வரலாறு கூறுகிறது.
இவருக்கு அடுத்ததாக பார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சந்நதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அடுத்ததாக பார்த்தசாரதி சந்நிதியின் பின்புறத்தில், மேற்கு நோக்கியபடி உக்கிர நிலையில் ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் சந்நிதி அமைந்துள்ளது. இவரை அழகிய சிங்கர் என்றும் அழைப்பர். இவரது உக்கிரம் தணிக்கும் வகையில் நரசிம்ம சுவாமியின் திருமார்பில் லஷ்மி தேவியின் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கும். அவரது முகத்தை எப்படிப் பார்த்தாலும் சிரித்தபடியே நமக்குக் காட்சி அளிப்பார்.
அடுத்ததாக கஜேந்திர வரதராஜ சுவாமிகளின் சந்நிதி வேதவல்லித் தாயார் சந்நிதிக்கு பின்புறத்தில் கிழக்கு நோக்கியபடி அமைந்துள்ளது. அதாவது கஜேந்திரா என்ற யானை நீர்நிலை ஒன்றில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அங்கிருந்த முதலையின் வாயில் சிக்கிக் கொண்டது. தனது உயிரைக் காப்பாற்றுமாறு யானை பெருமாளை வேண்டியது. அப்போது உடனடியாக கருடனில் வந்த பெருமாள் முதலையிடம் மாட்டியிருந்த யானையை மீட்டார். அப்போது யானைக்கு அருள் பாலித்த நிலையில் இந்த சந்நிதியில் கஜேந்திர வரதராஜ சுவாமிகளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
பார்த்தசாரதி சந்நிதியின் இடது புரத்தில் ஆண்டாளின் சந்நிதி அமைந்துள்ளது. ஆண்டாள் பூதேவி என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்த கோயில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி சரஸ் என்பதாகும். இந்த திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.
கோயிலின் சிறப்பு
இத்திருத்தலத்தில் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சி கொடுத்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
ஐப்பசி மாத திருமூல நன்னாளில் நடைபெறும் கைத்தல சேவை சிறப்பு வாய்ந்தது. உரியடி திருவிழா, இராப்பத்து, பகல்பத்து திருவிழாக்கள் சிறப்புடையவை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் இந்த கோயிலில் சிறப்பாக வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
வழிபாட்டு நேரம்
தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். தமிழக அரசின் அன்னதானத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எப்படிச் செல்வது
பறக்கும் ரயில் சேவையில் திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். திருவல்லிக்கேணி பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது. சென்னையில் எல்லா முக்கிய பேருந்து வழித்தடங்களில் இருந்தும் இங்கு பேருந்துகள் விடப்படுகின்றன. சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் பேருந்துகள் பலவும் திருவல்லிக்கேணி வழியாகத்தான் செல்கின்றன.