Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அந்த 5 கோடி ரூபாய் எங்கே? ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

அந்த 5 கோடி ரூபாய் எங்கே? ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
, செவ்வாய், 24 நவம்பர் 2015 (23:30 IST)
முதலமைச்சரானவுடன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சென்னை மாநகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்த ஜெயலலிதா அதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். அந்த நிதி எங்கே செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதி ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நிதித்துறை செயலாளர் கே.சண்முகத்திடம் வழங்கினேன்.
 
இந்த நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு மிகவும் தாமதம் செய்தது. பிறகு தலைவர் கலைஞர் அறிக்கை விட்டதாலும், நானே தலைமைச் செயலாளரின் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாலும் நிலைமை மாறியது. "நிதித்துறைய செயலாளரிடம் நிதியை அளியுங்கள்" என்று நேற்று மாலை தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் சொன்னார்கள். இதை அரசியலாக்க விரும்பவில்லை என்பதால் நிதித்துறை செயலாளரை இன்று சந்தித்து நிதியை வழங்கினேன்.
 
கடலூரிலும் சரி, சென்னையிலும் சரி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக இதுவரை செலவிடப்பட்ட நிதிக்கு வெள்ளை அறிக்கை ஒன்றை தமிழக அரசு வெளியிட வேண்டும். அதே போல் முதலமைச்சரானவுடன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற சென்னை மாநகரை ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்த்த ஜெயலலிதா அதற்காக 5 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். அந்த நிதி எங்கே செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் வெளியிட வேண்டும்.
 
மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிவாரண நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகப் போய் சேருவதற்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியபடி அனைத்துக் கட்சிக் குழுவினை அமைத்து நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று நானும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
 
மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் சிறப்பான முறையில் நிவாரண உதவிகளை செய்து வருகிறார்கள். அந்தப் பணி தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
இன்னும் சில மாதங்கள் தான் இந்த துயர ஆட்சி. அதன்பின் நம்பிக்கையான விடியலைத் தமிழகம் காணத் தயாராக இருக்கிறது என்பதால் நாம் நம் கடமையைச் செய்வோம் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil