மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும் பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள்.கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம்.இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம்.
இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்றுவிட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும்.
எனவே இறைத்தன்மை வாய்ந்த இத்தலத்திற்கு சென்று வள்ளி மலையின் அற்புதத்தை கண்டு வாருங்கள். வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் முருகனின் அருளைப் பெற்று வாருங்கள்.