Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக, திமுகவிற்கு போடும் ஓட்டு, மறைமுகமாக பாஜகவுக்கு போடும் ஓட்டாகும் - ஜி.ராமகிருஷ்ணன்

அதிமுக, திமுகவிற்கு போடும் ஓட்டு, மறைமுகமாக பாஜகவுக்கு போடும் ஓட்டாகும் - ஜி.ராமகிருஷ்ணன்

Ilavarasan

, வியாழன், 10 ஏப்ரல் 2014 (19:28 IST)
மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் போடும் ஓட்டு, மறைமுகமாக பாஜகவுக்கு போடும் ஓட்டாகும் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.
 
முன் வாசலை காங்கிரசுக்கும், பின்வாசலை பிஜேபிக்கும் திறந்து வைத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி என்று கடலூர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
 
கடலூர் மக்களவை தொகுதியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கு.பாலசுப்ரமணியனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் கடலூர் தேரடித்தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அவர் பேசியது, மற்ற கட்சிகளில் வேட்பாளர் தேர்வு நடை பெறுவதுபோல் இடதுசாரி கட்சிகளில் நேர்கானல் நடைபெறுவது இல்லை, கோடிக்கணக்கில் செலவு செய்வீர்களா என்று கேட்பது இல்லை, தலைவர்களின் காலில் விழுந்து கிடப்பது இல்லை. மாறாக வேட்பாளர் மக்கள் தொண்டனா, போராளியா, போராட்டங்களுக்காக சிறைசென்றுள்ளாரா, காவல்துறையிடம் அடிவாங்கி உள்ளாரா என்று பார்த்துதான் தேர்வு செய்கிறோம், வேட்பாளர் போட்டிருக்கும் சட்டையோடுதான் பிரச்சாரத்திற்கு வரவேண்டுமே தவிர, வேட்பாளர் செலவு செய்யக்கூடாது. கட்சிதான் தேர்தல் செலவை கவனிக்கும்.
 
மதமோதலை தடுத்த காரணத்தினால் காந்தியை படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் அமைப்புதான் மோடிக்கு வழிகாட்டுகின்றனர். மதவெறி, மதவாத அறிக்கையாகத்தான் பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது.  இந்த அறிக்கைக்கு அந்த கட்சியோடு கூட்டணிவைத்திருக்கும் கட்சிகள் என்ன பதில் சொல்வார்கள்.
 
சில நாட்களுக்கு முன்பு மோடியை புகழ்ந்து பேசிய கருணாநிதி, மதவாதத்தை தூக்கிபிடிக்கும் பாஜக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சிக்கவில்லை. காங்கிரசோடு மென்மையான போக்கை கடைபிடித்து, கையோடு கைகோர்போம் என்று சூசகமாக சொல்கிறார் திமுக தலைவர் கருணாநிதி காங்கிரஸ்க்கு முன்வாசலையும், பாஜகவுக்கு பின்வாசலையும் திறந்து வைத்துள்ளார் என்றார்.
 
வகுப்புவாதத்திற்கும், மதவாதத்திற்கும் தமிழ்நாட்டில் யார் முட்டு கொடுத்தாலும், இடதுசாரி கட்சிகள் அதை தடுத்து நிறுத்தும். மதவாதத்தை நுழைய விடாது. மக்களவை தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் போடும் ஓட்டு அது மறைமுகமாக பாஜகவுக்கு போடும் ஓட்டாகும்.
 
ஊழல் குறித்து பேச இடதுசாரி கட்சிகளுக்கு மட்டுமே தகுதி உள்ளது, இந்தியாவில் 8 மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் மாநில முதல்வர்களாக இருந்துள்ளனர் இவர்களில் யாரேனும் ஊழல் புரிந்துள்ளார்களா, முதல்வர் பதவி முடிந்து வருகிற போது, எளிமையாகவும், அவர்களின் துணிகளை எடுத்துக் கொண்டு குடியிருப்பை காலிசெய்துவிட்டு கட்சி அலுவலகம் வந்து தங்கியவர்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர்கள்.
 
வாக்களார்கள் நமக்கு புதியவர்கள் அல்ல, இத்தனை ஆண்டு காலமும் அவர்களுக்காகவே உழைத்திருக்கிறோம், போராடி இருக்கிறோம் அவர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு உரிமையோடு வாக்களிப்பார்கள். 2014 நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரும் திருப்பு முனையாக அமையும் என்றார்.
 
மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலர் டி.ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர செயலர் வி.சுப்புராயன் வரவேற்றார். ஒன்றிய செயலர் ஜே.ராஜேஷ்கண்ணன், சிப்காட் செயலர்  ஆர்.ஆளவந்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செ.தனசேகரன், எஸ்.துரைராஜ், ஜி.மாதவன், பி.கருப்பையன், எம்.மருதவாணன், எஸ்.வாலண்டினா, வி.முத்துவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளர் கு.பாலசுப்புரமணியன், மாநில துணைசெயலர் சி.மகேந்திரன், மாவட்ட செயலர் எம்.சேகர் உள்ளிட்டோர் பேசினர்.  மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி நன்றி கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil