Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி : விஜயகாந்த் ஆவேசம்

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி : விஜயகாந்த் ஆவேசம்

மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி : விஜயகாந்த் ஆவேசம்
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (16:23 IST)
அதிமுக ஆட்சி மக்களை மூடர்களாகவும், முட்டாள்களாகவும் மாற்றி வருகிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலம் பெற வேண்டி அதிமுக சார்பாக நடத்தப்படும் பால் குட ஊர்வலங்கள் சிறு பிள்ளைகளுக்கு அழகு குத்துதல், காவடி தூக்குதல், பச்சை குத்துதல் போன்ற தொடர்ந்த நிகழ்வுகளாக நடந்து வருகிறது.
 
நேற்று திருவண்ணாமலையில் பெண்கள் பால்குடம் எடுக்க வந்த கூட்டத்தில் சிக்கி கமலாம்மாள் என்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்துவிட்டார் என்றும், 17 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்ற செய்தி வேதனை தரக் கூடிய ஒன்று. அதிமுகவில் இதுபோன்ற செயல்பாடுகள் மனித உரிமை மீறல்களாக நடந்து வருகின்றன. 
 
தேர்தல் கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் தருவதும், பால்குடம் எடுக்க வரும் பெண்களுக்கு 500 ரூபாயும், குடம், புடவை போன்ற பொருட்களை இலவசமாக வழங்குகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டி கிராமம் கிராமமாக சென்று லாரிகளிலும், பஸ்களிலும், வேன்களிலும் மக்களை ஏற்றி வருவதும், அதனால் பல பேர் இறப்பதும், மயக்கமடைவதும் தமிழகத்தில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது என மக்கள் பேசி கொள்கிறார்கள். 
 
அதிமுக அரசு முற்றிலும் செயல் இழந்த அரசாக மக்கள் பிரச்சனைகளிலும் நாட்டின் முக்கிய பணிகளிலும் கவனம் செலுத்துவதை விட்டு, மூடநம்பிக்கையை வளர்க்கும் கூடாரமாக செயல்பட்டு வருவது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. வரப்போகும் மழைக்காலத்திற்கு முன்பே தமிழக நீர்நிலைகளை தூர்வாரியும், விவசாயிகளின் பிரச்சனைக்கு உண்மையான தீர்வுகாண காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசை ஆட்சி செய்த கட்சிகளும், தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்த கட்சிகளும் அரசியல் ஆக்காமல், அண்டை மாநிலங்களை குற்றம் சாட்டியும் இனிவரும் காலங்களை வீணடிக்காமல் தமிழக நதிகளை இணைத்து வரும் மழை நீரை கடலில் கலக்க விடாமல் சேமித்து வைப்பது போன்ற ஆக்கப்பூர்வ பணிகளை செயல்படுத்த வேண்டும். 
 
நேற்றுடன் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்துள்ள நிலையில் இன்று முதல் அரசு அதிகாரிகளை நியமித்துள்ளீர்கள். இலஞ்சம் ஊழலுக்கு வழிவகுக்காமல் மக்கள் தேவைகளை தங்கு தடையின்றி நடத்திட இந்த அரசு முழுவேகத்துடன் செயல்பட வேண்டும். ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் தங்கள் சுய விளம்பரத்திற்காக மக்களை பகடை காய்களாக நடத்தும் இந்த அரசின் செயல்களை நீதிமன்றமும், மனித உரிமை ஆணையமும் தலையிட்டு இதுபோன்ற திருவண்ணாமலையில் நடந்த சம்பவங்கள் நிகழாவண்ணம் தடுத்திட வேண்டும். 
 
பகுத்தறிவை வளர்க்க வேண்டி தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடிய தமிழகத்தில், அவர்கள் வழியில் வந்த கட்சி மக்களை மூடர்களாக, முட்டாள்களாக மாற்றி வருவது வேதனை அளிக்கிறது.
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரும்பு பொருட்களை ஈர்க்கும் உடம்பு: காந்த சிறுவன் (வீடியோ)