Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சங்கராபுரம் தேர் திருவிழா கலவரம்: கி.வீரமணி கண்டனம்

சங்கராபுரம் தேர் திருவிழா கலவரம்: கி.வீரமணி கண்டனம்
, செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (02:23 IST)
விழுப்புரம் மாவட்ட சங்கராபுரம் அருகில் நடைபெற்றுள்ள ஜாதிக் கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகத்தில், ஜாதிக் கலவரங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே உள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் தேர் திருவிழா, கோயில் திருவிழா என்பவை - வடலூர் வள்ளலார் அவர்கள் மனங்குமுறி சொன்னதைப் போல் - எல்லாம் பெரியவர்களின் பொம்மை விளையாட்டு தான் என்றாலும், இதில் அடிதடி, ஜாதி மோதல்கள், குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் இடையே இந்த படி நிலை பேதம் வளர்க்கும் ஜாதிகளிடையே இப்படி முட்டி மோதி ரத்தம் சிந்தி, வீடுகள் எரிக்கப்பட்டு, பல உயிர்கள் பலியாக்கப்பட்டு, ஏழை - எளிய மக்கள் குடும்பம் குடும்பமாய் பாதிக்கப்படும் காட்சி சர்வ சாதாரணமாக உள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள சேஷ சமுத்திரம் என்ற சிற்றூரில், 79 குடும்பங்கள் - 250 பேர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
 
இரு பிரிவினரிடையே தேர் இழுப்புத் திருவிழாவை முன்னிட்டு, பெருங்கலவரம் வெடித்துள்ளது. இதனால், கடந்த 4 ஆண்டுகளாக இதனால் இத்திருவிழா நடைபெறவில்லை. காரணம் விழா நடத்த காவல்துறை அனுமதிக்கவே இல்லை.
 
தேர் திருவிழா நடத்த தாசில்தார் இரு தரப்பினரிடமும் நடத்திய பேச்சு வார்த்தை காரணமாக தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. தேரைப் பொதுப் பாதை வழியாக இழுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
 
சுடுகாட்டுக்குத் தனி பாதைபோல தேர் ஓட்டத்திற்கும் தனித் தனி வீதிகளா? இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட நேர்ந்ததுகூட வெட்கப்படத்தக்கதே. எதிர் தரப்பினர் திரண்டு வந்து தேர்மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் தேர் எரிந்தது, தீயை அணைக்க முயன்ற போலீசார் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு தாக்குதல் - தெரு விளக்குகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. 4 வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
 
தமிழக காவல்துறையின் உளவுத்துறை முன்கூட்டியே, சட்டம் ஒழுங்கு குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கூறி எச்சரிக்கை செய்திருக்க வேண்டாமா? காவல்துறையின் இந்த இரு பிரிவினர்களுக்கிடையே நுண்ணறிவுப் பிரிவுக்கு நல்ல ஒருங்கிணைப்பு பல இடங்களில் இருப்பதில்லை. அதனால் தான் இது போன்ற நிலை.
 
இப்படி கோயில் திருவிழாக்கள் - குறிப்பாக கிராமங்களில் கிராம மக்களை ஒன்றுபடுத்தப் பயன்படவில்லை. மாறாக அவர்கள் ஜாதி அடிப்படையில் அடித்து நொறுக்கி நாசப்படுத்தி, வீட்டை எரிக்கும் கொடுமைகள் தான் பரவலாக நடந்து வருகின்றன. கண்டதேவி தேரோட்டத்தில் இதே போல் நடந்தது. தருமபுரி, மரக்காணம், சேஷசமுத்திரம் என்று தொற்றுநோய்ப் போலப் பரவ அனுமதிக்கலாமா?
 
இந்த லட்சணத்தில் பிஜேபி ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி போன்ற மதவெறி அமைப்புகள், அதனைச் சார்ந்த குருமூர்த்திகள் ஜாதியை சிலாகித்துப் பேசும் அவலமும் தொடர்கிறது. காவல்துறையால் சாதிக்க முடியாதது ஜாதி கட்டுக்கோப்புதான் சாதிக்கிறது என்று பைத்தியக்காரனுக்கு கள் ஊற்றியதுபோல சிலர் உளறுகின்றனர்.
 
ஜாதிவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிந்திருந்தும் ஏனிந்த நிலை? தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசும் இதில் அரசியல் லாப - நட்டம் பார்க்காமல் உரிய நடவடிக்கைகளைக் கடுமையாக எடுக்க வேண்டும்.
 
காவல்துறை அதிகாரிகள்மீதே பெட்ரோல் குண்டு வீசுவது சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு இப்படி அவலத்திற்கு ஆளாகலாமா?
 
திட்டமிட்ட கூலிப்படை கொலைகள் தாலி முதல் தங்க சங்கிலி பறிப்பு என்று அன்றாட நிகழ்வுகள் இன்று வானிலை நிலவரம்போல இன்று கொலை, தாலி சங்கிலி பறிப்பு என்ற ஒரு அட்டவணையே போடுகின்றன - சில ஏடுகள்.
 
மது போதையைவிட மோசமானது பக்தி போதை. ஜாதி மதம் மனிதர்களை வாழ வைக்கவில்லை, மாறாக இரத்தம் சிந்தவே வைத்து வருகிறது அனுதினமும்.
 
எனவே, பக்திப் போதை - மதுப் போதையைவிட மோசமானது என்று புரிகிறதல்லவா? விரைவில் அமைதி திரும்பட்டும் அனைவரும் ஒன்றுபட்டு வாழட்டும். பாதிக்கப்பட்டோருக்கு ஆழந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil