தமிழக மக்களிடம் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாக தான் நாங்கள் மக்கள் நலக்கூட்டணியை ஏற்படுத்தினோம் என்று வைகோ விளக்கியுள்ளார்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி-தமாகா சார்பில் கோவை பீளமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய வைகோ, “இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள். அந்த பணம் மக்களிடம் கொள்ளையடித்த பணம். அதை நாம் வாங்கினால் நமக்கு பாவம் தான் வரும். எனவே அந்த பணத்தை யாரும் வாங்கக்கூடாது.
தமிழக மக்களிடம் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதன் காரணமாக தான் நாங்கள் மக்கள் நலக்கூட்டணியை ஏற்படுத்தினோம். தற்போது அந்த கூட்டணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கிறார். தமாகாவும் கூட்டணியில் இணைந்து உள்ளது.
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக எங்கள் கூட்டணி இருப்பதால் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கூட்டணி 150 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கடந்த 1967-ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் 6 கட்சி தலைவர்கள் கொண்ட கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த கூட்டணியில் ஒரு தலைவர் தவறு செய்தால் உடனே மற்ற தலைவர்கள் சுட்டிக்காட்டி அந்த தவறை திருத்துவார்கள். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதும், மதுமூலம் கிடைத்த வருமானத்தை ஈடுகட்ட கனிமவளம், பத்திரப் பதிவு மூலம் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.