திருமணத்திற்கு முன்பு சந்திக்க மறுத்த இளம்பெண் மீது ஆசிட் வீசிய வாலிபருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது நீதிமன்றம்.
சென்னை ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவருடைய மகள் ஸ்ரீவித்யா (21). தந்தையை இழந்த வித்யா தன்னுடைய தாயார் சரஸ்வதி, அண்ணன் விஜய் ஆகியோர் பாதுகாப்பில் வளர்ந்தார். பிளஸ்-2 படித்து முடித்த வித்யா, ஆதம்பாக்கம், திருவள்ளுவர் மெயின் ரோட்டில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது, ராபின் என்பவருடன் வித்யாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், ராபினுக்கு கெட்ட பழக்க வழக்கம் இருந்ததால், அவரை விட்டு, வித்யா விலகினார்.
இதன்பின்னர், கம்ப்யூட்டர் மையத்துக்கு அடிக்கடி வந்து சென்ற விஜயபாஸ்கர் என்ற வாலிபர், வித்யாவை காதலிப்பதாக கூறினார். காதலை ஏற்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால், வித்யா அவன் காதலை ஏற்றுக்கொண்டார். இந்த காதலை இருவரது குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் செய்து வைத்தனர். இதையடுத்து, வித்யாவை விஜயபாஸ்கர் அடிக்கடி வெளியில் அழைத்து சென்று வந்தார். இதற்கு வித்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து, திருமணம் முடியும் வரை விஜயபாஸ்கருடன் வெளியில் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.
இதையடுத்து வித்யா அவருடன் வெளியில் வர மறுத்ததால் விஜயபாஸ்கர் கடுமையான கோபத்தில் இருந்தார். வித்யா தன்னை ஏமாற்றுவதாக நினைத்து, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி கம்ப்யூட்டர் மையத்துக்குள் புகுந்து வித்யா மீது அவர் திராவகத்தை வீசியுள்ளார். வித்யா, குனிந்து கொண்டதால், அவருடைய உடலில் சில இடங்களில் மட்டும் திராவகம் பட்டது. வீசப்பட்ட திராவகம் தரையில் கொட்டிக்கிடந்தது. ஆத்திரம் தீராத நிலையில் இருந்த விஜயபாஸ்கர், வித்யாவை தரையில் தள்ளி அவரது முகத்தை தரையில் கொட்டிக்கிடந்த திராவகம் மீது வைத்து தேய்த்ததில் வித்யாவின் முகம் வெந்தது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களை தள்ளி விட்டு, விஜயபாஸ்கர் தப்பியோடி விட்டார். உடல் வெந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வித்யா சேர்க்கப்பட்டார்.
அப்போது, மாஜிஸ்திரேட்டிடம் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக வித்யா கொடுத்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விஜயபாஸ்கரை கைது செய்தனர். இந்த வழக்கு காஞ்சீபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, விஜயபாஸ் கருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து விஜயபாஸ்கர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கூறுகையில், “இந்த வழக்கில் விஜயபாஸ்கருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் வித்யாவின் முதல் காதலன் ராபின், வித்யா மீது திராவகத்தை ஊற்றியதாகவும், அதை தடுக்கச் சென்றபோது தன் உடலிலும் காயம் ஏற்பட்டது என்றும், இந்த வழக்கில் ராபினை கைது செய்யாமல், தன்னை கைது செய்து விட்டதாகவும் விஜயபாஸ்கர் தரப்பில் வாதிடப்பட்டது. உண்மையில் விஜயபாஸ்கர் உடலில் காயம் உள்ளது. அவர் சொல்வதை உண்மை என்று கருத்தில் எடுத்துக் கொண்டாலும், இறந்து போன வித்யா திராவகம் வீச்சு குறித்து, மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தில், விஜயபாஸ்கர்தான் திராவகம் ஊற்றினார் என்று தெளிவாக கூறி இருக்கிறார். சாகும் நிலையில் இருக்கும் ஒரு பெண், உண்மையான குற்றவாளியை காப்பாற்ற நினைக்க மாட்டார். அதேநேரம் குற்றவாளியை காப்பாற்ற அப்பாவி மீது பழியை போடமாட்டார். கீழ் கோர்ட்டு அனைத்து தரப்பு சாட்சிகளின் அடிப்படையின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்துள்ளது. இதில் நாங்கள் தலையிடத் தேவையில்லை. கீழ் கோர்ட்டு தண்டனையை உறுதி செய்கிறோம். எனவே, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.” என்றனர்.