Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

Ilavarasan

, திங்கள், 7 ஏப்ரல் 2014 (08:36 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று அனைத்து தொகுதிகளிலும் நடைபெறுகிறது.
 
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 29ஆம் தேதி தொடங்கி 5ஆம் தேதி வரை நடைபெற்றது.
 
தமிழகத்தில் 39 தொகுதியிலும் மொத்தமாக ஆயிரத்து 318 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 198 பேர் ஆண்கள், 118 பேர் பெண்கள், இரண்டு பேர் அரவாணிகள். வடசென்னையில் அதிகபட்சமாக 53 பேரும், அடுத்தபடியாக மதுரையில் 52 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
நாகையில் குறைந்தபட்சமாக 16 வேட்பாளர்களும், அதற்கு அடுத்தபடியாக நீலகிரியில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக மதுரை, காஞ்சீபுரம் தொகுதியில் 6 பெண்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். திண்டுக்கல்லில் ஒரு பெண் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அரவாணிகள் 2 பேர் மதுரையில் மனு தாக்கல் செய்தனர்.
 
ஆலந்தூர் இடைத்தேர்தலுக்காக மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 16 பேர் ஆண்கள்.
 
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) வேட்புமனு பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை தொடங்கி மாலை 3 மணிக்கு முடிவடையும். வேட்புமனு பரிசீலனையின் போது, தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் உதவி அதிகாரி, பொதுப்பார்வையாளர் உடன் இருப்பர். வேட்புமனு பரிசீலனை நடக்கும் இடத்திற்கு வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 
வேட்பு மனுக்களில் குறைபாடுகள் இருந்தால், சரி செய்யக்கூடிய குறைபாடுகளை, அந்தந்த வேட்பாளருக்கு நோட்டீஸ் கொடுத்து நிவர்த்தி செய்யப்படும். அந்த குறைபாடுகளை எத்தனை மணிக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருக்கும். அந்த வகையில் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, வேட்புமனுக்களில் குறைபாடுகளை வேட்பாளர்கள் ஏற்கனவே நிவர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.
 
நிவர்த்தி செய்ய முடியாத குறைபாடுகள் இருந்தால் அந்த வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்காக 9ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அன்று முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் பலர் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள்.
 
எலட்ரானிக் ஓட்டு எந்திரத்தின் கட்டுப்பாட்டு எந்திரத்துடன், 4 ஓட்டு பதிவு செய்யும் எந்திரங்களை மட்டுமே இணைக்க இயலும். ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் அதிகபட்சம் 15 வாக்காளர்களின் பெயரை மட்டுமே சேர்க்க முடியும். கடைசி பட்டன் நோட்டா. அந்த வகையில் ஒரு தொகுதியில் 64 வேட்பாளர்களுக்கும் மேலாக போட்டியிட்டால், அங்கு எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த முடியாது.
 
மாறாக, அங்கு ஓட்டுச்சீட்டுகள் முறை அமல்படுத்தப்பட்டுவிடும். ஆனால் அந்த நிலை தமிழகத்தில் எந்த தொகுதியிலும் ஏற்படவில்லை. ஏனென்றால் எந்த தொகுதியிலும் 64 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
 
வேட்புமனு தள்ளுபடி மற்றும் வேட்புமனு வாபஸ் பெறுதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பிறகு 9ஆம் தேதி, ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்பதற்கான இறுதிப்பட்டியல் தெரிய வரும்.
 
இறுதிப்பட்டியல் தயாரானதும், அதன் அடிப்படையில் அந்தந்த தொகுதிக்கு ஏற்ப, ஓட்டு பதிவு எந்திரத்தில் ஒட்டப்பட வேண்டிய வேட்பாளர் பெயர்கள் அடங்கிய சீட்டு அச்சடிக்கப்படும். அந்த சீட்டு ஒட்டப்பட்ட பிறகு வாக்களிப்பதற்காக அந்த எந்திரங்கள் தயார்படுத்தப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil