திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கைக்குழந்தையுடன் வரும் தாய் விரைவு தரிசனத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்ததை மாற்றி, கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், விரைவாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
உடல் ஊனமுற்றோர், முதியவர்கள், மற்றம் கைக்குழந்தையுடன் வரும் தாய் ஆகியோருக்கு விரைவு தரிசனம் அளிக்க, தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இருக்கிறது. இவர்கள் மகா வாயில்கள் வழியே அழைத்து செல்லப்படுவார்கள். எனவே அவர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசித்து வர முடிகிறது.
ஏழுமலையான் கோவிலின் புதிய நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணாராவ் பதவி ஏற்று இருக்கிறார். அவர் நேற்று காலை சாதாரண பக்தர்கள் செல்லும் தர்ம தரிசன வரிசையில், பக்தர்களோடு பக்தராக நடந்து சென்றார்.
அப்போது அவர், வரிசையில் காத்து இருந்த பக்தர்களிடம் கலந்து பேசினார். அவர்களிடம் குறைகளைக் கேட்டார். பொது வரிசையில் நின்ற பக்தர்களில் சிலர், நாங்கள் குடும்பமாக ஏழுமலையானை தரிசிக்க வெகு தூரத்தில் இருந்து வருகிறோம். இதில் கைக்குழந்தையுடன் வரும் தாய்க்கு மட்டும் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள். ஆனால், அந்த பெண்ணின் கணவர் பொது தரிசனத்துக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. அவர் தரிசனம் முடிந்து வரும் வரை, தரிசனத்தை முடித்த தாய், தனது குழந்தையுடன் 5 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை தனியாக வெளியே காத்து இருக்க வேண்டியது இருக்கிறது என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நிர்வாக அதிகாரி கிருஷ்ணாராவ், இது மிகுந்த வேதனையான விஷயம். இனி, கைக்குழந்தையுடன் வரும் தாயுடன், அவரது கணவருக்கும் விரைவு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
அதன்படி உடனடியாக கைக்குழந்தையுடன் வந்த தம்பதிகள் ஏழுமலையானை விரைவு தரிசனம் மூலம் தரிசித்துவிட்டு சென்றனர்.