Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் சமூக விரோதிகள் என்றால், இவர்கள் எல்லாம் யார்? - பட்டியலிடும் சீமான்

மீனவர்கள் சமூக விரோதிகள் என்றால், இவர்கள் எல்லாம் யார்? - பட்டியலிடும் சீமான்
, வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:40 IST)
மண்ணின் உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய குற்றமா? இவர்கள் சமூக விரோதியா? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மீனவர்கள் குப்பத்தில் தஞ்சமடைந்த மாணவர்கள் இளைஞர்களை தாக்கக் கூடாது என்று மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆதரவு கொடுத்த நடுக்குப்பம் மக்களின் கடைகள் உடைமைகள் என்று அனைத்தும் போலீசால் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட சென்னை நடுக்குப்பம் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சென்னை மெரீனாவில் அறவழியில் போராட்டத்தை நடத்தினார்கள்.

ஆனால் அரசும், காவல்துறையும் கூட்டணி வைத்து, அதை ஒரு வன்முறை களமாக மாற்றி விட்டது. அறவழிப் போராட்டம் வெற்றி பெற்றதாக காட்டிவிடக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட அரசு வன்முறைதான் இது.

நடுக்குப்பத்தில் உள்ள மீன் சந்தைதான் அம்மாக்களுக்கு வாழ்வாதாரம். அதை கொளுத்தி இவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டிய அவசியம் என்ன? போராடும் இளைஞர்களுக்கு தண்ணீர், சாப்பாடு கொடுத்ததை தவிர இவர்கள் வேறு என்ன செய்தார்கள்?

இந்த குப்பத்தில் வாழும் மக்களும், மீனவ மக்களும் இல்லாமல் இளைஞர்கள் போராடியிருக்க முடியாது. ஆகவேதான் குப்பத்து மக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அப்படியானால் மண்ணின் உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகப்பெரிய குற்றமா? இவர்கள் சமூக விரோதியா? அப்படியானால் ஆற்று மணலை அள்ளி விற்பவன்,  மலையை குடைந்து விற்கிறவன், மரத்தை வெட்டி விற்பவன், பல கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் செய்பவனெல்லாம் சமூக காவலர்களா? இவற்றைஎதிர்த்து போராடுபவர்கள் சமூக விரோதியா?

பெண் காவலர்கள் உட்பட பல காவலர்கள் பாஸ்பரஸ் தூவி நடுக்குப்பத்தை கொளுத்தியிருக்கிறார்கள். திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தி, இனிமேல் தமிழர்களாகிய மாணவர்கள், இளைஞர்கள், போராட வரவே கூடாது, போராடுவபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமே இந்த மக்களுக்கு வந்திரக் கூடாது என்பதுதான் அரசு மற்றும் காவல்துறை நோக்கம்.

காயம்பட்டவர்களை சிகிச்சை அளித்து வந்த அரசு மருத்துவமனை அவர்களை வெளியேற்றி விட்டது. அவர்கள் எங்கு போய் சிகிச்சை பெற்றுக்கொள்வார்கள். அரசு அதிகாரம் மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமா, அழிக்க வேண்டுமா?

நடுக்குப்பத்துக்கு தினம் காலையில் வந்து காவல்துறையினர் மிரட்டுகின்றனர். ஒரு தனித்தீவு போல நடுக்குப்பம் ஆக்கப்பட்டிருக்கிறது. யாரும் இங்கு வரமுடியாது. யாரும் இங்கிருந்து போகமுடியாத என்ற நிலை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிக கொடூரமான விசாரணை ‘வாட்டர்போர்டிங்': மீண்டும் அமல் படுத்த டிரம்ப் திட்டம்!!