Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருள்மிகு நாகராஜா திருக்கோயில்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:06 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.

கேரள மாநிலம் மன்னார் சாலையில் உள்ள நாகாராஜா திருக்கோயிலைப் போன்று, தமிழ்நாட்டின் தென்கோடிக் குமரியில் உள்ள இத்திருக்கோயிலும் மிகப் பிரசித்தி பெற்றதாகும்.

பசுமையான வயல்வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இத்திருக்கோயிலைச் சுற்றியும் ஏராளமான நாகப் பாம்புகள் தென்படுவதாக கூறும் உள்ளூர் மக்கள், ஆனால் அவைகள் கடித்து யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை என்று கூறுகின்றனர். இச்சிறப்பினை உலக மதங்களின் களஞ்சியமும் உறுதி செய்வதாக இத்திருத்தல விவர ஏடு கூறுகிறது.

திருக்கோயிலின் வாயிலில் இரண்டு பெரிய 5 தலை நாகங்களின் சிலை நம்மை வரவேற்கின்றன. இத்திருத்தலத்தின் கருவறையில் 5 தலை நாகத்தின் உருவச் சிலையே மூலவரான நாகராஜ தெய்வமாக வழிப்படப்படுகிறது. நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

webdunia photoWD

நாகராஜாவை வழிபட்டப் பின்னர், அவருடைய வலப் பக்கத்திலுள்ள சன்னிதானத்தில் வாயு ரூபியாக எழுந்தருளியுள்ள சிவனை தரிசிக்கின்றனர்.

அனந்தக்கிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலின் தூண்களில் சமண சமயத்தின் தீர்த்தங்கர்களான பார்சுவ நாதரும், மகா வீரரும் தவக்கோலத்திலுள்ள காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவாயில் நேபாள பெளத்த விகாரை நினைவூட்டும் வண்ணம் உள்ளதென கூறுகின்றனர். எனவே இத்திருக்கோயில் சைவ, சமண, வைணவ, பெளத்த மார்க்கங்களின் சங்கமமாக கருதப்படுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கோயிலின் மூலவருக்கு பின்னால் ஓட வள்ளி என்று ஒரு கொடி இருந்ததென்றும், நாளடைவில் அது அழிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் பதியம் செய்து வளர்க்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இந்த ஓட வள்ளி இலையைத்தான் பிரசாதமாக வழங்கி வந்தனர் என்றும், ஒவ்வொரு இலையும் ஒரு சுவையுடன் இருக்கும் அந்த இலைகள் தொழுநோய் போன்ற கடும் வியாதிகளை குணப்படுத்தக் கூடியது என்றும் கூறுகின்றனர்.

மூலவர் நாகராஜா இருக்குமிடத்தின் மேல் பகுதி (விமானம்) கூரையால் வேயப்பட்டுள்ளது. இது எந்தக் கோயிலிலும் காணப்படாத ஒரு சிறப்பாகும். அது மட்டுமின்றி, மூலவரை சுற்றியுள்ள மண் பகுதி எப்போதும் ஈரமாகவே இருக்கும் என்றும், அதுவே ஆண்டாண்டுக் காலமாக பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தும் இன்றுவரை அங்கு மண் குறையாதிருப்பது அதிசயம்தான் என்றும் கூறுகின்றனர்.

இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன. அவைகளின் மீது மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி அபிடேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.

webdunia photoK. AYYANATHAN


நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம் பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது.

வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் திரளாக வருகை தந்து நாகராஜருக்கு பால் வார்ப்பது புனிதமாக கருதி செய்து வருகின்றனர்.

நாக தோஷங்களைப் போக்கும் முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.

அமைவிடம்: கன்னியாகுமரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவிழாக்கள்: தைப் பூச தேர்த் திருவிழா, ஆவணி மாத ஞாயிற்றுக் கிழமை, கார்த்திகை மாத திருக்கார்த்திகை நாள்.

இந்தி படத்துக்காகதான் ‘புறநானூறு’ படத்தைக் கைவிட்டாரா சூர்யா?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

’எல்லோரும் எல்லாமும் கைவிடும்போது உன்னை நம்பு’: அஜித்தின் விடாமுயற்சி டீசர்..!

'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

எலான் மஸ்க் என் ட்விட்டரை முடக்கினால் எனக்கு வெற்றி: சிவகார்த்திகேயன்..!

Show comments